இலங்கைக்குள் நல்லிணக்க பொறிமுறையை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் உரிய கால அவகாசத்தை வழங்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கைக்கு மேலும் கால அவகாசத்தை வழங்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு அறிவித்துள்ளதாக பொதுச் செயலாளர் தன்னிடம் கூறியதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஊடக பிரதானிகளுடன் இன்று முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். இதனிடையே ஐ.நா பொதுச் செயலாளர் கொழும்பில் இன்று முற்பகல் நடைபெற்ற நிரந்த அமைதி மற்றும் பயன்தரும் அபிவிருத்தி தொடர்பான கருத்தரங்கில் உரையாற்றினார்.
போருக்கு பின்னர் இலங்கை அடைந்து வரும் முன்னேற்றங்களை பாராட்ட வேண்டும் என பான் கீ மூன் கூறியுள்ளார். 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், தகவல் சட்டம் ஆகியன நிறைவேற்றப்பட்டமை முக்கியமான விடயங்களாகும்.
புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க எடுக்கும் முயற்சி மற்றும் தேசிய கீதத்தை தமிழில் பாட நடவடிக்கை எடுத்தமை என்பன வரவேற்கப்பட வேண்டிய விடயங்கள் எனவும் பான் கீ மூன் கூறியுள்ளார்.