ஏறாவூர் நிருபர். ஏ.எம்.றிகாஸ்-
மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனங்குளமடு பிரதேசத்தில் புதைக்கப்பட்ட நிலையிலிருந்த ரி - 56 ரக தன்னியக்கத் துப்பாக்கிகள் இரண்டு கரடியனாறு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
இத்துப்பாக்கிகளுடன் இரண்டு மெகசின்கள் மற்றும் அறுபது ரவைகளும் காணப்பட்டன.
இலுப்படிச்சேனை முச்சந்தியிலிருந்து சுமார் 5 கிலோமீற்றர் வடக்கே அமைந்துள்ள கனங்குளமடு கிராமத்தில் செங்கல்வாடி விஸ்தரிப்பு நடவடிக்கைக்காக ஜேசிபி இயந்திரம் மூலம் பற்றைகளைத் துப்பரவு செய்தபோது இத்துப்பாக்கிகள் காணப்பட்டுள்ளன.
இத்துப்பாக்கிகள் கறுப்புநிற பொலித்தீன் பைக்குள் மிக நுட்பமானமுறையில் சுற்றப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏல்ரீரீஈயினர் இத்துப்பாக்கிகளைப் புதைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.ஆர்.பி.சேனநாயக்க, மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சனர் கே.பி.கீர்த்திரெத்ன ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.