திருமண புகைப்படங்களை சமூக தொடர்பாடல் தளங்களில் பரிமாறக் கூடாது என மணமகனுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை மணமகள் மீறியதால் திருமணமொன்று அது இடம்பெற்று இரு மணித்தியாலங்களில் விவாகரத்தில் நிறைவுபெற்ற சம்பவம் சவூதி அரேபியாவில் இடம்பெற்றுள்ளது.
தனது புது மனைவி திருமண புகைப்படங்களை சினப்சட் இணையத்தள பக்கத்தினூடாக தனது நண்பிகளுக்கு அனுப்பி வைத்துள்ளதை அறிந்த மணமகன் சினமடைந்து திருமணம் இடம்பெற்று இரு மணித்தியாலங்களில் விவாகரத்து கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பில் மணமகளின் சகோதரர் சவூதி அரேபிய தினசரியான ஓகாஸுக்கு அளித்த பேட்டியில், திருமண புகைப்படங்களை அல்லது காணொளிக் காட்சியை சினப்சட், இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் உள்ளடங்கலான சமூக இணையத்தளங்களில் பரிமாறக்கூடாது என மணமகனுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை தனது சகோதரி மீறியதாலேயே மணமகன் விவாகரத்து கோரியுள்ளதாக தெரிவித்தார்.
இந்த உடன்படிக்கையானது திருமணம் தொடர்பான ஒப்பந்தத்தில் உள்வாங்கப்பட்டு பதிவுசெய்யப்பட்டிருந்தது.
இந்த விவாகாரம் இருதரப்பு குடும்பத்தினர் மத்தியிலும் கடும் வாக்குவாதத்தை தோற்றுவித்துள்ளது.
மேற்படி உடன்படிக்கை நிமித்தம் விவாகரத்துக் கோருவது நீதியற்ற ஒன்றென மணமகளின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டிய அதேசமயம், மணமகனுக்கு மணமகளின் செயல் நிமித்தம் விவாகரத்துக் கோருவதற்கான உரிமை உள்ளது என மணமகனின் குடும்பத்தினர் வாதிட்டனர்.
இந்த வருட ஆரம்பத்தில் திருமணமாகி ஹோட்டல் அறைக்கு சென்ற சமயம் தனது புது மனைவி தன்னை அலட்சியம் செய்து நண்பிகளுக்கு எழுத்து வடிவ செய்தியை அனுப்புவதில் ஆர்வம் காட்டியமைக்காக கணவர் ஒருவர் விவாகரத்துக் கோரிய சம்பவம் சவூதி அரேபிய ஜெடாஹ் நகரில் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.