பிரபாகரனை காட்டி எம்மை பயமுறுத்திய அதிமேதாவிகள் இன்று விக்னேஸ்வரனை முன் வைத்து கதை அளக்கிறார்கள். வெகுவாக முன் மொழியப்பட்டு வருகின்ற தமிழ் தேசியத்தின் அரசியல் நகர்வுகள் தொடர்பில் இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களுக்கான தீர்வு விடயத்தை தூக்கி பிடித்து கொண்டு வருகின்றவர்கள். வடக்கு கிழக்கு தனித்தனி மாகாணமாக பிரிவடைவதற்க்கு முன்னர் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் வடகிழக்கு பிரிக்கப்படுமாக இருந்தால் கிழக்கில் இரத்த ஆறு ஓடும் என்றும் இணைந்த வடகிழக்கில் தான் முஸ்லீம்களுக்கான தீர்வு என்றும் கூறினார்கள்.
அன்று தேசியவாதிகள் என்று தம்மை பிரகடணப்படுத்திய அரசியல் மேதாவிகள் இன்று விக்னேஸ்வரன் ஐயாவினுடைய தமிழ் மக்கள் பேரவையின் கருத்தை முன்னிருத்தி இணைந்த வடகிழக்கில் தான் தீர்வு நிலை பற்றி பேசுகிறார்கள்.
1.வடகிழக்கை பிரித்தவர்கள் நீதிமன்றம் சென்று பிரித்தார்கள் தேசிய காங்கிரஸ் தலைமை அதாஉல்லாஹ் அவர்களுக்கும் இதற்க்கும் என்ன சம்பந்தம் என பேசுகிறார்கள்.
2003 ஆண்டு காலப்பகுதியில் வடகிழக்கு பிரிப்பது தொடர்பிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களாக வடகிழக்கு பிராந்தியங்களில் அதிகாரம் செலுத்துகின்ற சூழலிலும் மு.கா உருப்பினராக அதாஉல்லாஹ் இருக்கதக்கதாக வடக்கு கிழக்கை பிரிக்க வேண்டும் என குரலெழுப்பினார். கிழக்கு மாகாணத்தில் வாழுகின்ற மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என விரும்பிய அதாஉல்லாஹ் அந்த மக்களின் நிம்மதியான வாழ்வுக்குத் தனது வாழ்வை தியாகம் செய்தவர். சுக போக வாழ்க்கைக்கு தமது அரசியலை முன்னெடுத்த தலைமைகள் நினைத்து கூட பார்க்க முடியாத தலைமை தான் அதாஉல்லாஹ்.
அந்த நேரத்தில் நாம் வடக்கு கிழக்கை பிரிக்கக் கோருவது கிழக்கில் இரத்த ஆறை தோற்றுவிக்கும் என தேசிய வாதிகள் இயக்கமென்றும் முஸ்லிம் சுயாட்சி என்றும் கூறிய வேதாந்தி இன்று வடக்கு கிழக்கை நீதிமன்றம் பிரித்தது என்பது தனது அரசியலின் இயலாமை ஆகும்.
2. வடக்கு கிழக்கு பிரிப்பது பற்றி பேசுவபர்கள் என்ன தீர்வு வைத்திருக்கிறார்கள் என கேட்கிறார்கள்.
வடக்கு கிழக்கு பிரிந்து இருப்பதே முஸ்லீம்களுக்கான தீர்வு பற்றி பேசுவதற்கான அடிப்படை என்பதை உணராத அதி புத்திசாலிகளாகவும் இருக்கிறார்கள்.வடக்கு கிழக்கை பிரிக்க முடியும் என்பதை மக்கள் மத்தியில் துணிகரமாக எடுத்தியம்பி தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் வீணாக குழப்பங்களை தோற்றுவிக்காத வண்ணம் மிகவும் புத்திசாலித்தனமாக தீர்க்க தரிசனமாக அதாஉல்லாஹ்வின் நீதிமன்ற நகர்வுகளின் முன்னெடுப்பு பற்றி இன்று வியாக்கியானம் செய்ய தேவையில்லை.
மக்கள் விடுதலை முண்ணணியின் திருகோணமலை மாவட்ட பா.உ ஜயந்த வை எத்தனை தடவை அதாஉல்லாஹ் சந்தித்து இது தொடர்பில் பேசினார் என்பதை முதலில் ஒலிவாங்கிக்கு முன்னால் நின்று உளறுபவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
3.வடமாகண முஸ்லிம்களின் நிலை என்ன என கேட்கிறார்கள்.
வடக்கு கிழக்கு இணையும் பட்சத்தில் முஸ்லீம்கள் ஒட்டு மொத்தமாக நசுக்கப்படுவர்கள் என்கின்ற நிலை எம்மை சிறுபான்மை இனரீதியான குழுவாக சித்தரிக்கின்றது. ஆனால் கிழக்கு பிரிந்திருப்பதால் முஸ்லிம் மக்கள் தனித்துவ இனமாக அடையாளப்படுத்தப்பட்டு எமது உடன்பிறப்புகளான வடபுல முஸ்லீம்களுக்கும் பாதுகாப்பளிக்கின்ற அரணாக கிழக்கு முஸ்லீம்கள் மாறுவார்கள். அதை விடுத்து வடபுல முஸ்லீம்களை இரவோடு இரவாக வெளியேற்றிய முறைமையை கிழக்கிலும் கொண்டு வருவதற்கு சாதகமான வழிமுறைகளை அதிமேதாவிகள் முயல்கின்றனர்.
இன்று விக்னேஸ்வரன் ஐயாவை தூக்கி பிடித்து பேசுகிறார்கள். தமிழர் தேசியம் அவர்களது இனத்துக்காக பேசுகின்ற அதிகபட்ச வரைமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். அவர்கள் கூட்டமைப்பு அமைத்தால் அமைக்க வேண்டும். அவர்கள் முன் மொழிவுகளை முன்வைத்தால் நாம் முன் வைக்க வேண்டும். என்கின்ற எந்த அவசியமும் எமக்கில்ல.
நாம் தனியான இனம். எமக்கான வரலாறு தனித்துவமானது. என்பது போல் நாம் தனித்துவமாக சிந்திக்க வேண்டும். தீர்வுகளை எமது அதிஉச்ச அபிலாசைகளை வைத்து முன்மொழிய வேண்டுமே ஒழிய பிரபாகரனையோ விக்னேஸ்வரனையோ முன்வைத்து எந்த முஸ்லீம் அரசியல்வாதியும் எம்மை பயமுறுத்த வரக் கூடாது. சிலரை தேசிய தலைவர்களாக உருவாக்கி கொள்கின்ற முயற்சிக்கு சோரம் போனவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட அஜன்டாவிலும் அவர்களின் பணத்திலும் இயங்குவதை இந்த சமுகம் காலம் தாழ்த்தியேனும் புரிந்து கொள்ளும்.