சுலைமான் றாபி-
இலங்கையில் கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற அரச திணைக்களங்களுக்கிடையிலான C பிரிவு உதைபந்தாட்டப் போட்டியில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைமைக் காரியாலய அணிக சிறந்த அணியாக தெரிவு செய்யப்பட்டதனைத் தொடர்ந்து அவ்வணி நாளை (04) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் தாய்லாந்து நோக்கி பயணமாகவுள்ளது.
தாய்லாந்தில் எதிர்வரும் 06ம் திகதி இடம்பெறவுள்ள அரச திணைக்களங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டியில் இலங்கை சார்பாக தமது அணி கலந்து கொள்ளவுள்ளதாக அவ்வணிக்குத் தலைமை தாங்கும் நிந்தவூரைச் சேர்ந்த ஏ.பாசித் ஹுஸ்னி எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
மேலும் கடந்த பெப்ரவரி முதல் ஜூலை வரை இடம்பெற்ற இந்த உதைபந்து சுற்றுத்தொடரில் 24 அரச திணைக்களங்கள் கலந்து கொண்ட போதும், தாய்லாந்து போட்டிகளில் பங்குபற்ற தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைமைக் காரியாலய அணியினரே தகுதி பெற்றுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வணியில் நிந்தவூரிலிருந்து 02 வீரர்களும், ஒலுவிலிலிருந்து 02 வீரர்களும், அட்டாளைச்சேனையிலிருந்து 02 வீரர்களும், இறக்காமத்திலிருந்து 01 வீரரும், ஓட்டமாவடியிலிருந்து 01 வீரரும், காத்தான்குடியிலிருந்து 07 வீரர்களும் விளையாட தகுதி பெற்றுள்ளதோடு , இவ்வீரர்கள் அனைவரும் கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைமைக் காரியாலய அணியினர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை இந்த அணியினர் இலங்கையில் இடம்பெற்ற லீக் போட்டிகள், நொக் அவுட் போட்டிகள் உள்ளிட்ட அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றதன் மூலமே தாய்லாந்தில் இடம்பெறும் உடைந்து போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்துள்ளதாகவும், இதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்து தந்த அமைச்சர் றஊப் ஹக்கீம் மற்றும் அமைச்சின் உயர்அதிகாரிகள் அனைவரிற்கும் தமது அணியினர் நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாக அணியின் தலைவர் ஏ.பாசித் ஹுஸ்னி மேலும் தெரிவித்தார்.