காத்தான்குடியில் அமைக்க உத்தேசிக்கப்பட்டிருக்கும் மத்திய பஸ் தரிப்பிடம் தொடர்பிலான காணியை நிச்சயப்படுத்திக்கொள்வதற்கான விஷேட கலந்துரையாடல் 26.07.2016 அன்று காத்தான்குடி நகரசபையில் நடைபெற்றது.
நகரதிட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளர் முபீன் மற்றும் ஜாமியுழ்ழாபிரின் பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் நிர்வாக சபையினரின்கூட்டு வேண்டுகோளின் பேரில் காத்தான்குடி நகரசபை செயலாளர் எம்.எஸ.எம். ஷபீ ஏற்பாடு செய்திருந்தார்.
இவ் விஷேட கலந்துரையாடலில் கிழக்கு மாகாண கௌரவ முதலமைச்சர் அல் ஹாபிஸ் நஸீர் அஹமட் கௌரவ மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் நகர திட்டமிடல் நீர் வழங்கல் இணைப்புச் செயலாளர் முபீன் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல். அஸீஸ் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.எம். சலீம் மற்றும் ஜாமியுழ்ழாபிரின் ஜூம்ஆ பள்ளிவாயல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தை ஆரம்பித்த நகர சபை செயலாளர் பஸ்தரிப்பிட நிலையம் அமைப்பது தொடர்பிலான காணி விடயத்தை விளக்கிக் கூறி இது தொடர்பில் பள்ளிவாயல் நிர்வாகம் சார்பாக கருத்தை தெரிவிக்குமாறு அதன் தலைவரை கேட்டுக்கொண்டனர்.
பள்ளிவாயலின் தலைவர் பொறியியலாளர் தௌபீக் கருத்து தெரிவிக்கையில்:
இக்காணி பள்ளிவாயலுக்கு சொந்தமானது என்றும் தாங்கள் இக் காணியில் பொதுச்சந்தை கட்டவிருப்பதாகவும் கூறினார். இதன்போது கருத்துதெரிவித்த முபீன் தான் நகர சபை தலைவராக இருந்தபோது பெரும் முயற்சி எடுத்து பள்ளிவாயலுடன் பேசி இக்காணியை பஸ் தரிப்பிட நிலையம் அமைப்பதற்கு பெற்றுக்கொண்டதாகவும் பின்னர் நீண்ட முயற்சியினூடாக USAID நிறுவனத்தின் நிதியுதவியில் பஸ் தரிப்பிட நிலையம் அமைப்பதற்கு அடிக்கல் நடவிருந்த வேளையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு இத்திட்டம் தடுக்கப்பட்டதாகவும் பின்னர் குறித்த USAID நிறுவனத்தோடு பேசி பஸ்தரிப்பு நிலைய காணிக்கு சுற்றுவேலி அமைக்கப்பட்டதையும் கூறி வேலை ஆரம்பிக்கப்பட்டு இரண்டு பக்கமும் மலசலகூட கட்டிடம் காணப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் தான் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உடன் தற்போது இப் பஸ்தரிப்பிட நிலையம் அமைப்பதற்கான நிதியை ஒதுக்கித்தருமாறு கேட்டபோது அவர் காணியை அடையாளப்படுத்துமாறு கூறியுள்ளதாக கூறினார். பள்ளிவாயல் மார்க்கட் கட்டுவதாக இருந்தால் பஸ் நிலையத்திற்கும் மார்க்கட்டுக்கும் நிதியினை தலைவர் ரவூப் ஹக்கீம் இடம் இருந்து பெற்றுத்தர முடியும் என முபீன் கூறியதோடு கௌரவ முதலமைச்சர் ஏறாவூரில் பலகோடி ரூபாய் செலவில் சந்தை அமைக்க தலைவரின் அமைச்சிலிருந்து நிதி ஒதுக்கீடை பெற்றுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
இதன் போது கருத்துத்தெரிவித்த கௌரவ முதலமைச்சர் ஏறாவூர் பொதுச்சந்தையை அமைப்பதற்கு தான் பள்ளிவாயலுடன் பேசி 99 வருட குத்தகைக்கு பள்ளிவாயல் காணியை பெற்றிருப்பதாகவும் கிடைக்கும் வருமானத்தில் 50 வீதம் பள்ளிக்கு வழங்குவதோடு நகர சபைக்கு 50 வீதம் வருமானம் கிடைக்கக் கூடிய வகையில் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் அந்த அமைப்பில் 99 வருட குத்தகைக்கு நீங்கள் ஏன் இக் காணியை பஸ் தரிப்பிடம் அமைக்க வழங்கக் கூடாது என்று கூறியதுடன் பஸ் தரிப்பிடம் அமைக்கப்பட்டாலும் குத்தகைக்கு ஒப்பந்தத்தின்படி காணி பள்ளிக்கே சொந்தமாக இருக்கும் என்று தெளிவுபடுத்தினார்.
இதனை மறுத்த பள்ளிவாயல் தலைவர் தௌபீக் தாங்களே சந்தையையும் பஸ் தரிப்பிட நிலையத்தையும் அமைக்கப்போவதாக கூறினார். பங்குடமைக்கு எங்களுக்கு விருப்பமில்லை என்றார். இதன்போது குறுக்கிட்ட கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் சட்டப்படி பொதுச் சந்தை உங்களால் அமைக்கவோ நடத்தவோ முடியாது எனக்கூறியதுடன் எதிர்காலத்தில் சிக்கல் வரலாம் என்றும் சொன்னார்.
இதன் போது பதலளித்த நிர்வாக பள்ளிவாயல் தலைவர் தாங்கள் காசு திரட்டி பொதுச் சந்தையும் பஸ்தரிப்பிட நிலையமும் அமைப்போம் என்றதுடன் நகர சபைக்கு வருமானம் தேவையென்றால் வேறு திட்டங்களை செய்யுங்கள் என்றார்.
இதன்போது பதிலளித்த முபீன் நீங்கள் பள்ளி நடாத்துவதும் நாங்கள் பஸ்தரிப்பு நிலையம் அமைக்க முயற்சிப்பதும் ஊருக்காகவே. நீங்கள் காணியைத் தந்தால் நாங்கள் பல்வேறு வசதிகளுடன் கூடிய நவீன பஸ்தரிப்பு நிலையத்தை அமைத்துத் தருவோம். நீங்கள் எப்படி பஸ் தரிப்பு நிலையத்தை அமைக்கப்போவதாக ஒரு பள்ளிவாயல் கூற முடியும் என கேட்டார். இதன் போது தாங்கள் மார்க்கட்டும் பஸ் தரிப்பு நிலையத்திற்கும் திட்டம் தயாரிக்கப்போவதாக பள்ளித் தலைவர் கூறினார். இதற்கு பதிலளித்த முபீன் நீங்கள் தனியே திட்டம் தயாரிக்க முடியாது. நகர சபையுடன் இணைந்து இத்திட்டத்தை தயாரியுங்கள் என்று கோறினார்.
இதனை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் நகர சபையும் பள்ளிவாயலும் இணைந்த வகையில் திட்டத்தை தயாரிக்குமாறும் தொடர்ந்து இதனை பரிசீலிப்பதாகவும் கூறி கூட்டத்தை முடித்தார்.