எம்.எம்.மின்ஹாஜ்-
வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வர னும் பொது எதிரணியின் முக்கியஸ்தர்களுள் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவும் மைத்துனர்களாவர். இவர்கள் இருவரும் இரவில் கொழும் பில் வைத்து கோப்பி அருந்தி விட்டு அரசாங்கத்திற்கு எதிராக தீட்டிய திட்டமே 'எழுக தமிழ்' பேரணியாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய சதித்திட்டம் தீட்டப்படுகின்றது. இதன்பிரகாரம் தெற்கில் விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பிலவும் வடக்கில் சி.வி.விக்கினேஸ்வரனும் குறித்த சதியின் முக்கிய பங்காளர்களாக உள்ளனர். மேலும் இனவாதத்தின் ஊடாக ஆட்சியை கவிழ்க்க இவர்கள் கூட்டு சேர்ந்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
பிட்டகோட்டேயில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு நளின் பண்டார எம்.பி மேலும் குறிப்பிடுகையில்,
புதிய அரசியலமைப்பினை தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் மிகவும் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் இதன்போது பௌத்த தர்மத்தை குழி தோண்டி புதைக்கும் வேலைகளை அரசாங்கம் முன்னெடுப்பதாக போலியான குற்றச்சாட்டை விமல் வீரவன்ஸ முன்வைத்து வருகின்றார்.
இது தொடர்பில் அஸ்கிரிய மகாநாயக்க தேரரர் கூட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அப்படியான செயற்பாடுகளை முன்னெடுக்க மாட்டார்கள் என விமல் வீரவன்ஸவிடம் கூறியுள்ளார். அஸ்கிரிய தேரரின் கருத்து விமல் வீரவன்ஸவிற்கு பாரிய இழிவாகும்.
எனவே தெற்கில் இனவாதத்தை தூண்டி விடுவதற்கு விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் செயற்பட்டு வருகின்றனர். அனைத்து இனத்தவர்களிலும் இனவாதிகள் உள்ளனர். சிங்களவர்களிலும் இனவாதிகள் உள்ளனர். அதேபோன்று தமிழர்களிலும் இனவாதிகள் உள்ளனர். எனினும் பெரும்பாலானவர்கள் இனவாதத்திற்கு எதிரானவர்களாகும். இதனை எம்மால் நிறுத்திவிட முடியாது. இதன்பிரகாரம் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனின் எழுக தமிழ் பேரணியின் போதான உரையை குறிப்பிட முடியும்.
இதன்பிரகாரம் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனும் பொது எதிரணியின் முக்கியஸ்தர்களுள் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவும் மைத்துனர்களாவர். எனவே இவர்கள் இருவரும் இரவில் கொழும்பில் வைத்து கோப்பி அருந்தி அரசாங்கத்திற்கு எதிராக தீட்டிய திட்டமாகதான் 'எழுக தமிழ் 'பேரணியை கருதமுடியும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய சதித்திட்டம் தீட்டப்படுகின்றது. இதன்பிரகாரம் தெற்கில் விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பிலவும் வடக்கில் சி.வி.விக்கினேஸ்வரனும் குறித்த சதியின் முக்கிய பங்காளர்களாக உள்ளனர். இவர்களின் ஊடாக இனவாதத்தை தூண்டிவிட்டு ஆட்சியை கவிழ்ப்பதே மஹிந்த ராஜபக்ஷவின் திட்டமாகும். அதற்கான காய்நகர்த்தலே குறித்த மூவரினாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எழுக தமிழ் பேரணிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் பெரும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். அதேபோன்று எழுக தமிழ் அன்றி இலங்கையர்களாக எழுக என்று அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். ஆகவே இவர்களும் தமிழர்களின் தலைவர்கள்தான் . இருப்பினும் அவர்கள் இனவாதிகள் அல்லர்.
அஜித் நிவாட் கப்ரால்
இலங்கை மத்திய வங்கியில் கடந்த பத்து ஆண்டு காலமாக அஜித் நிவாட் கப்ரால் பாரிய மோசடிகளை முன்னெடுத்து வந்துள்ளார். அர்ஜூன மகேந்திரன் மீது இதுவரைக்கும் குற்றம் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் அஜித் நிவாட் கப்ராலின் மோசடிகளை உறுதிப்படுத்த முடியும். எனவே இது தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இது தொடர்பில் 13 குற்றச்சாட்டுகள் குறித்து அஜித் நிவாட் கப்ராலை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்களான நாம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மகஜரொன்றை கையளித்துள்ளோம். இது தொடர்பிலான உண்மைகள் விரைவில் வெளிவரும். இருந்தபோதிலும் பொது எதிரணியினர் அர்ஜூன மகேந்திரன் மீது குற்றச்சாட்டை வைத்து அஜித் நிவாட் கப்ராலின் மோசடிகளை மூடி மறைக்கின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது நாட்டின் வருமானம் குறைவாகதான் இருந்தது. ஆனாலும் கடன் அதிகளவில் பெறப்பட்டன. இறைவரி மற்றும் மதுவரி திணைக்களத்தின் மூலம் உரிய வகையில் வருமானம் பெறப்படவில்லை. இதன்காரணமாகவே நாடு இவ்வாறான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. இறைவரி மற்றும் மதுவரி திணைக்களத்தின் வருமானத்தை உரிய முறையில் பெற்றாலே கடன் பெறாமல் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்திருக்க முடியும்.
இதேவேளை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பொருளாதார துறையில் பாரிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார் என்றார்.
VK