கிழக்கு மாகாணத்துக்கான தேசிய ஆசிரிய இடமாற்றக் கொள்கையை அடுத்து மாகாண சபை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி தெரிவித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை (27) நடைபெற்ற 65ஆவது மாகாண சபை அமர்வில் சபை உறுப்பினர் கே. கருணாகரன் சமர்ப்பித்த தனிநபர் பிரேரணைக்குப் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தேசிய இடமாற்றக் கொள்கையை வைத்துக்கொண்டு கிழக்கு மாகாணத்துக்கான தேசிய ஆசிரிய இடமாற்றக் கொள்கை ஒன்று தயாரிக்கப்பட்டு, சில திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் எதிர்வரும் அமைச்சரவையில் இந்த இடமாற்றக் கொள்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். எதிர்காலத்தில் இதற்கமையவே இடமாற்றங்கள் செய்யப்படும்.
நவம்பர் 5ஆம் திகதிக்குள் கல்வியற்கல்லூரி உட்பட பட்டதாரி ஆசிரியர்களின் நியமனங்கள் வழங்கப்படும். 50 சிங்கள மொழி மூல ஆசிரியர்கள் உட்பட 450 ஆசிரியர்கள் இவ்வாறு நியமிக்கப்படவுள்ளனர். குறிப்பாக பாரபட்சமின்றி மிகவும் பின்தங்கிய அவசியமான இடங்களுக்கும் இந்நியமனங்கள் செய்யப்படவுள்ளன. இவ்வாறே சிற்றூழியர்கள், நிர்வாக அதிகாரிகளுக்கான இடமாற்றங்கள் இடம்பெறுவதில்லை என பலரும் இங்கு சுட்டிக்காட்டினீர்கள்.
அவற்றுக்கான நடவடிக்கைகள் வரும் ஆண்டில் இருந்து மேற்கொள்ளப்படும். ஆசிரிய இடமாற்றங்களைப் போன்று இந்த இடமாற்றமும் இடம்பெறும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.