எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய அவர்களின் பணிப்புரையின் பேரில் தேர்தல்கள் திணைக்களமும் கல்வியமைச்சும் இணைந்து பாடசாலைகள் தோறும் மாணவர் பாராளுமன்றங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
இதனடிப்படையில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் மாணவர் பாராளுமன்றம் அமைப்பதற்கான வேட்பு மனுக்களை கோரும் விண்ணப்பப்படிவங்கள் வினியோகிக்கப்பட்டு “மாணவ பாராளுமன்ற தேர்தல் ” ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
தரம் 6 முதல் 13 வரையுள்ள மாணவர்களிலிருந்து தெரிவு செய்யப்படும் மாணவ பிரதிநிதிகளைக் கொண்டு மாணவர் பாராளுமன்றம் தாபிக்கப்படும்.
மாணவர் பாராளுமன்றம் அமைப்பது தொடர்பாக மாணவர்களுக்கு அறிவுட்டும் செயலமர்வொன்று அண்மையில் தேர்தல்கள் திணைக்களத்தால் கல்லூரியில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் , தேர்தல் திணைக்கள பிரதம மொழிபெயர்ப்பாளர் ஏ.எம்.முஹாஜரீன் , அம்பாறை உதவி தேர்தல்கள் ஆணையாளர் பிரதிநிதி இஸ்மாலெவ்வை ஆகியோர் கலந்து கொண்டனர்.
150 மாணவப் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக நடத்தப்படும் இத் தேர்தல் கடமைகளில் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் ஈடுபடுவதுடன் வாக்கு எண்ணும் கடமையிலும் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் பணிகளிலும் ஈடுபடவுள்ளனர்.கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் அவர்களின் வழிகாட்டலில் தேர்தலுக்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக நிறைவேற்று சபையொன்று ஏற்படுத்தப் பட்டுள்ளது.
செயலாளர் நாயகமாக பிரதி அதிபர் ஏ.பி.முஜீன் , பிரதி செயலாளர் நாயகமாக (அபிவிருத்தி) அஜ்மல் ஹுசைன் , பிரதி செயலாளர் நாயகமாக (நிர்வாகம்) எம்.ஐ.எம்.அஸ்ஹர், பிரதி செயலாளர் நாயகமாக (ஒழுக்கம்) யு.எல்.எம்.இப்றாகிம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர் பாராளுமன்றத்தில் சபாநாயகர் , பிரதமர் , சபை முதல்வர் , பிரதி சபாநாயகர் , பிரதி செயற்குழுத் தலைவர் , 10 அமைச்சர்கள் , 10 பிரதி அமைச்சர்கள் , 10 ஆலோசனைச் செயற் குழுக்கள் அமையவுள்ளன.
மாணவர் நட“புறவு விருத்தி மற்றும் மாணவர் நலன்புரி அமைச்சு , மாணவர் தேர்ச்சி மறறும் புத்தாக்க அலுவல்கள் அமைச்சு , பாடசாலைகளுக்கிடையே நட்புறவை கட்டியெழுப்பும் மற்றும் விருத்தி செய்யும் அமைச்சு , கல்வி , மனிதவள அபிவிருத்தி மற்றும் தகவல் தொடர்பாடல் அமைச்சு, பண்பாட்டு சமய அலுவல்கள் மற்றும் விழுமிய மேம்பாட்டு அமைச்சு , சமூக நல்லிணக்கம் மற்றும் மாணவர் பாதுகாப்பு நடவடிக்கைகள் அமைச்சு , சமுதாயத் தொடர்பு அபிவிருத்தி மற்றும் சமுதாய சேவைகள் அமைச்சு , சுகாதார போசாக்கு மற்றும் விளையாட்டு அலுவல்கள் அமைச்சு , விவசாய மற்றும் சூழல் அபிவிருத்தி அமைச்சு , பௌதீகவள அபிவிருத்தி மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஆகியனவே இவ்வாறு அமையவுள்ள 10 அமைச்சுக்களுமாகும்.