பழமைவாய்ந்த எமது நாட்டு வரலாற்றுக் கதையின் மேன்மையை தற்போதைய அரசாங்கம் மென்மேலும் வலுப்படுத்தி உலகில் வலுவானதும் முன்னுதாரணம் மிக்கதுமான ஒரு நாடாக இலங்கையை கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
பண்டைய அரசர்கள் நிர்மாணித்த நீர்ப்பாசனத் திட்டங்களை நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி மிகவும் முறையாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் விவசாய சமூகத்திற்கு நீரை விநியோகிக்கக்கூடிய வகையில் புனர்நிர்மாணம் செய்யும் அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மினிப்பே வம் இவுறு எல புனர்நிர்மாண கருத்திட்டம் நேற்று பிற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் அனுபவித்துக்கொண்டு விமர்சிக்கின்றவர்கள் எத்தகைய விமர்சனங்களை முன்வைத்த போதும் நாட்டுக்காக பணிசெய்ய விரும்பும் எல்லோரையும் இணைத்துக்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
இன்று சிலர், நாளை உதயமாகும் முன்னர் அரசாங்கம் வீழ்ந்துவிடும் என்பதுபோன்ற பல்வேறு கருத்துக்களை ஊடகங்களின் ஊடாக முன்வைத்துவருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, புதிதாக ஒரு அரசாங்கம் தெரிவு செய்யப்படும்போது எல்லோருடையவும் பொறுப்பு நாட்டுக்காகவும் மக்களுக்காவும் அந்த அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதே அன்றி விமர்சித்துக் கொண்டிருப்பதல்ல,
தற்போதைய அரசாங்கம் நாட்டை காட்டிக்கொடுத்து, நாட்டை துண்டாட முயற்சித்து வருவதாகவும் புதிய அரசியல் அமைப்பில் பௌத்த சமயத்திற்கு உரிய இடத்தை வழங்காமல் இருப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றிவருவதாகவும் தெரிவித்துவரும் எல்லோரிடமும் தம்மைச் சந்தித்து அத்தகைய நிகழ்வுகள் எங்கு நடைபெறுகின்றன என்பதுகுறித்து தமக்கு தெளிவுபடுத்துமாறு மிகவும் அன்புடன் அழைப்பு விடுக்கின்றேன்.
நாட்டில் ஒரு பலமான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு எப்போதும் விவசாய சமூகத்தின் வாழ்க்கைத்தரத்தையும் அவர்களது பொருளாதார நிலைமையையும் பலப்படுத்த வேண்டும் எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டுக்கு எத்தகைய முதலீடுகள் கிடைத்தபோதும் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் வரலாற்று சாட்சியாக இருப்பது விவசாய பொருளாதாரத்துடன் நாட்டைக் கட்டியெழுப்புவதாகும்
விவசாய சமூகத்தையும் விவசாய பொருளாதாரத்தையும் வலுவூட்டுவதற்காக அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடன் உள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, பெரிய மற்றும் சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களை புனர்நிர்மாணம் செய்வதற்காக ஒரு பெரும் தொகையை ஒதுக்கியிருப்பதாகவும் அதிலிருந்து உரிய பயனைப் பெற்றுக்கொள்வது விவசாய சங்க பிரதிநிதிகளின் பொறுப்பாகும் என்றும் குறிப்பிட்டார்.
ஹசலக்க நகரில் மினிப்பே ‘வம் இவுறு எல’ கருத்திட்டப் பணிகள் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச்செயற்திட்டப் பணிகள் ஆரம்பித்து வைக்கபட்டதை நினைவு கூறும் முகமாக மரக்கன்று ஒன்றையும் ஜனாதிபதி நாட்டினார்.
மினிப்பே விவசாய சமூகத்தினால் விசேட அறிக்கை ஒன்றும் இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன், அதில் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கைகளின்படி மினிப்பே விவசாய சமூகத்திற்கு காணி உறுதிகளை வழங்குவதற்கான ஒரு விசேட கருத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மினிப்பே ‘வம் இவுறு எல’ கால்வாயின் அணைக்கட்டினை 3.5 மீற்றர் உயர்த்தி, 74 கிலோ மீற்றர் நீளமுடைய மினிப்பே ‘வம் இவுறு எல’ கால்வாயை புனர்நிர்மாணம் செய்யும் இக்கருத்திட்டத்திற்கு 2600 மில்லியன் ரூபா செலவாகுமென உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்குகின்றது.
இச்செயற்திட்டம் 04 வருடங்களில் நிறைவு செய்யப்படவுள்ளதோடு மினிப்பே விவசாய சமூகத்தைச் சேர்ந்த 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதன்மூலம் நன்மையடையவுள்ளனர். இச்செயற்திட்டத்தின் ஊடாக 7500 ஹெக்டயர் விவசாய நிலங்கள் இருபோகங்களின் போதும் விவசாய அறுவடைகளை அதிகரித்துக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும்.
முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்ன அமைச்சர்களான விஜித் விஜயமுனி சொய்சா, எஸ்பி.திசநாயக்க, பிரதியமைச்சர்களான அனுராத ஜயரத்ன, லக்ஷ்மன் வசந்த பெரேரா, மத்திய மாகாண ஆளுனர் நிலூக்கா ஏக்கநாயக்க, முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.