அகமட் எஸ்.முகைடீன், ஹாசிப் யாஸீன்-
இந்தியாவின் முன்னணி சர்வதேச வர்த்தக நிறுவனத்தின் தொழிலதிபர் அபிசேக் ஜோசி இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸூடான பேச்சுவார்த்தை (27) வியாழக்கிழமை விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்றது.
இதன்போது இந்திய நிறுவனத்தினூடாக இலங்கையில் வங்கிக் கிளைகள், வைத்தியசாலைகள், வர்த்தக கைத்தொழில் வலயங்கள் என்பன நிறுவுவது சம்பந்தமாக விரிவாக ஆராயப்பட்டது.
இந்நிறுவனங்களை இலங்கையில் நிறுவுவதற்கான முறையான அனுமதியினை பெற்றுக்கொள்ளும் முகமாக பிரதி அமைச்சர் ஹரீஸின் ஏற்பாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட நிதி அமைச்சினதும், மத்திய வங்கியினதும் உயர் அதிகாரிகளை சந்திப்பது என இச்சந்திப்பில் இணக்கம் காணப்பட்டது.
இதன்போது பிரதி அமைச்சர் ஹரீஸ்,
யுத்த நிறைவடைந்த கையோடு நாட்டில் நல்லாட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் சர்வதேச முதலீட்டாளர் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஆர்வம் காட்டிவருகின்றனர். இதனை நாம் வரவேற்கின்றோம். இச்சந்தர்ப்பங்களை முறையாகபயன்படுத்துவதன் மூலம் நாட்டில் புதிய தொழில் வாய்ப்புக்கள் உருவாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதன் மூலம் தொழிலற்றிருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கக்கூடிய சந்தர்ப்பம் கிட்டும் எனத் தெரிவித்த பிரதி அமைச்சர், இதனால் நாடு பொருளாதாரரீதியாகவும் வளர்ச்சியடையும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.