காரைதீவு நிருபர் சகா-
மக்களின் கருத்துக்களை உள்வாங்காமல் ஏலவே வடிகானுள்ள ஒரு வீதியில் மேலுமொரு வடிகான் கட்டப்பட்டுவருகிறது என பொதுமக்கள் குறைபடுகின்றனர். இச்சம்பவம் காரைதீவில் இடம்பெற்றுவருகிறது. காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரி வீதியில் இவ்வடிகான் அமைக்கப்பட்டுவருகிறது.
இவ்வீதி புனரமைப்புத் தொடர்பாக காரைதீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் வடிகான் தேவையில்லை என மக்கள் கூறினர். கொம்புச்சந்தியிலிருந்து ஏரிவரைக்குமான வீதி சரிவான வீதியாகும். இதில் நீர் தானாகவே வழிந்தோடும். இதற்கு வடிகான் அவசியமில்லை. எனவே அதற்கான நிதியை கார்ப்பட் போடுவதற்குப் பயன்படுத்துங்கள் என் மக்கள் பிரதிநிதிகள் கூறினர்.
அதனை செவிமடுத்த குழுத்தலைவர் பிரதியமைச்சர் பைசால்காசிம் மகக்ளின் கோரிக்கை எதுவோ அதன்படி செய்யுங்கள் என்று சொன்னார். ஆனால் அதன்பின்னர் கடந்த 3தினங்களாக வடிகான் அமைப்புவேலைகள் முன்னெடுக்கப்படடுள்ளது. இதுதொடர்பில் காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி சுதர்சினி காந்திடம் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதியின் இருமருங்கிலுமுள்ள குடியிருப்பாளர்கள் பலர் இந்த அகலம் குறைந்த வீதிக்கு இரண்டு வடிகான்கள் தேவையில்லை என்றும் பாலத்தை புதிதாக அமைத்துத்தாருங்கள் என்றும் முறையிட்டுள்ளனர். அடுத்தவருட் 550 மீற்றர் தூர இவ்வீதி கார்ப்பட் இடப்படவிருக்கின்ற நிலையில் இச்சர்ச்சை தோன்றியுள்ளது.