ஹைதர் அலி -
கோவில் குளம் வீதிக்கான எல்லை நிர்ணயம்.
ஆரயம்பதி கோவில்குளம் பகுதியில் இதுவரை காலமும் சரியான முறையில் அடையாளப்படுத்தப்படாமல் மணல் தரையாகவும் புதர்கள் நிறைந்தும் காணப்பட்ட வீதி ஒன்றினை புனரமைப்பு செய்து தருமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக்கிடம் பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக அவ்வீதியினை அடையாளப்படுத்தி வீதியின் எல்லைக்குள் அமைந்துள்ள மரங்கள் மற்றும் புதர்களை அகற்றும் நடவடிக்கை மண்முனைப்பற்று பிரதேச சபை மூலம் இடம்பெற்று வருகின்றது.
நடைபெற்றுவரும் இப்பணிகளை மாகாண சபை உறுப்பினர் நேரில் சென்று பார்வையிட்டு வீதியினை அடையாளப்படுத்துவது தொடர்பான தமது ஆலோசனைகளையும் வழங்கினார். இதன் மூலம் இவ்வீதியினை சிரமமின்றி பயன்படுத்துவதற்கும் இவ்வீதியினூடாக இப்பகுதிக்கு அடுத்து அமைந்துள்ள குடியிருப்புகளுக்கு இலகுவாக போக்குவரத்துகளை மேற்கொள்ளவும் வழி வகுக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி மெரைன் ரைவ் வீதி புனரமைப்பு.
கிழக்கு மாகாண சபையின் நிதியொதிக்கீட்டின் மூலம் சுமார் ஒரு கோடி ரூபா செலவில் புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுவரும் காத்தான்குடி கடற்கரை வீதியினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது புனரமைப்பு பணிகள் தொடர்பான மேலதிக ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கிய மாகாண சபை உறுப்பினர் புனரமைப்பு வேலைகளை துரிதமாக பூரணப்படுத்துவதற்கும் உத்தரவிட்டார்.
மீன்பிடி இலாகா வீதி புனரமைப்பு.
கிழக்கு மாகாண சபையின் நிதியொதிக்கீட்டின் கீழ் கொங்ரீட் வீதியாக புனரமைப்பு செய்யப்பட்டுவரும் காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியின் புனரமைப்பு பணிகளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் நேரில் சென்று பார்வையிட்டார். தற்போது புனரமைக்கப்படுகின்ற 360 மீற்றர் நீளமான இவ்வீதியின் புனரமைப்பு பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இவ்வீதி மிகவிரைவில் மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.