எப்.முபாரக்-
“ஒரு நாட்டில் வளங்கள் அழிக்கப்படுகின்றது என்றால் அந்த நாடு அழிக்கப்படுகின்றது என்றுதான் அர்த்தமாகும் . அனுமதி பெற்றாலும் அல்லது அனுமதி பெறாவிட்டாலும் அவை அழிக்கபட்டால் அவற்றை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தேசிய சுற்றுச்சூழல் மாநாடு ஜனாதிபதி தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை காலை 10.12 மணியளவில் திருகோணமலையில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
“இன்று இந்த சுற்றாடல் மாநாடு ஆரம்பித்து வைக்கப்படுகின்றது. இது ஆரம்பம்தான். இன்றிலிருந்து நாட்டிலுள்ள மாவட்ட செயலாளர்கள் பிரதேச செயலாளர்கள் பாடசாலை மாணவர்கள் மற்றும் அமைப்பினர் எமது சூழலை பாதுகாக்கும் வகையில் மரங்களை நட வேண்டும்.
நாட்டின் பல பாகங்களிலும் காடுகள் மரங்கள் வெட்டப்படுகின்றன, மணல்கள் அகழப்படுகின்றன. இவற்றில் 50 சதவீதம் மாத்திரமே அனுமதி பெற்று நடைபெறுகின்றன. ஏனையவை முறையற்ற வகையில் இடம்பெறுகின்றன. மலையகத்தின் பல பகுதிகளிலும் ஏனைய இடங்களிலும் இவ்வாறு காடுகள் அழிக்கப்படுகின்றன. இவற்றுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த காலத்தில் இதற்கு துணைநின்ற இரண்டு அதிகாரிகளை நான் பணி நீக்கம் செய்துள்ளேன்” என்றார்.
“கடந்த இரு நாட்களுக்கு முன்னர், நான் ஒரு சுற்று நிருபத்தை அனுப்பியுள்ளேன். எந்த பிரதேசத்திலும் இவ்வாறான விடயங்களுக்கு அனுமதி பெற்றாலும் அவற்றுக்கான அனுமதியை ஜனாதிபதிக்கு அனுப்பி பெற வேண்டும் என அந்த சுற்று நிருபத்தில் தெரிவித்துள்ளேன்” எனவும் குறப்பிட்டார்.