முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்-
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும், பிரபல்யமான பாடசாலைகளில் சேரத்துடிக்கும் மாணவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாகும்.இதில் வழங்கப்படும் புலமைப்பரிசில் நிதி மாணவர் இடைவிலகலையும் குறைக்கிறது. புலமைப்பரிசில் பரீட்சை ஒரு சுமை இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை பாராளுமன்றம் வரை சென்றபோது அதற்குப்பலமான எதிர்ப்புக்கிளம்பியது.பல அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது முன்னேற்றத்திற்குக் காரணம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகவே அதை நிறுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என உறுதியாகக் கூறியுள்ளனர்.
மன்னார் மாவட்டத்திலுள்ள முசலிக்கோட்டத்தில் உள்ள பாடசாலைகளின் தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளை ஆராய்கின்றபோது பெரிதும் கவலையாக உள்ளது.2015,2016 ம் ஆண்டுகளில் ஒருவர்கூட சித்தியடையவில்லை.இதனை நியாயப்படுத்தவும் சில ஆசிரியர் வேடம் தரித்தோர் முயன்றதையும் நான் அறிந்துகொண்டேன்.
இலங்கையில் சில மாவட்டங்களிலுள்ள கோட்டங்களில் 39,50,91,98 போன்ற எண்ணிக்கையில் தேர்ச்சிபெற்றுள்ளனர்.ஏன் அவ்வாறு எம்மால் முடியாமல் போனது.என்பது ஆச்சரியமாக உள்ளது. இவ்விடயம மிகவும் பாரதுரமான ஒன்றாகும்.மீளக்குடியேறிய மாணவர்களுக்கு ஏற்பட்ட பாரிய பின்னடைவு ஆகும்.இதற்குரிய மூலகாரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தீர்வுகாணப்படவேண்டும். வடமாகாணக் கல்விப்பணிப்பாளர்,மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர், முசலி கோட்டக்கல்விப் பணிப்பாளர், பாடசாலை அதிபர் தரம் 5 கற்பித்த ஆசிரியர்கள் போன்றோர் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் .
வடமாகாணக் கல்வியமைச்சர் ஒரு விசாரணைக்குழுவை நியமித்து இவ்விடயத்தை ஆய்வு செய்து தீர்வுகாணவேண்டும். நாம் நவீன கணனி யுகத்தில் வாழ்கிறோம் இதன்முலம் கற்றல் கற்பித்தலை இலகுவாக மேன்படுத்தலாம்.எமது பாடசாலை புதிதாக ஆரம்பிக்கப்பட்டது.நாம் மீளக்குடியேறியோர்.பாடசாலை வசதி போதாது.பிள்ளைகள் படிக்கிறார்களில்லை.போன்ற நொண்டிச்சாட்டுக்கள் எமக்குத் தேவையில்லை.நமது பிள்ளைகளின் வரப்பிரசாதங்களை நாமே குழிதோண்டிப்புதைப்பதா ?
அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் முசலிப்பிரதேசப் பாடசாலைகளுக்கான பௌதீக வசதிகளையும் ஆளணி வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்.சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது பாடசாலை சமுகத்தின் கடமையாகும். பாடசாலைகளின் அடைவுமட்டத்தினை ஒரு புத்திசீவி விமர்சித்தால் அவரை எதிரியாகப் பார்க்கிறார்கள்.சமுகப் பிரக்ஞை அவருக்கு இருக்கிறது.முசலிக்கோட்டம் கல்வியில் உயரவேண்டும் எனக்கனவு காண்பது தவறா ? கற்றலுக்குத் தேவையான செலவுகளைச் செய்ய முடியாமல் தவிக்கும் பெற்றோருக்குத்தான் புலமைப்பரிசிலின் பெறுமதி புரியும்.நீங்களெல்லாம் மேய்ப்பர்கள் உங்கள் மேய்ப்பைப் பற்றி மறுமையில் விசாரிக்கப்படும்.