துமிந்தவுக்கு மரண தண்டனை - மஹிந்தவுக்கு மகிழ்ச்சி

எம்.ஐ.முபாறக்-
கொலைகள், ஆட்கடத்தல்கள்,கப்பம், நிதி மோசடி,அதிகார துஷ்பிரயோகம் மற்றும் போதை பொருள் வர்த்தகம் போன்ற ஏகப்பட்ட சட்டவிரோத செயற்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டதுதான் மஹிந்தவின் ஆட்சி.யுத்த வெற்றியை வைத்துக் கொண்டு எதையும் செய்யலாம்;எல்லாவிதமான அநியாயங்களையும் நியாயப்படுத்தலாம் என்ற பிழையான நிலைப்பாட்டில்தான் அந்த சர்வாதிகார அரசை நடத்திக்கொண்டு சென்றார் மஹிந்த.

தனது விசுவாசிகள் எதைச் செய்தாலும் மஹிந்த கண்டுகொள்ளவேமாட்டார்.அவர்களின் உதவி அவருக்குத் தேவையாக இருந்ததால் அவர்களின் அட்டூழியங்கள் அனைத்துக்கும் இடங்கொடுத்தே வந்தார்.

தனது அரசியலுக்கு சவால் விடுக்கும் அனைவரையும் ஒளித்துக் கட்டுவதற்கு மஹிந்த இந்தக் காடையர்களின் உதவியைப் பெற்றார்.இதற்குப் பரிகாரமாகத்தான் அந்தக் காடையர்களின் அட்டூழியங்கள் அனைத்தையும் கண்டும் காணாமலும் இருந்தார்.

ஆயுள்முழுக்க தனது ஆட்சியே இருக்கப் போகின்றது என்று மஹிந்த தப்புக்கு கனக்குப் போட்டமைதான் இந்த அநியாயங்கள் அனைத்தும் இடம்பெற்றமைக்குக் காரணம்.

யுத்தம் என்ற போர்வையில் அப்பாவித்த தமிழர்கள் கொல்லப்பட்டதுபோக அந்தக் கொலைகளுக்கு எதிராக எழுந்த குரல்களும் நசுக்கப்பட்டன.நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவிராஜ்,மகேஸ்வரன் மற்றும் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க உள்ளிட்ட பலர் இவ்வாரு கொல்லப்பட்டனர். மற்றுமோர் ஊடகவியலாளர் ஏக்நலிகொட கடத்தப்பட்டார்.ஆனால்,அவரும் உயிருடன் இருப்பது சந்தேகம்தான்.

இவ்வாறு மஹிந்தவின் ஆட்சிக்கு சவாலாக இருந்த அத்தனை பேரும் கொல்லப்பட்டனர்.இந்தக் கொலைகளில் இருந்து மாறுபட்டதுதான் பாரத லக்ஷ்மணின் கொலை.ஒரே கட்சிக்குள் எழுந்த அதிகார போட்டியின் விளைவாகத்தான் இந்தக் கொலை இடம்பெற்றது.

ஒருகாலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டையாகத் திகழ்ந்தது கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவை தேர்தல் தொகுதி.அதை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கோட்டையாக மாற்றும்முயற்சியில் வெற்றி கொண்டவர்தான் இந்த பாரத லக்ஷ்மணன்.மஹிந்தவின் நெருங்கிய நண்பனும்கூட.இவருக்கு வீண் பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் அந்தத்தொகுதிக்குள் துமிந்த சில்வா புகுத்தப்பட்டார்.

பாரத லக்ஷ்மன் சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர்-அக்கட்சியின் தொழில் சங்க ஆலோசகர் என்பதற்கு மேலாக மஹிந்தவின் நண்பனாகத் திகழ்ந்தார் என்பதுதான் உண்மை.ஆனால்,துமிந்த சில்வாவோ முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபே ராஜபக்சவின் செல்லப் பிள்ளையாவார்.கோட்டாவை அப்பா என்றும் அவரது மனைவியை அம்மா என்றும் செல்லமாக அழைத்து வருபவர்.அவர்களின் சொந்தப்பிள்ளை போன்றே துமிந்த பழகுகிறார்.

அநேகமான விடயங்களில் மஹிந்தவை மீறிச் செயற்பட்டு வரும் கோட்டா தனது செல்லப் பிள்ளையான துமிந்தவை கொலன்னாவை தேர்தல் தொகுதிக்குள் நுழைத்தார்.இதனால் பாரத லக்ஷ்மணனுக்கும் துமிந்தவுக்கும் இடையில் பணிப் போர் தொடங்கியது.கொலன்னாவையின் அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்ற போராட்டம் வெடித்தது.இதன் உச்சக்கட்டமாக 2011 ஆம் ஆண்டு கொழும்பு மாவட்ட உள்ளூராட்சி தேர்தல் தினத்தன்று கொலன்னாவையில் வைத்து பாரத லக்ஷ்மனன் துமிந்தவால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த இருவர் தலைமையிலான குழுக்கள் எதிர் எதிரே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதில் பாரத அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார்.துமிந்த பலத்த காயங்களுக்கு உள்ளாகி சிங்கப்பூரில் சிகிச்சை செய்து உயிர் பிழைத்தார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து மஹிந்த-பாரத லக்ஷ்மனன் உறவு கேள்விக்குறியாக்கப்பட்டது.தனது சகோதரனின் விருப்பத்துக்கு அடிபணிந்து தனது நெருங்கிய நண்பன் பாரதவை மஹிந்த அநியாயமாகப் பலிகொடுத்துவிட்டார் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.நட்பை மதிக்கும் வகையில் குற்றவாளிக்குத் தண்டனையேனும் மஹிந்த வழங்குவாரா என்ற கேள்வியும் முன்விக்கப்பட்டது.ஆனால்,அதுவும்நடக்கவில்லை.

மஹிந்தவின் மகன் நாமலையும் பாரதவின் மகள் ஹிருனிகாவையும் திருமணம் முடித்து வைத்து இருவரும் சம்பந்திகளாக ஆகுவதற்குக்கூட ஏற்பாடுகள் நடந்தன.ஆனால்,பாரத கொல்லப்பட்டதால் அந்த முடிவும் மாற்றப்பட்டது.

துமிந்தவைக் காப்பாற்றுவதற்கு கோட்டா அதிக சிரமம் எடுத்துக்கொண்டார்.அவரை சிங்கப்பூர் அனுப்பி வைத்து விசேட சிகிச்சையைப் பெற்றுக் கொடுப்பதற்கான உதவிகளையும் திரைமறைவில் இருந்து செய்தார்.ஆனால்,மஹிந்தவால் இவற்றையெல்லாம் தடுக்க முடியவில்லை.துமிந்தவுக்கு எதிராக மஹிந்தவால் நடவடிக்கை எடுக்க முடியாதவாறு கோட்டா பிடிவாதமாக நின்றார்.அந்த விடயத்தில் மஹிந்த தோற்றுப் போனார்.

இருந்தாலும்.நன்பனின் இழப்பு தொடர்பான கவலை மஹிந்தவுக்கு இருக்கவே செய்தது.துமிந்த சிகிச்சை முடிந்து நாடு திரும்பியபோதும்கூட அவருக்கு எதிராக மஹிந்தவால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.கோட்டா தொடர்ந்தும் துமிந்தவுக்கு பாதுகாப்பு அரணாக நின்றார்.

நடந்த சம்பவம் எதுவும் தனக்கு நினைவில்லை என்றொரு நாடகத்தை துமிந்த நடத்தினார்.எல்லா விடயங்களிலும் சுய நினைவுள்ள மனிதராகவே துமிந்த செயற்பட்டார்.நாடாளுமன்ற அமர்வுகளில்கூட கலந்துகொண்டார். ஆனால்,பாவம் பாரதவின் கொலைச் சம்பவம் மாத்திரம் அவருக்கு நினைவில்லை. இந்த நிலையில் பாரதவின் கொலைக்காக அவரது குடும்பத்துக்கு ஏதாவது நட்டஈடு வழங்க வேண்டும் என்பதற்காக பாரதவின் மகள் ஹிருனிகாவை அரசியலுக்கு இழுத்து வந்து மேல் மாகாண சபை உறுப்பினராக்கினார் மஹிந்த.விரும்பியோ விரும்பாமலோ மஹிந்தவுடன் இணையும் நிலைக்கு ஹிருணிகா தள்ளப்பட்டார்.

இருந்தாலும்,தனது தந்தையின் கொலையாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற வெறி ஹிருனிக்காவுக்குள் இருக்கவே செய்தது.கொலையாளிக்கு தண்டனை வழங்குவதில் இருந்து தவிர்ந்துகொள்வதற்காகவே தனக்கு அரசியல் அதிகாரம் லஞ்சமாகத் வழங்கப்பட்டுள்ளது என்பதையும் ஹிருணிகா உணர்ந்தே இருந்தார்.

இருந்தும்,அதிகார வர்க்கத்தைத் தாண்டி தன்னால் எதுவும் செய்ய முடியாது என்பதால் உரிய சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து பொறுமையாக இருந்தார் ஹிருணிகா.இந்த நிலையில்தான் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலும் வந்தது.மஹிந்தவை விட்டு மைத்திரி பக்கம் தாவினார்.மஹிந்தவின் ஆட்சியையும் கவிழ்ந்தது.

ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து பாரதவின் கொலை வழக்கு சரியானமுறையில் விசாரிக்கப்பட்டதால் துமிந்த சில்வா உண்மையான கொலையாளியாக அடையாளங் காணப்பட்டு இன்று அவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தணடனை வழங்கியுள்ளது.

இந்தத் தீர்ப்பு மஹிந்தவுக்கு உள்ளார மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது என்றே அவரைச் சூழவுள்ள வட்டாரம் தெரிவிக்கின்றது.பாரத கொல்லப்பட்டது முதல் மஹிந்த துமிந்தவை வெறுத்தே இருந்தார்.அவரது சகோதரர் கோட்டாவின் நெறுக்குதலால் துமிந்தவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியாமல் போனது.இப்போது துமிந்தவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதால் மஹிந்த மகிழ்ச்சியடைந்துள்ளர்.

ஆனால்,கோட்டாவோ இந்தத் தீர்ப்பால் ரொம்பவும் உடைந்துபோயுள்ளார்.கண்ணீர் சிந்தியதாகவும் தகவல்.எது எப்படியோ நல்லாட்சி அரசின் மானம் இந்தத் தீர்ப்பு மூலம் காப்பாற்றப்பட்டுள்ளது சொல்ல வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -