தன்னுடைய அப்பாவின் கொலை சம்பவம் இடம் பெற்ற பிறகு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு அனைத்து பாதுகாப்புகளையும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ வழங்கியிருப்பாரோ என தனக்கு சந்தேகமாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர கூறியுள்ளார்.
ஆதாரம் இல்லாமல் நான் யாரையும் சுட்டிக்காட்டமுடியாது ,எனக்கு சந்தேகமாகதான் உள்ளது காரணம் இந்த சம்பவம் இடம் பெற்ற பிறகு கொலையாளிக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் ஹிருணிக்கா குறிப்பிட்டுள்ளார்.
தனது தந்தையின் ஐந்தாவது வருட நினைவுத் தின நிகழ்வின் பின்னர் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னடைய தந்தையின் இறுதி சடங்கிற்கு கோத்தபாய வருகை தரவில்லை, பதிலாக ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் இருந்த துமிந்தவையே சென்று பார்வையிட்டுள்ளார் என ஹிருணிக்கா கூறியுள்ளார்.
அதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக துமிந்தவை சிங்கப்பூர் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்றும் ஹிருணிக்கா தெரிவித்துள்ளார்.
எல்லா சந்தேகங்களும் தீர வேண்டுமாயின் குற்றப்புலனாய்வு பிரிவினர் புதிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர குறிப்பிட்டுள்ளார்.