க.கிஷாந்தன்-
தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வேண்டி பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் 17.10.2016 அன்று காலை 9.45 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பல்வேறு வகையான வாசகங்கள் எழுதிய சுலோகங்களை ஏந்திய வண்ணம் இப்போராட்டத்தை கல்லூரியின் வளாகத்தில் தரையில் அமர்ந்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் சுமார் 200ற்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கவனயீர்ப்பு போராட்டம் கல்லூரியின் வளாகத்திற்கு வெளியில் நடாத்த தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் கல்லூரியின் பீடாதிபதி திருமதி. ரமணி அபேநாயக இதற்கான மேலீட அனுமதி கிடைக்காத பட்சத்தில் இம்மாணவர்களின் போராட்டம் வாளகத்தின் உட்பகுதியில் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நடாத்தப்பட்டது. அத்தோடு கல்லூரியின் பிரதான நுழைவாய் மூடப்பட்டிருந்ததும் குறிப்பிடதக்கது.
இருந்தும் மாணவ்ரகளிடம் இது தொடர்பில் வினாவிய போது,
எமது தாய், தந்தையர்கள் தோட்டத்தில் பணிபுரிந்து அவர்கள் பெரும் வேதனத்தின் ஊடாகவே மேல் படிப்பினை நாம் கற்று வருகின்றோம்.
இந்த நிலையில் எமது தாய், தந்தையினர் வேதன உயர்வாக ஆயிரம் ரூபாவை வேண்டி போராட்டத்தில் ஈடுப்பட்டுளளனர். இவர்களின் போராட்டம் வெற்றிப்பெற வேண்டும் என்பதற்காகவும், எங்கள் கல்வியில் நாங்கள் முன்னெற்றம் அடைய வேண்டும் என்பதற்காகவும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இப்போராட்டத்திற்கென இக்கல்லூரியில் கற்கும் தமிழ், சிங்கள மாணவர்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும் இங்கு கல்வி கற்கும் சிங்கள மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தும் இம்மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை எனவும் இவர்கள் தெரிவித்தனர்.
இப்போராட்டம் தொடர்பில் கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி திருமதி. ரமணி அபேநாயக அவர்களிடம் வினாவியபோது,
இப்போராட்டம் இங்கு கல்வி கற்கும் தமிழ் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது. கல்லூரியின் வளாகத்திற்கு வெளியில் செல்வதற்கான அனுமதியை பீடாதிபதி என்ற ரீதியில் நானே மறுத்து விட்டேன். இது தொடர்பில் கல்வி மேலீடத்திற்கு அறிவித்தலும் விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஊடகவியலாளர்கள் வளாகத்தின் உட்பகுதிக்கு உள்ளெடுக்கப்படாமைக்கு வருந்துவதாகவும், இந்த போராட்டத்தினை மாணவர்களின் விருப்பத்திற்கேற்பவே நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இப்போராட்டம் காலை 10.50 மணியளவில் நிறைவுபெற்று மாணவர்கள் தத்தமது வகுப்புகளுக்கு சென்றமை குறிப்பிடதக்கது.