யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் படுகொலைகள் என கருத வேண்டிய சாட்சியங்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. போலிஸ் காவலரணில் நிறுத்தாமல் செல்வோரை துரத்தி பிடிக்கவே, போலீசாருக்கு அதி நவீன 1000சீசீ மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. காவலரணில் நிற்காமல் வேகமாக போனவர்கள் துப்பாக்கி பிரயோகம் செய்துக்கொண்டு போனதாக தகவல் இல்லை. இந்நிலையில் ஏன் சுட வேண்டும் என தெரியவில்லை. ஆகவே அவர்களை துரத்தி சென்று வழிமறித்து பிடிக்க வேண்டும். அப்படியே சுட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் முதலில் ஆகாயத்தை நோக்கியும், பின்னர் முழந்தாளுக்கு கீழேயும் சுட வேண்டும் என்ற விதிகள் சிறு மூன்றாம் வகுப்பு குழந்தைக்கும் தெரியும். இவை பயிற்சி பெற்ற இந்த போலிசாருக்கு தெரியவில்லை.
சில வாரங்களுக்கு முன் மலையகத்தில் புசல்லாவையில் ஒரு இளைஞர் போலிஸ் காவலில் இருந்தபோது மரணமடைந்தார். இப்போது யாழ்ப்பாணத்தில் இந்த இரண்டு மரணங்கள் நிகழ்ந்துள்ளன. சில நேற்று முதல் நாள் வரை வரை இந்நாட்டில் விஜயம் செய்திருந்த ஐநா சபையின் சிறுபான்மை விவகார அறிக்கையாளர் ரீடா ஐஷக் இங்கே இருக்கும் போதே இந்த சம்பவம் நிகழ்ந்திருந்தால் இன்னமும் நிலைமை கேவலமாக இருந்து இருக்கும்.
எங்களுக்கு இராணுவம் வேண்டாம். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் சிவில் போலிஸ் எங்கள் நண்பர்கள் என்று இன்று சொல்ல தொடங்கி இருக்கும் யாழ்ப்பாணத்து மக்களை மீண்டும் போலிஸ் மீது அவநம்பிக்கை கொள்ள வைக்கும் சம்பவங்கள் இவை. போலிஸ் துறை தொடர்பில் புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்த, குற்றம் இளைத்தோர் மீது கடும் நடவடிக்கைகள் சுயாதீன போலிஸ் ஆணைக்குழு எடுக்க வேண்டும் என கொழும்பு கொட்டாஞ்சேனையில் இன்று இடம்பெற்ற தனது அமைச்சின் “அரசசேவை உங்களுக்காக” என்ற தொனிப்பொருளிலான நடமாடும் சேவையில் கலந்துக்கொண்ட தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.