பைஷல் இஸ்மாயில்-
சம்மாந்துறை வலயத்தில் உள்ள சுமார் 1000 ஆசிரியர்களுக்கு சர்வதேச ரீதியில் நவீன முறையில் பயிற்சிகளை வழங்குவதற்காக வேண்டி சம்மாந்துறை வலய ஆசிரியர் பயிற்சி நிலையம் ஒன்றை அமைப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாகவும் அதற்கான ஆரம்பப் பணிகளை நேற்று முன்தினம் சனிக்கிழமை ஆரம்பித்து வைத்துள்ளதாகவும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கினைப்பு குழு தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர் இன்று (03) தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவர் நகர திட்டமிடல் நீர்வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீமின் ஆலோசனையின் பேரில் கல்வி அமைச்சினால் இந்த ஆசிரியர் பயிற்சி நிலையம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வாசிரியர் பயிற்சி நிலைய கட்டிட தொகுதிதை அமைப்பதற்கு 03 கோடி 30 லட்சம் (33மில்லியன்) ரூபா நிதி ஒதுக்கப்பட்டு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் மிகப்பெரிய நவீன தரத்தில் சகல உட்கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட ஒரு வளாகமாக அமைய பெறவுள்ளதாகவும் கூறினார்.
இந்த ஆசிரியர் பயிற்சி நிலையத்தின் மூலம் மாணவர்களின் எதிர்கால கல்வி மேம்பாட்டுக்கு உதவ இது உந்து சக்தியான இடமாக இப்பயிற்சி நிலையம் திகழும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றார்.