தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளம் தொடர்பில் கைச்சாத்திடப்பட்டிருக்கும் கூட்டுஒப்பந்தம் மற்றும் 730ரூபா நாட் சம்பளத் தொகை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதுதான் தொகையென்றால் பதினெட்டு மாத காலம் இழுபட்டிருக்க வேண்டியதில்லை. இதைவிட கூடுதலான தொகையை பெற்றிருக்க கூடிய சந்தரப்பம் கைநழுவவிடப்பட்டுள்ளது. அதேபோல நிலுவைப்பண விடயத்திலும் அரசியல் இலாபம் தேடும் சூழ்ச்சி மேற்கொள்ளப்படுகின்றது. இதற்காக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம். இந்த கூட்டு ஒப்பந்த நடைமுறைமையை மாற்றியமைத்து பாராளுமன்றத்திற்கு பொறுப்பு சொல்லக் கூடிய ஒரு நடைமுறை அறிமுகப்படுத்தப்படல் வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பழநி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
பதினெட்டு மாத கால இழுபறியின் பின்னர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் அவர் விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது.
சர்வதேச ரீதியாக நடைமுறையில் உள்ள தொழிலாளர் உரிமைகளை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான கூட்டு ஒப்பந்த முறை இலங்கை தோட்டத் தொழிலாளர்களின் விடயத்தில் உரிய நேர்மையோடு செய்துகொள்ளப்படுவதோ அல்லது இதயசுத்தியுடன் நடைமுறைப்படுத்தப்படுவதோ இல்லை என நாம் தொடர்ச்சியாக கூறிவந்துள்ளோம். இந்த நடைமுறைக்கு கொள்கை ரீதியாக நாம் எதிர்ப்பினை தெரிவித்து வந்துள்ளோம். கூட்டு ஒப்பந்தம் நிறைவுறும் ஒவ்வொரு இரண்டாண்டு முடிவிலும் தொழிலாளர் மக்கள் போராட்டங்களை நடாத்தியே தமது குறைந்தபட்ச சம்பளவுயர்வைத்தானும் பெற்றுள்ளார்கள்.
இந்த ஆண்டு சம்பளப்போராட்டம் நாடு தழுவிய ரீதியாக சக சமூக கவனத்தையும் பெற்ற ஒரு விடயமாக மாறி மலையக மக்கள் தொடர்பான எழுச்சியாக உருவெடுத்துள்ளது. இந்த எழுச்சியை தோற்றுவித்த தொழிலாளர் மக்களுக்கும் அதனோடு இணைந்து கொண்ட பொதுமக்களுக்கும் ஆதரவு கோஷம் எழுப்பிய வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நேசச் சக்திகளுக்கும் நாம் எமது நன்றிகளைத தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த எழுச்சியின் மூலம் சம்பளவுயர்வு கோரிக்கை மாத்திரமல்ல மலையகத் தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பதும் அவர்களுக்கு உரிமைகள் வழங்கப்படல் வேண்டும் என்ற கோஷத்திற்கு ஆதரவான குரல்களும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
இதற்கு முன்னதான சந்தர்ப்பங்களில் ஆளும் அரசாங்ககங்களுடன் இருந்துகொண்டே கூட்டு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடும் தரப்பினர் மக்களை சுயாதீன போராட்டக் களத்திற்கு வராது தடுத்து வந்தனர். இந்த முறை அந்த தடை நீக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் இரகசிய பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்மானிக்கப்பட்டு வந்த நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டு ஒப்பந்தம் தோல்விகரமான ஒரு முறை என்பதையும் மலையக மக்களும் நாட்டு மக்களும் தெளிவாக புரிந்துகொள்ளக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
நாங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதான மூன்று கட்சிகளும் தொழிற்சங்கங்க இயங்கங்களுடன் தொடர்புடையவர்கள் அதேநேரம் இந்த கூட்டு ஒப்பந்த முறையை கொள்கை ரீதியாக எதிர்த்து வருபவர்கள். நாங்கள் ஆளும் இந்த அரசாங்கத்திற்குரிய ஆதரவு சக்தியாக செயற்படுவதன் பின்னணியில் சம்பள விவகாரத்தை தொழிற்சங்கம் சார்ந்ததாக மாத்திரம் அல்லாது அரசியல் சார்ந்த உரிமை பிரச்சினையாகவே முன்வைத்துள்ளோம். அதில் பிரதானமானது காணி உரிமை. அந்த காணி உரிமையுடன் தொடர்புடைய ஒரு விடயமாகவே நாம் தொழிலாளர் மக்களின் உழைப்பு வருமான விடயத்தை பார்க்கின்றோம். மக்களை நாம் தொடர்ச்சியாகவும் நாட்கூலிகளாக வைத்திருக்க போகின்றோமா அல்லது அவர்களை சுயாதீன உழைப்பாளர்களாக அங்கீகரிக்கப்போகின்றோமா என்கின்ற புள்ளியில் இருந்து சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம்.
நாங்கள் பாராளுமன்றில் ஆறு உறுப்பினர்களைக்கொண்ட தரப்பாக ஆளும் அரசாங்கத்துக்கு ஆதரவான சக்தியாக செயற்பட ஆரம்பித்தவேளை இந்த நடைமுறையில் இருந்த கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி அந்தர நிலையில் இருந்தது. அந்தர நிலையில் இருந்துகொண்டு புதிய முறைமை ஒன்று குறித்த விடயத்தை கலந்துரையாடுவதற்கும் தீர்மானம் எடுப்பதற்குமான முடியாத நிலையிலேயே, நடைமுறையில் உள்ள கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திடும் தேவை எழுந்தது. கடந்த ஆண்டு செப்டெம்பர் முதலாம் திகதி பாராளுமன்றம் ஆரம்பித்த போது ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் நான் முன்வைத்திருந்தோம்.
அது டிசம்பர் மாதத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த 24 வருட காலத்தில் பாராளுமன்றில் பிரேரணை ஒன்றின் மூலம் கூட்டு ஒப்பந்த விடயத்தை கேள்விக்கு உட்படுத்திய முதலாவது சந்தர்ப்பமாக அது அமைந்தது. அதன் பிறகு பல்வேறு விதத்திலும் முறைகளிலும், பல்வேறு அரசியல் தரப்பினராலும் கடந்த ஓராண்டு காலமாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் பாராளுமன்றில் பேசுபொருளாக்கியிருக்கிறது.
2011 ஆம் ஆண்டில் இருந்தே இந்த முறைக்கு மாற்றான ஒரு முறை குறித்து கூட்டு ஒப்பந்த தொழிற்சங்க தரப்புடன் தோட்டக்கம்பனிகள் உரையாடியிருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் அதனை தவிர்த்து இந்த கூட்டு ஒப்பந்த முறையை இழுத்துக்கொண்டு வந்துள்ளனர். அதில் அவர்களுக்கு அரசியல் லாபம் இருந்துள்ளது. இந்த ஆண்டு அந்த உண்மை வெளிப்பட்டுவிட்டது. எதிர்வரும் காலங்களில்; புதிய முறைமை தொடர்பில் பாராளுமன்றில் பிரேரணை முன்வைக்கவுள்ளோம்.
பாராளுமன்றத்திற்கு பொறுப்பு சொல்லக் கூடிய ஒரு நடைமுறை அறிமுகப்படுத்தப்படல் வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அதேநேரம் செய்யப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய நிலவைக்கொடுப்பனவுகள் தொடர்பில் நாம் அவதானத்துடன் இருப்பதோடு அதனை அரசியல் லாபம் அடையும் நோக்கில் பெற்றுக்கொடுக்காதிருக்க கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்கள் முயற்சிக்குமானால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் தயங்கமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.