ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் அனுசரணையில் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட உலமாக்கள் மற்றும் கதீப்மார்கள் இலவசமாக உம்ரா கடமைக்கு அனுப்பி வைக்கும் திட்டத்தின், 150 பேர் அடங்கிய 4ஆம் கட்டக் குழு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி புனித மக்கா நகர் நோக்கி புறப்படவுள்ளது.
உம்ராவுக்கு செல்பவர்களுக்கான பயண ஆவணங்கள், ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் எதிர்வரும் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு காத்தான்குடி அல்மனார் ஒன்றுகூடல் மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்படவுள்ளது.
சமூகத்தின் எழுச்சிக்காக தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ள உலமாக்களை கௌரவிக்கும் நோக்குடன் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் நாடாளாவிய ரீதியில் பல்வேறு வேலைத்திட்டங்களை செய்து வருகின்றது. அந்தவகையில் பள்ளிவாயல்களில் சேவையாற்றும் 55 வயதுக்கு மேற்பட்ட, இதுவரைக்காலமும் ஹஜ் அல்லது உம்ரா கடமையினை நிறைவேற்றாத, உலமாக்கள் மற்றும் கதீப்மார்கள் 500 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு இலவசமாக உம்ரா செல்வதற்கான வசதிகளை ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் செய்து கொடுத்துள்ளது.
இதற்கமைய, நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 100 பேர் கொண்ட முதலாவது குழு கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி மக்கா சென்றது. இதனை இராஜாங்க அமைச்சர்களான எம்.எச்.எம்.பௌசி மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். அத்துடன், 100 பேர் கொண்ட இரண்டாவது குழு மே 4ஆம் திகதி மக்கா சென்றது. இக்குழுவினை தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் ஹலீம் மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். 100 பேர் கொண்ட மூன்றாவது குழு மே 19ஆம் திகதி மக்கா சென்றது. இக்குழுவினை கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அமீர் அலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் வழியனுப்பி வைத்திருந்தனர். இந்நிலையில், 4ஆவது குழு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி மக்கா நோக்கி புறப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.