ஒற்றையாட்சி - சமஷ்ட்டி
பாகம் 12 இல் பிரித்தானிய பாராளுமன்ற வரலாறு தொடர்பாக பார்த்திருந்தோம். இத்தொடரில் இலங்கைப் பாராளுமன்ற வரலாறு தொடர்பாக ஆராய்வதற்கே எண்ணியிருந்தேன் . இடையில் சில வாரங்கள் இத்தொடர் பிந்தி விட்டதாலும் அதே நேரம் புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கான அரசின் முதலாவது அறிக்கை பெரும்பாலும் அடுத்த மாதம் வெளியிடப்பட இருப்பதாலும் ' இலங்கைப் பாராளுமன்றத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றை பிந்திய தொடர்களுக்கு ஒத்திவைத்துவிட்டு நேரடியாக அதிகாரப் பகிர்வு தொடர்பான விடயங்களுக்கு வர விரும்புகிறேன் . ஏனெனில் அரசின் முதல் அறிக்கை வெளிவரும்போது அதில் எவை முஸ்லிம்களுக்கு சாதகமானவை அல்லது பாதகமில்லாதவை, எவை பாதகமானவை என்பதை கட்சிகள் சொல்வதில் தங்கியிராமல் பொதுமக்கள் சுயமாக புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்.
அப்பொழுதுதான் அவற்றில் உள்ள பாதகங்களுக்கெதிராக, கட்சிகளுக்கும் அரசிற்கும் பொதுமக்கள் அழுத்தம் கொடுக்கக் கூடியதாக இருக்கும். அதே நேரம் இந்தக் கட்சிகள் அரசியலமைப்புச் சபையில் அங்கத்தவர்களாக இருந்து உங்கள் உரிமைகளை/ நலன்களை எவ்வளவு தூரம் பாதுகாத்திருக்கின்றார்கள்; என்பது தொடர்பாக நீங்களே சுயமதிப்பீட்டை செய்யக்கூடியதாக இருக்கும். எனவே எதிர்வரும் தொடர்களை ஊன்றிப் படியுங்கள் . ஒன்றிற்குப் பலதடவை மீண்டும் மீண்டும் வாசித்து முடிந்தால் குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளுங்கள் . அறிக்கை வெளிவந்ததும் ஒப்பிட்டுப் பாருங்கள் .
முகநூல்களில், வட்ஸ்அப் களில் அடுத்த ஒருசில மாதங்களுக்கு ஏனைய விடயங்களைவிட இந்த அதிகாரப்பகிர்வு, அரசியலமைப்பு மாற்றம் போன்றவற்றிற்கு முன்னுரிமை கொடுங்கள் . அவ்வாறு நீங்கள் சிலாகிக்கும்போது சமூகத்தில் அதிக விளிப்புணர்வு ஏற்படும். அதே நேரம் சமூகத்தில் இவ்விடங்களில் எங்கெங்கு சந்தேகங்கள், தெளிவின்மை இருக்கின்றது; என்பதை நாமும் புரிந்துகொண்டு அடுத்தடுத்த ஆக்கங்களில் அவை தொடர்பாகவும் கவனம் செலுத்த முடியும்.
இது படித்தவர்களுக்குரிய விடயம், நமக்கு இல்லை; என்று சிலர் அக்கறையில்லாமல் இருக்கலாம் .தயவு செய்து அவ்வாறு இருக்காதீர்கள். விடயங்கள் பிழைத்துவிட்டால் பாதிக்கப்படுவது படித்தவர்கள் மாத்திரமல்ல , பாமரர்களும்தான். நம் எல்லோரினதும் எதிர்கால சந்ததியினரும்தான். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் . எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக முடிந்தளவு இலகுபடுத்தித் தரப்படுகின்றது .
Nature of the State
(அரசின் தன்மை)
அதிகாரப்பகிர்வோடு சம்மந்தப்பட்ட ஓர் பிரதான அம்சம்தான் ' அரசின் தன்மை' என்பதாகும் . ( இங்கு பாவிக்கப்படுகின்ற தமிழ்ப் பதங்கள் உரிய கலைச்சொற்களில் இருந்து சிலவேளை வேறுபடலாம் , அதற்காகவே உரிய ஆங்கிலப் பதமும் சேர்த்து தரப்படுகின்றது )
அரசின் தன்மையை இரண்டு வகையாக குறிப்பிடலாம் .
1) form ( வடிவம்)
2) substance ( விடயதானம் அல்லது உள்ளடக்கம் )
Form- வடிவம்
இது மூன்று விதமாக குறிப்பிடப் படலாம் .
1) ஒற்றையாட்சி
2) சமஷ்ட்டி
3) இந்த இரண்டு பதங்களுமில்லாமல், இரண்டிற்கும் பொருந்தக்கூடிய பொதுவான வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டு குறிப்பிடுதல்.
அதாவது, இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடாகும் ( தற்போது இருப்பதுபோல) அல்லது இலங்கை ஒரு சமஷ்ட்டி நாடாகும் ; என்று வெளிப்படையாக குறிப்பிடாமல் " இலங்கை ஐக்கியப்பட்ட பிரிக்க முடியாத ஒரு நாடாகும் , ..... " சிலவேளை மேலதிகமாக " இந்நாட்டில் அதிகாரங்கள் மத்திக்கும் மாகாணங்களுக்கும் பகிர்ந்தளிக்கப் பட்டிருக்கும் ". .... என்றும் வரலாம். அல்லது இவற்றிற்கு சமானமான வசனங்கள் வரலாம் .
ஆங்கிலத்தில் , "Srilanka is a united undivided/ indivisible country......where powers of Government shall be shared between the Centre and the provinces...." என்று வரலாம்.
இவ்வாறு வந்தால் அது ஒற்றையாட்சிக்கும் சமஷ்ட்டிக்கும் பொருந்துவதால், இலங்கை ஒற்றையாட்சி நாடா அல்லது சமஷ்ட்டி ஆட்சி நாடா என்பதைத் தீர்மானிப்பது இரண்டாவது காரணியான substance ( விடயதானம் அல்லது உள்ளடக்கம்) ஆகும். இதனை பின்னர் விரிவாகப் பார்ப்போம். இவ்வாறு இரண்டிற்கும் இடைப்பட்ட வசனத்தைப் பாவிப்பதன் மூலம் ' நாம் சமஷ்ட்டி வழங்கவில்லை அதே நேரம் நாடு பிரிபட முடியாதது என்று சொல்லியிருக்கின்றோம்,' என்று கூறிக்கொண்டு விடயதானங்களுக்கூடாக சமஷ்ட்டியை வழங்குவதற்கு ஏதுவாக இருக்கும். எனவே, நாம் உசாராக இருக்க வேண்டும்.
ஒற்றை ஆட்சி என்றால் என்ன?
ஒற்றையாட்சித் தத்துவம் என்பது, மத்திய அரசாங்கம் மாத்திரமே முழுமையான அதிகாரமுள்ள அரசாங்கமாக இருக்கும். ஏனைய மாகாண அல்லது பிராந்திய அரசாங்கங்கள் மத்திய அரசுக்குக் கீழான, தேவைப்பட்டால் மத்திய அரசால் கட்டுப்படுத்தக் கூடியவையாக இருக்கும். The Centre will be supreme and the provinces will be subordinate to the Centre. Parliament shall not recognize any competing legislative body. இதன் விளைவு மத்திய அரசாங்கம், தான் மாகாணங்களுக்கு வழங்கிய அதிகாரங்களை எதுவித சிரமமுமின்றி மாற்ற அல்லது மீளப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். The Centre will unilaterally be able to withdraw the powers devolved with the same ease with which they were given.
( சிலர் 2/3 பெரும்பான்மை தேவை என்று யோசிக்கலாம். அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இருக்கின்றதா இல்லையா என்பது இங்கு கேள்வி அல்ல, பாராளுமன்றத்திற்கு சுயமாக, வழங்கிய அதிகாரங்களை மீளப்பெற சக்தி இருக்கின்றது. என்பதுதான் முக்கியம். பாராளுமன்ற அதிகாரத்தைப் பொறுத்தவரை procedural limitation and substantive limitation என்ற இரண்டு விடயங்கள் இருக்கின்றன. அது அரசியலமைப்புச் சட்டம் மீயுயர் தன்மையுடையதா? அல்லது பாராளுமன்றம் மீயுயர் தன்மையுடையதா ? என்பதோடு தொடர்பு பட்டது. அது இங்கு அவசியமில்லை.)
அதே நேரம் ஒற்றையாட்சித் தத்துவத்தின் கீழ் பொதுவாக சட்டவாக்க மற்றும் நிறைவேற்று அதிகாரங்களே பகிர்ந்தளிக்கப்படும். நீதித்துறை அதிகாரம் பகிர்ந்தளிக்கப் படுவதில்லை.
சமஷ்டி என்றால் என்ன?
சுருங்கக் கூறின், பிராந்தியங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை அவற்றின் சம்மதமின்றி மத்திய அரசாங்கம் மீளப்பெற்றுக் கொள்ள முடியாத தன்மைதான் சமஷ்டியாகும். இங்கு மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கமும் சமாந்தர அதிகாரங்களைக் கொண்டதாகும் . ஒன்றிற்கு ஒன்று கீழ்பட்டதல்ல. The centre and the province ( periphery) are co- equal and supreme within their areas of authority. சில அரசியலமைப்புச் சட்ட நிபுணர்கள் 'supreme' என்ற சொல்லுக்குப் பதிலாக 'sovereign' என்ற சொல்லைப் பாவிக்கின்றனர். அந்தளவு, மத்தியும் மாகாணமும் தமது அதிகார எல்லைக்குள் அடுத்தவர் கையடிக்க முடியாத அளவு அதிகாரத்தைக் கொண்டதாகும் . அதே நேரம் சமஷ்டி தத்துவத்தின்கீழ், சட்டவாக்க, நிறைவேற்று அதிகாரத்துடன் பொதுவாக நீதித்துறை அதிகாரமும் வழங்கப்படும். சமஷ்டியின் கீழ் அதிகாரம் வழங்கப்படும்போது " அதிகாரப் பிரிப்பு, ( division of power) என்றும் ஒற்றையாட்சியின் கீழ் ' அதிகாரப் பகிர்வு ' ( devolution of power) என்றும் அழைக்கப்படுகிறது . சிலர் சகலவற்றிற்கும் devolution என்ற சொல்லைப் பாவிக்கின்றனர் . மத்திக்கும் மாகாணத்திற்குமிடையில் ஏற்படும் சட்டப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு அரசியலமைப்பு நீதிமன்றம் நிறுவப்படும். சில நாடுகளில் உயர்நீதிமன்றமே அரசியலமைப்பு நீதிமன்றமாகவும் செயற்படும். சமஷ்ட்டி பல வகைப்படும். அவை தொடர்பாக பின்னர் விரிவாக ஆராய்வோம்.
தற்போதைய அரசியல் யாப்பில் ஒற்றையாட்சித் தன்மை
Form- வடிவம்
தற்போதைய அரசியல் யாப்பின் சரத்து (2) இன் படி இலங்கைக் குடியரசு ஒரு ஒற்றையாட்சி நாடாகும்.
Substance- விடயதானம்
தற்போது மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை 2/3 பெரும்பான்மையுடன் மத்திய அரசு வேண்டிய நேரத்தில் மாற்றலாம் அல்லது இல்லாமலாக்கி விடலாம் . எனவே விடயதானத்திலும் தற்போதைய யாப்பு ஒற்றையாட்சித் தத்துவத்தையே கொண்டிருக்கின்றது.
ஒற்றையாட்சியை ஏன் முஸ்லிம்கள் வலியுறுத்த வேண்டும்
அதிகாரப்பகிர்வு முஸ்லிம்களுக்கு சாதகமா? பாதகமா? என்று நாங்கள் பின்னர் ஆராய்வோம் . அப்போது இத்தலைப்பிற்கு மீண்டும் வருவோம். தற்போதைக்கு சுருக்கமாக , அதிகாரப்பகிர்வு பொதுவாக அல்லது அதில் குறித்த அம்சங்கள் விஷேசமாக முஸ்லிம்களுக்கு அல்லது ஏனையவர்களுக்கு பாதகமாக அல்லது ஆபத்தானதாக அமைந்திருக்கின்றது என்பதை காலவோட்டத்தில் அனுபவரீதியாக நாம் உணரும்போது , அதாவது நெருப்பு சுடும் என்று கூறியும் அதனைப் புரிந்துகொள்ளாது நெருப்பை நம் அருகில் கொண்டுவந்து வைக்கும்வரை அதனைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருந்து விட்டு அப்புறம் நெருப்பு சுடுவதை அனுபவரீதியாக உணரும்போது அந்த நெருப்பை அகற்றக் கூடியதாக இருக்கவேண்டுமே. ஒற்றயாட்சியில் அதனைச் செய்யலாம். செய்யாவிட்டால் போராடலாம் . ஏனெனில் செய்வதற்கு சட்டத்தில் இடம் உண்டு, என்பதனால். சமஷ்ட்டியில் அது முடியாதே. போராடியும் பிரயோசனமில்லையே. அதிகாரத்தைப் பெற்றவர்கள் அதனை இன்னும் கூட்டுவதற்குத்தான் சம்மதிப்பார்களே தவிர குறைப்பற்கோ மாற்றுவற்கோ சம்மதிக்க மாட்டார்களே!
எனவே, முஸ்லிம்கள் சட்டிக்குள் போடப்பட்ட கறியாக, நிரந்தர அடிமைச் சாசனத்தை முதுகில் குத்திக் கொண்டு வாழமுடியுமா? ஒரு சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளுக்காக இன்னொரு சமூகத்தை இருட்டில் தள்ளலாமா?
எனவேதான் முஸ்லிம்கள் வடிவத்திலோ அல்லது விடயதானத்திலோ சமஷ்ட்டி வழங்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே விழிப்படைவோம்.
( தொடரும் )