ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் அனுசரணையில் இமாம்கள் மற்றும் கதீப்மார்களுக்கான இலவச உம்ரா திட்டத்தின், 100 பேர் கொண்ட 5ஆவதும் இறுதியுமான உம்ரா குழு எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி புனித மக்கா நகர் நோக்கி புறப்படவுள்ளது. அக்குழுவில் பயணிக்கும் இமாம்கள் மற்றும் கதீப்மார்களுக்கான பயண ஆவணங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியில் நடைபெற்றது.
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும், ஹிரா பௌண்டேஷன் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஆலோசணைக்கு அமைய இலவச உம்ரா திட்டம் முன்னெடுக்ப்பட்டு வருகின்றது. இதுவரைக்காலமும் ஹஜ் அல்லது உம்ரா கடமையினை நிறைவேற்றாத 55 வயதுக்கு மேற்பட்ட இமாம்கள் மற்றும் கதீப்மார்கள் 500 பேர் இந்த இலவச உம்ரா திட்டத்தின் மூலம் பயனடைகின்றனர்.
500 பேரும் தலா 100 பேர் வீதம் கட்டம் கட்டமாக 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு புனித மக்கா நகருக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யபட்டன. அதற்கமைய, 4 குழுக்கள் மக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததுடன், 5ஆவதும் இறுதியுமான குழு எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி அனுப்பி வைக்கப்படவுள்ளது. இக்குழுவில் பயணிக்கும் இமாம்கள் மற்றும் கதீப்மார்களுக்கான பயண ஆவணங்கள் கையளிக்கும் நிகழ்வு, மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் பணிப்பாளர் எம்.எம். அமீர் தலமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை முன்னால் உறுப்பினர் கே.எல்.எம். பரீட் , முன்னாள் நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், சூரா சபைத்தலைவர் எம். பஸீர் ஹாஜியார், மௌலவி ஏ.எம். மின்ஹாஜூதீன் பலாஹி, மற்றும் உம்ரா நேர்முகத்தேர்வுக்குழு உறுப்பினர்களான முஸ்லிம் கலாசார உத்தியோகத்தர் எம். ஜூனைட் நளீமி, அல்மனார் நிறுவனத்தின் பணிப்பாளர் யூ.எல்.ஏ.முபாரக், காத்தான்குடி மீரா ஜும்மாபள்ளிவாயல் தலைவர் ஏ.எல்.எம் சுபைர், மௌலவி சமீம் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.