சுலைமான் றாபி, றபீக் பிர்தௌஸ்-
201 வருடங்கள் தனித்துவமான சேவையாற்றிவரும் இலங்கை அஞ்சல் திணைக்களம் தனது சேவையினை விஸ்தரித்து அதன் மூலம் தங்களது விற்பனை மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மக்களை விழிப்புணர்வூட்டும் நடைபவனி இன்றைய தினம் (03) சனிக்கிழமை நிந்தவூர் அஞ்சல் அலுவலகத்தில் அதன் பிரதம தபாலதிபர் ஏ.எம். ஏ. றசீட் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
நிந்தவூர் அஞ்சல் அலுவலகத்திலிருந்து ஆரம்பமான இந்நடை பவனியானது நிந்தவூர் 2 ம் குறுக்குத் தெரு வீதியினூடாகச் சென்றது. இந்நடை பவனியில் கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மாஅதிபர் திருமதி ஜெயந்தினி திருச்செல்வம், அம்பாறை மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் எம். தம்பிஐயா உள்ளிட்ட அஞ்சல் திணைக்கள உயரதிகாரிகள், அஞ்சல் அதிபர்கள், தபால் சேவகர்கள் கலந்து கொண்டதோடு, அதிதிகளால் மக்களுக்கு அஞ்சல் சேவைகள் தொடர்பான துண்டுப் பிரசுரங்களும் வழங்கி வைக்கப் பட்டன.
இதேவேளை அஞ்சல் திணைக்கள விற்பனை மேம்பாட்டு நிகழ்வுத் திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தங்களது வீட்டில் இருந்தவாறே உள்நாட்டு வெளிநாட்டு தபால் தேவைகள், மின்சாரக் கட்டணப்பட்டியல் கொடுப்பனவுகள், தொலைபேசி கட்டணப்பட்டியல் கொடுப்பனவுகள், ரீலோட் வசதிகளையும் பெற்றுக் கொள்ள முடியும் என நிந்தவூர் அஞ்சல் அலுவலகத்தில் பிரதம தபாலதிபர் ஏ.எம். ஏ. றசீட் தெரிவித்தார்.