எம்.ஜே.எம்.சஜீத்-
கடந்த 11ஆம் திகதி ஏறாவூரில் இடம்பெற்ற தாய், மகள் இரட்டைக்கொலைச் சம்பவமானது அப்பிரதேச மக்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் 63ஆவது அமர்வு இன்று (22) தவிசாளர் சந்திரதாச கலபெதி தலைமையில் நடைபெற்றது. இதன்போது மாகாண சபை உறுப்பினர் மஞ்சுள பெர்ணான்டோவினால் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் ஏறாவூர் பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற இரட்டைக்கொலைச் சம்பவமானது அப்பிரதேச மக்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துயரச் சம்பவத்திலிருந்து அம்மக்கள் இன்னும் மீளவில்லை
குறிப்பாக கொலையுடன் சமமந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் பக்கச்சார்பின்றி விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக்கோரி ஒரு நீண்ட சங்கிலிப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் அப்பிரதேசத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலை காணப்படுகிறது.
இக்கொலைச் சம்பவம் தொடர்பாக ஊடகங்கள் வாயிலாக குறிப்பாக தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் என்பன செய்திகள் வெளியிட்டுள்ளன.
இச்சம்பவத்துடன் தொடர்புபட்டவாகளை சட்டத்தின் முன் நிறுத்துவதுடன் குறித்த கொலைச் சம்பவத்தை கிழக்கு மாகாண சபை கண்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இதற்கினங்க சபைக்கு தலைமைதாங்கிய தவிசாளர் இப்படுகொலையை ஏகமனதாக கிழக்கு மாகாண சபை கண்டனம் செய்கிறது என சபையில் அறிவித்தார்.