என்.எம்.அப்துல்லாஹ்-
1990 ஒக்டோபர் 30ம் நாள் வடக்கில் இருந்து ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களும் படிப்படியாக ஆயுதமுனையில் பலவந்தமாக இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்ட இறுதி நாளாகும்; ஒவ்வொரு வருடமும் இதனை வடக்கு முஸ்லிம்கள் தம்முடைய இருப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்ட நாளாக நினைவுகூர்ந்து வருகின்றார்கள். இவ்வாறான நினவுகூறல்கள் இடம்பெறுவது அவர்கள் மீது இழைக்கப்பட்ட பாரிய மனித உரிமை மீறலை நினைவுபடுத்தவும், அவர்களுக்கான நீதி நிலைநாட்டப்படல்வேண்டும் என்பதை உலகிற்கும் எடுத்துச்சொல்லவும், அதற்கும் அப்பால் இதுபோன்ற நிகழ்வு இனியொருபோதும் நிகழக்கூடாது என்பதை வலியுறுத்துவதற்குமேயாகும்.
1990களில் ஜனநாயகம் சிறையிடப்பட்டிருந்த சூழலில், ஆயுதங்களே எல்லாவற்றையும் தீர்மானிக்கின்ற சூழலில், சரியெது பிழையெது என்பதை சாதாரண காரணிகளின் அடிப்படையில் மக்களால் தீர்மானிக்க முடியாத சூழலில், உரிமைக்காகப் போராடுகின்ற ஒரு குழுவினர் இன்னுமொரு சமூகத்தின் உரிமைகள் குறித்து சற்றேனும் சிந்திக்காத சூழலில் வடக்கு முஸ்லிம்கள் மீதான இனச்சுத்திகரிப்பு நிகழ்ந்தேறியது.
1991 இலேயே முதல்முறையாக “கருப்பு ஒக்டோபர்” என்னும் வார்த்தைப் பிரயோகம் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களால் பயன்படுத்தப்பட்டது. முதலாவது எதிர்ப்பு நிகழ்வு மருதானை பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் முன்றலில் இடம்பெற்றது. கிழக்கிலங்கையின் முஸ்லிம் படுகொலைகள் மற்றும் வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் போன்ற அம்சங்களே அப்போது முக்கியத்துவப்பட்டிருந்தன. வடக்குக் கிழக்கு முஸ்லிம்களின் மீது தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம் என்று அடையாளப்படுத்திய ஆயுதக் குழுக்கள் பல்வேறு தாக்குதல்களை நடாத்தியிருந்தார்கள். மறுபுறத்தில் முஸ்லிம் ஊர்காவற்படையினரால் தமிழ் மக்களின் மீதும் வன்முறைகள் அரங்கேற்றப்பட்டிருந்தன. இரு சாராரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டார்கள். கூடுதல் குறைதல்கள் இருந்தபோதிலும் கிழக்கிலங்கையில் இரண்டு தரப்பிலும் வன்முறைகள் பயன்படுத்தப்பட்டிருந்தன.
ஆனால் வடக்கு முஸ்லிம்கள் முழுமையான நிராயுதபாணிகளாகவே இருந்தார்கள்; வடக்கில் முஸ்லிம் மக்களால் தமிழ் ஆயுதக் குழுக்களுக்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ எவ்விதமான வன்முறைகளும் நிகழ்ந்தேறியதாக ஒரு பதிவுகளும் இல்லை. இதுவே வடக்கு முஸ்லிம்களின் மீது இழைக்கப்பட்ட அநீதி மிக மிக கொடியது என்று சொல்வதற்குப் போதுமானதாகும். அத்தோடு எவ்வித நியாயங்களையும் முன்வைப்பதற்கு முடியாத ஒரு நிகழ்வாகவும் அமைந்திருக்கின்றது. எனவே வடக்கிலிருந்து முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்டமையானது ஒரு பாரிய மனித உரிமை மீறல், அதுமட்டுமன்றி அவ்வாறான ஒரு நிகழ்வு இலங்கையில் இனியெப்போதும் இடம்பெறக்கூடாது என்பதையும் உறுதிப்படுத்தவேண்டிய பொறுப்போடு அத்தினத்தை நாம் நினைவு கூர்கின்றோம்.
2009 யுத்த நிறைவு வரை “பலவந்த வெளியேற்றம்” குறித்த நினைவு தினங்கள் அனுஷ்டிக்கப்பட்டன, ஆனால் அடுத்தது என்ன என்பது பற்றிய தெளிவில்லாத சூழ்நிலையிலேயே அவை நிகழ்ந்தேறின. ஆனால் 2009ற்குப் பின்னர் குறித்த நினைவு தினங்கள் வடக்கு முஸ்லிம்களின் விடயத்தில் முக்கியத்துவப்பட்டிருக்கின்றது. எமது தாயக மண்ணிலே மீளக்குடியேறுவதற்கான வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றது. தமிழ் மக்களோடு உறவாடக்கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டிருக்கின்றன. யுத்தம் ஏற்படுத்திய பொதுவான பாதிப்புக்களில் இருந்து வடக்கு மக்கள் அனைவரும் மீளவேண்டும் ஒரு புதுவாழ்வை நோக்கி அவர்கள் நகரவேண்டும் என்பது இங்குள்ள எல்லா மக்களின் விருப்பமுமாக மாறியிருக்கின்றது. எனவேதான் 2009களின் பின்னர் முஸ்லிம்களின் வெளியேற்றம் குறித்த நினைவு தினங்கள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றது.
2009களில் யாழ்ப்பாணத்திலே மௌலவி சுபியான் அவர்கள் ஒக்டோபர் 30ஐக் குறிக்கும் நிகழ்வொன்றினை முன்னைய நாள் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவனந்தா அவர்களை பிரதம விருந்தினராக அழைத்து ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த நிகழ்விற்கு “கௌரவமான மீள்குடியேற்றம்” என்ற கருப்பொருள் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு உரை நிகழ்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா அவர்கள் உங்களுடைய மண்ணிலே நீங்கள் உரிமையோடு வந்து குடியேறவேண்டும், இதனை கௌரவமான மீள்குடியேற்றம் என்று சொல்லக்கூடாது உரிமையுடனான மீள்குடியேற்றம் என்று சொல்லவேண்டும் என்று குறிப்பிட்டார்.
2010 களிலே யாழ்ப்பாண முஸ்லிம் சமூக அமைப்புக்களின் கூட்டமைப்பு அவ்வாறான ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது, அந்நிகழ்விற்கு யாழ் மாநகரசபையினுடைய முன்னைய நாள் முதல்வர் கௌரவ யோகேஸ்வரி பற்குணராசா அவர்கள் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டார்; அவர் அங்கு உரை நிகழ்த்தும்போது பாசிசப் புலிகளே முஸ்லிம்களை வெளியேற்றினார்கள், தமிழ் மக்கள் அல்ல, புலிகளுக்கு எதிராகவும் புலிகளை வளர்த்தவர்கள் ஆதரித்தவர்களுக்கு எதிராகவும் உங்களுடைய மீள்குடியேற்றத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்தார்
2011இலே யாழ்ப்பாணம் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் ஏற்பாட்டிலே அவ்வாறான ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது, குறித்த நிகழ்விற்கு பேராசிரியர் சிற்றம்பலம் மற்றும் பேராசிரியர் சிவச்சந்திரன் ஆகியோர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் சார்பாகவும் தமிழ் மக்களின் புத்திஜீவிகள் சார்பாகவும் கலந்துகொள்ளவேண்டும் என அழைக்கப்பட்டிருந்தார்கள். பேராசிரியர் சிற்றம்பலம் அவர்கள் குறித்த நிகழ்விற்கு வருகை தந்திருக்கவில்லை. பேராசிரியர் சிவச்சந்திரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். தமிழ் முஸ்லிம் உறவைக் கட்டியெழுப்புவதன் தேவையை அவசியத்தை அவர் வலியுறுத்தி நின்றார்.
2012இலே அமைச்சர் கௌரவ றிஷாத் பதியுத்தீன் அவர்கள் கொழும்பிலே ஒரு பிரமாண்டமான நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார், பிரதம விருந்தினராக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார், வெளிநாட்டுத் தூதுவர்கள் என பல முக்கியஸ்த்தர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத் தேவைகளை குறித்த பிரமாண்டமான அவையிலே முன்வைப்பதுவே குறித்த நிகழ்வின் பிரதான நோக்கமாக இருந்தது. குறித்த சந்திப்பிலே முன்னைய நாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வடக்கு முஸ்லிம்களை முழுமையாக மீள்குடியேற்றியே தீருவேன் என்று உறுதிமொழியளித்தார்.
2013இலே யாழ்ப்பாணத்திலே அவ்வாறான ஒரு நிகழ்வு “தகவல் வழிகாட்டல் மத்திய நிலையம் யாழ்ப்பாணம்” என்னும் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனது பிரதம பேச்சாளராக யாழ் மாநகரசபையின் முன்னைய நாள் ஆணையாளரும், தற்போதைய வடக்கு மாகாணசபையின் பேரவைத் தலைவருமாகிய கௌரவ. சீ.வி.கே சிவஞானம் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். குறித்த நிகழ்விலே உரை நிகழ்த்தும்போது கௌரவ. சீ.வி.கே சிவஞானம் அவர்கள் “நான் மனம் விட்டு ஒரு சில விடயங்களைப் பேச விரும்புகின்றேன், வடக்கின் ஏனைய பிரதேசங்களில் இருந்து முஸ்லிம்களை இயக்கம் போகச் சொல்லியிருக்கும் செய்தியை நான் அறிந்து அதுகுறித்து விசாரிப்பதற்காக இயக்கத்தின் உள்ளூர் தலைவர்களை அணுகியிருந்தேன், அவர்கள் அது “தலைமைப்பீடத்தின் முடிவு” என்ற வார்த்தையோடு நிறுத்திக் கொண்டார்கள்.
அப்போது யாழ்ப்பாணத்து முஸ்லிம்களை வெளியே போகச் சொல்லமாட்டார்கள்தானே என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது, யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கும் இயக்கத்துக்கும் நெருக்கமான தொடர்புகள் இருந்தன, அது எனக்கு நன்கு தெரியும், மறுநாள் பிற்பகல் நேரத்தில் இயக்கத்திடமிருந்து ஒரு தகவல் வந்தது யாழ்ப்பாண முஸ்லிம்களை நாளை எழுப்பப்போகின்றோம் என்பதுவே அந்தத் தகவல், உடனே நான் சைக்கிளை எடுத்துக்கொண்டு பொற்பதியில் இருந்த இயக்கத்தின் அலுவலகத்திற்குச் சென்றேன், நிலைமைகளை விசாரித்தேன், அப்படிச் செய்யவேண்டாம் என்று வாதிட்டேன், வாக்குவாதப் பட்டேன், எனது பேச்சுக்கு மதிப்பு இருக்கவில்லை; நான் முஸ்லிம் மக்கள் வாழ்ந்த பகுதிக்கு வந்தேன், என்னால் அந்தத் தகவலை வெளிப்படையாகச் சொல்ல முடியாது, அது சரியானதாக இல்லை. நான் சுல்தானுடைய வீட்டுக்கு வந்தேன், அவர் தேனீர் போடச் சொன்னார், இந்த நேரத்திலே வரமாட்டீர்களே ஏதாவது பிரச்சினையா என்று கேட்டார், நான் ஒரு பிரச்சினையும் இல்லை, ஆனால் ஏதாவது நடந்துவிடுமோ என்று எதிர்பார்த்துக்கொண்டுதானே இருக்கவேண்டும், இன்றைய சூழலில் எதுவும் நடக்கலாம் என்றுதானே இருக்கின்றது என்று கூறினேன்.
அந்த மோசமான நிகழ்வு இடம்பெற்றது; 1998இலே முஸ்லிம் வர்த்தகர்கள் யாழ்ப்பாணம் வரவேண்டும் என்று எனக்குச் செய்தி அனுப்பியபோது அவர்கள் வருவதற்கான அனுமதிக் கடிதத்தை இயக்கத்திடம் இருந்து பெற்றுக்கொடுத்து, யாழ்ப்பாண வர்த்தகர்களை ஒன்றுகூட்டி, பலாலியில் இருந்து பஸ்ஸிலே அவர்கள் வந்து இறங்கியபோது அவர்களை வரவேற்று செய்யவேண்டிய ஏற்பாடுகளைச் செய்தவனும் நானே.
எனவே ஒரு கசப்பான நிகழ்வு, எம்முடைய கட்டுப்பாட்டையும் மீறி நடந்திருக்கின்றது, அதற்காக நாம் மனம் வருந்துகின்றோம், உங்களையும் எங்களது உறவுகளாக ஏற்று மீண்டும் இங்கே வந்து குடியேறுமாறு அன்போடு அழைக்கின்றோம் என்றார்.
2014இலே மன்னார் மாவட்டத்திலே நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டிலே அவ்வாறான ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்விலே கலந்துகொள்வதற்காக விஷேட விருந்தினர்களாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களும், கௌரவ செல்வம் அடைக்கலநாதன் (பா.உ), கௌரவ பா.டெனீஸ்வரன் (வடக்கு மாகாண அமைச்சர்) அவர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள், கௌரவ செல்வம் அடைக்கலநாதன் (பா.உ), அமைச்சர் டெனீஸ்வரன் குறித்த நிகழ்வில் கலந்துகொள்வதை தவிர்த்திருந்தனர், அதே சந்தர்ப்பத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்கள் தன்சார்பாக ஒரு பிரதிநிதியை அனுப்பியிருந்தார். அங்கும் தமிழ் முஸ்லிம் உறவின் முக்கியத்துவம் குறித்தே வலியுறுத்தப்பட்டது.
2015இலே யாழ்ப்பாணம் றிம்மர் மண்டபத்திலே நல்லிணக்கத்திற்கான மக்கள் அமைப்பு என்னும் அமைப்பினால் ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, அந்நிகழ்விலே கௌரவ எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள், தனது உரையிலே வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமையானது ஒரு தவறு என்றும், அது மனித உரிமை மீறல் என்றும், அது ஒரு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை என்றும் மிகவும் ஆணித்தரமாக எடுத்துறைத்தார். அதுமட்டுமன்றி கிழக்கில் முஸ்லிம் ஆயுததாரிகளால் அப்பாவித் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் தாக்குதல்களையும் கண்டிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார், அத்தோடு எங்களுடைய மக்களுக்காக உரிமை வேண்டும், நீதிவேண்டும் என்று கேட்கின்ற நாங்கள் இன்னுமொரு சமூகத்திற்கு அநீதியிழைக்க முடியாது. எமக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்று பிரேரணை நிறைவேற்றுகின்ற வடக்கு மாகாணசபை வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது தவறு என்றும், அவர்கள் மீளவும் குடியேற்றப்படவேண்டும் என்றும் பிரேரணை நிறைவேற்றாமை வெட்கக்கேடான விடயம் என்றும் குறிப்பிட்டார்.
நான் மேலே குறிப்பிட்ட நிகழ்வுகள் வேறுபட்ட நபர்களால், வேறுபட்ட நோக்கங்களுடன், வேறுபட்ட தளங்களிலே நடாத்தப்பட்ட நிகழ்வுகளாகும். 2009-2015 வரையான காலப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட 7 நிகவுகளுமே அவையாகும். இந்த நிகழ்வுகள் வடக்கு முஸ்லிம்களாகிய எம்மைக் கடந்து போயிருக்கின்றனவே தவிர எம்மை நகர்த்திச் செல்லவில்லை என்ற மிகப்பெரிய உண்மையை இவ்விடத்தில் சொல்வது பொறுத்தமாக இருக்கும். வடக்கு முஸ்லிம்களின் பேசுபொருள், அவர்களது பிரச்சினைகள், அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள், அவர்களது வாழ்வு, அவர்களும் வாழும் சூழலில் அவர்களோடு வாழ்கின்ற மக்களுடனான உறவுகள் என எல்லா விடயங்களிலும் ஒருவிதமான தேக்க நிலை நிலவுவதை நாம் உணர்கின்றோம்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் எமது வெளியேற்றத்தை தவறு என்று ஏற்றுக் கொள்கின்றர்கள், முஸ்லிம் மக்கள் மீள்குடியேறவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றார்கள், சமூக நல்லிணக்கம் பற்றி சாதகமான கருத்துக்களை முன்வைக்கின்றார்கள். ஒட்டுமொத்த தமிழ் மக்களும் இதற்குத் தயாராக இல்லாவிட்டாலும் பெரும்பாலான தமிழ் மக்கள் எம்மை அரவணைக்கத் தயாராகவே இருக்கின்றார்கள், இதனைதான் நான் மேலே சுட்டிக்காட்டிய 7 நிகழ்வுகளும் எமக்கு உணர்த்தி நிற்கின்றது.
கடந்த 7வருடங்களில் எவ்விதமான மீள்குடியேற்றத் திட்டமிடல்களும் வடக்கு முஸ்லிம் மக்களை மையப்படுத்தி முழுமையாக இடம்பெறவில்லை. ஆனால் மீள்குடியேற்றம் குறித்து குறைகூறுகின்ற சமூகமாகவே நாம் இன்றுவரை இருக்கின்றோம். இந்த ஆக்கம் எழுதப்படும்வரை வடக்கிலே மீள்குடியேற வேண்டிய முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை என்ன என்பது பற்றி எவ்விதமான அதிகாரபூர்வமான தரவுகளும் எம்மிடையே கிடையாது. காணியற்றோர் எத்தனைபேர் என்று எத்தனை பேருக்கு வீடுகள் தேவையென்றும் முறையான மதிப்பீடுகள் எமக்கு மத்தியிலே கிடையாது. இதுவரைக்குமான அரச பதிவுகள் அனைத்தும் மீள்குடியேற்றத்திற்காக விருப்பத்தோடு வந்து பதிவு செய்த ஒரு தொகுதியினருடையது மாத்திரம்தான் இன்னும் ஏராளமானவர்கள் அவ்வாறான பதிவுகளை மேற்கொள்ளவேண்டிய தேவையுடையவர்களாக இருக்கின்றார்கள் இவ்வாறாக வடக்கு முஸ்லிம் மக்களுடைய மீள்குடியேற்றம் மற்றும் இதர விடயங்கள் சீராகக் கையாளப்படாத சூழ்நிலையில் 2016 ஒக்டோபர் 30ம் எம்மை நோக்கி இன்னுமொருதடவை வந்திருக்கின்றது.
முன்னைய நிகழ்வுகளைப் போன்று இதனையும் ஒரு நிகழ்வாக மாத்திரம் நோக்காமல்; வடக்கு முஸ்லிம்களின் சமூகச் செயற்பாடுகளில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்துகின்ற நிகழ்வாக இதனை நாம் நோக்கவேண்டும். அந்தவகையில் 2016ம் ஆண்டு ஒக்டோபர் 30 நினைவு நிகழ்வை வடக்கு முஸ்லிம் சிவில் சமூகம் ஏற்பாடு செய்திருக்கின்றது. இது வரவேற்கத்தக்க ஒன்றேயாகும். இதுவரைகாலமும் இடம்பெற்ற நிகழ்வுகளை விடவும் இம்முறை இந்நினைவு நிகழ்வு சற்று வித்தியாசமாக ஒழுங்கமைக்கப்படுதல் சிறப்பானது என்றே கருதுகின்றேன்.
வடக்கு முஸ்லிம்களுடைய விவகாரங்கள் பல்தொகுதிகளைக் கொண்டிருக்கின்றது. இதனை முழுமையாகப் புரிந்துகொள்வதும், அதற்கேற்ற திட்டமிடல்களையும் நகர்வுகளையும் முன்னெடுப்பது காலத்தின் தேவையுமாகும். வடக்கு முஸ்லிம்களுடைய விவகாரங்களைப் புரிந்துகொள்வதிலும் மேற்கொண்டு முன்னெடுக்கப்படவேண்டிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்கும் பின்வரும் விடயங்கள் எமக்கு துணை நிற்க முடியும்;
வடக்கின் பூர்வீக முஸ்லிம்கள் யார்? அவர்களின் தற்போதைய எண்ணிக்கை என்ன? இதனை முழுமையாக வரையறுக்க முடியாவிட்டாலும், வடக்கில் இருந்து 1990களிலே வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அனைவரும், அவர்களது சந்ததியினர் அனைவரும் வடக்கில் தாம் வாழ்ந்த பூர்வீக பிரதேசங்களில் தம்மை அரச அங்கீகாரமுள்ள நிறுவனத்தினூடாக பதிவு செய்தல் அவசியம் என்பதை வலியுறுத்தி நிற்கின்றது.
1990களிலே வடக்கிலே வாழ்விடக் காணிகளை, வாழ்வாதாரக் காணிகளை, விவசாயக் காணிகளை, பொதுத்தேவைக்கான காணிகளைக் கொண்டிருந்த வடக்கு முஸ்லிம்கள் அனைவரும் தம்முடைய காணிகளை நிலத்தை மீளவும் பெற்றுக்கொண்டுள்ளார்களா? அப்படி இல்லையெனின் அது குறித்து சிந்தித்து அவர்களுடைய காணிகளைப் பெற்றுக்கொள்தல் அவசியம், அதேபோன்று வடக்கு முஸ்லிம்களில் காணித்தேவையுடைவர்களின் அளவு என்ன? இதன்மூலமாக எமது பூர்வீக நிலங்களில் எமக்கிருக்கின்றன காணிசார்ந்த இருப்பு சார்ந்த உரிமையை எம்மால் உறுதி செய்ய முடியும். எனவே எமது பூர்வீக நிலத்திலே காணிகளுக்கான கோரிக்கையை வடக்கு முஸ்லிம்கள் மிகப்பலமாக முன்வைக்கவேண்டும்.
வாக்குரிமை குறித்து எமது நிலைப்பாடுகள் என்ன? வடக்கின் அனைத்து முஸ்லிம் வாக்காளர்களும் வடக்கிற்கே உரியவர்கள், அவர்களுடைய அனைத்து வாக்குகளும் வடக்கிலே பதிவு செய்யபப்டுதல் அவசியம், அவர்கள் மீளக்குடியேறினாலும், அல்லது மீளக்குடியேற்றத்திற்கான விருப்பை வெளிப்படுத்தினாலும், அவர்களது வாக்குரிமை அவர்களது சொந்த மண்ணில் இருப்பதை உறுதிசெய்யவேண்டும், இதற்கான பொறிமுறைகள் குறித்து நாம் ஆராய்ந்து அதற்கான தீர்வினை முன்வைத்தல் அவசியமாகும்.
இழப்பீடுகள் குறித்த எமது மக்களினதும் தலைவர்களினதும் நிலப்பாடுகள் எவ்வாறானவை; 1990களிலே எம்மீது ஒரு பலவந்த இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது எமது உடமைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன, எமது வாழ்வாதாரம் அபகரிக்கப்பட்டது, எமது வாய்ப்புகள் இல்லாமலாக்கப்பட்டன, இவை எமது வாழ்வில் பல்வேறு எதிர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன, இவற்றுக்கான முழுமையான பொறுப்பினை இத்தகைய ஒரு மனித உரிமை மீறலை எம்மீது ஏற்படுத்தியவர்களும், அத்தகைய மனித உரிமை மீறல் நிகழ்ந்தபோது அதனைத் தடுக்காதிருந்த இலங்கை அரசாங்கமுமே ஏற்றுக்கொள்தல் வேண்டும், அந்தவகையில் இரண்டு தரப்பினரும் எமக்கான இழப்பீடுகளை முழுமையாகப் பெற்றுத்தருதல் வேண்டும்.
மீள்குடியேற்ற உதவித்திட்டங்கள் அனைத்திலும் மீள்குடியேறுகின்ற முஸ்லிம் மக்கள் முழுமையாக உள்வாங்கப்படுதல் அவசியமாகும். வீடமைப்பு, வாழ்வாதாரம், உட்கட்டமைப்பு வசதிகள், கல்வி, சுகாதாரம் போன்ற விடயங்களில் குறிப்பாக கவனம்செலுத்தப்படுதல் வேண்டும்.
சமூக நல்லிணக்கம் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படுதல் அவசியமாகும், வடக்கின் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் முரண்பாடுகளைக் கொண்டிருக்கின்ற சமூகங்கள் அல்ல, நிரையவே உடன்பாடுகளைக் கொண்டிருந்த சமூகங்களாகும், அரசியல் நலன்களுக்காக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டவர்களால் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட அநீதிகள் ஒருபோதும் தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்டவையாக நோக்கக் கூடாது, தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் பலமான பரஸ்பரப் புரிந்துணர்வை அதிகப்படுத்துவதன் மூலம் நிலைமைகளைச் சீர்செய்தல் சாத்தியமே.
மேற்படி விவகாரங்களை வடக்கு முஸ்லிம் சிவில் சமூகத்தினர் அரசியலுக்கு அப்பால் பொதுநோக்கோடு உடன்பாடு காணுதலும், ஒருமித்து செயற்படுதலும் அவசியமாகின்றது ஆரம்பமாக இதற்கான ஒரு பொறிமுறை வடக்கு முஸ்லிம் சிவில் சமூகமட்டத்தில் உருவாக்கப்படுதல் அவசியமாகின்றது.
மேற்சொல்லப்பட்ட ஒழுங்கில் வடக்கு முஸ்லிம்களின் விவகாரங்கள் முதன்மையாக வடக்கு முஸ்லிம் சமூகமட்டத்திலும், அடுத்து வடக்கின் தமிழ் மக்கள் மத்தியிலும், இலங்கை அரசாங்கத்தோடும், சர்வதேச சமூகத்தோடும் விரிவாக கலந்துரையாடப்பட்டு, வடக்கு முஸ்லிம்கள் விடயத்தில் சீரான புரிதலை அனைத்துத் தரப்பினரிடையேயும் ஏற்படுத்துதல் அவசியமாகும்.
வடக்கு மாகாணசபையினூடாக, உள்ளூராட்சி மன்றங்களினூடாக, மத்திய அரச நிறுவனங்களினூடாக, தொண்டு நிறுவனங்களினூடாக என பல்வேறு தளங்களில் வடக்கு முஸ்லிம்களுக்கான ஒரு விஷேட மீள்குடியேற்றப் பொறிமுறையினை செயற்படுத்த முடியும்.
இவ்வாறான ஒரு பொறிமுறை உருவாகின்றபோது வடக்கு முஸ்லிம்களின் விவகாரங்கள் எவருக்கும் பாதிப்பில்லாத வகையிலும், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்திலும் கையாளப்பட முடியும்.
எனவே மேலே குறிப்பிட்ட விடயங்களின் அடிப்படையில் வடக்கு முஸ்லிம் சிவில் சமூகம் தன்னுடைய நகர்வுகளை முன்னெடுப்பதோடு, குறித்த “1990 ஒக்டோபர் 30” நினைவு தின நிகழ்வுகளை திறம்பட முன்னெடுப்பது சிறப்பானதாகும்.