எம்.வை.அமீர்-
அநேக குடும்பங்களில் இளைஞர்கள், அந்த குடும்பங்களுக்கு சுமையாக இருக்கின்றனர். அவ்வாறான இளைஞர்களை குறித்த குடும்பத்தை சுமப்பவர்களாக மாற்றியமைப்பதே நாபீர் பௌண்டேசனின் இலக்கு என்று அவ் அமைப்பின் ஸ்தாபகர் உதுமாங்கண்டு நாபீர் தெரிவித்தார்.
நாபீர் பௌண்டேசனின் பணிகளை விரிவாக்கும் திட்டத்தின்கீழ் நிந்தவூர் முதலாம் பிரிவில் ஏ.ஆர்.நிதாஷ் அகமட் தலைமையில் கிளை ஒன்றை 2016-09-11 ஆம் திகதி அங்குராப்பணம் செய்து வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னாள் இளைஞர் பாராளமன்ற உறுப்பினரும் நாபீர் பௌண்டேசனின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளருமான தானிஷ் றஹ்மதுள்ளாஹ்வின் வழிநடத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய நாபீர், இளைஞர்கள் விடயத்தில் சரியான வழிநடத்தல்கள் இல்லாததன் காரணமாகவே அநேக இளைஞர்கள் தவறான வழிக்குச் செல்வதாகவும் நாபீர் பௌண்டேசனின் இலக்கு இளைஞர்களின் திறமையைக் கண்டு அல்லது அவர்களுக்கு பயிற்றுவித்து அவர்கள் சார்ந்த குடும்பத்துக்கும் நாட்டுக்கும் பயன்படக்கூடியவர்களாக அவர்களை மாற்றுவதே என்றும் தெரிவித்தார்.
நமது நாட்டிலும் ஏன் உலகம் முழுவதும் சிறந்த பணியாளர்களுக்கு இடமிருப்பதாகவும் அந்த சிறப்பானவர்களாக நாங்களும் எங்களை உருவாக்கிக்கொள்ள முடியும் என்ற திடசங்கற்பம் கொண்டு முயற்சித்தால் முடியாதது ஒன்றுமில்லை என்றும் தெரிவித்தார்.
நாபீர் பௌண்டேசன், பிரதேசமட்டத்தில் அதன்கிளைகளை ஆரம்பித்து வருவதாகவும் அதனூடாக பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் குறித்த திட்டத்தில் இணைந்துள்ள இளைஞர் நன்மையடைவது உறுதி என்றும் தெரிவித்தார்.
நிகழ்வின்போது ஆய்வாளர் ஜலீல் ஜீ உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்.