அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில், தன்னிடம் அதிகாரிகள் அத்துமீறி சோதனை நடத்தியதாகவும், இதனால் 2 மணிநேரம் காத்துக்கிடக்க நேரிட்டதாகவும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா வேதனை தெரிவித்துள்ளார். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேசிய மாநாடு ஒன்றில் பங்கேற்கச் சென்ற நிலையில், சுமார் 2 மணி நேரம் தனியறையில் காத்திருக்கச் செய்யப்பட்டுள்ளார் ஒமர் அப்துல்லா. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக, அமெரிக்காவுக்கு செல்லும் பிற நாட்டினரிடம் அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் கடும் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனை நடவடிக்கைகளுக்கு குறிப்பாக, இந்தியாவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் ஆளாகி வருகின்றனர். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம், அவரைத்தொடர்ந்து, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஆகியோரிடம் அமெரிக்க விமான நிலையத்தில் சிறப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அமெரிக்கா மன்னிப்பு கோரியபோதிலும், சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தவண்ணம் உள்ளது.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ஒமர் அப்துல்லா,
இரண்டாம் கட்ட பாதுகாப்பு சோதனைக்காக தன்னை நிறுத்தி வைத்ததாகவும், இதுபோன்ற நிகழ்வு கடந்த மூன்று அமெரிக்க பயணங்களில் இருமுறை தனக்கு நேர்ந்ததாக அவர் டிவிட்டரில் கூறியுள்ளார். சோதனை என்ற பெயரில் 2 மணி நேரம் தன்னுடைய நேரம் வீணாக்கப்பட்டதாகவும், வீணான இந்த நேரத்தை வீட்டில் தனது குடும்பத்தினருடன் கழித்திருக்கலாம் என்றும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.