மறைந்த மர்ஹூம் அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட தென் கிழக்கு பல்கலைக்கழகமானது தனது விடலை பருவத்தை தாண்டி மெச்சூரிட்டி வயதில் இருந்துகொண்டிருக்கிறது. அது பாரிய சமூக கடமைகளை தன்னகத்தே கொண்டுள்ள போதிலும் அவற்றை நிறைவேற்றி வைக்கும் பொறுப்பில் சில குறைகள் இருப்பதும் இன்றய நாளில் சுட்டிக்காட்டப்பட்ட வேண்டியதொன்றாகும்.
அனைத்து இனங்களையும் ஒருங்கிணைத்து ஒன்றிணைந்த தேசத்துக்கு முன்மாதிரியாக செயல்படவேண்டிய பாரிய பொறுப்பில் தென்கிழக்கு பல்கலைக்கழக குறிப்பாக கல்விச் சமூகம் உள்ளது.
இன்று நாடு ஒரு புதியதோர் அரசியல் யாப்பினை மக்கள் முன் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இதற்கு கடந்த கால சிங்கள பெருந்தேசிய அரசுகளின் ஒரு பக்க செயல்பாடுகள் மூலமான புறக்கணிப்பு, வன்முறை கலந்த அரசாட்சி என்பன போன்ற பல்வேறு காரணிகளுக்கு பிராயச்சித்தம் தேடும் அல்லது பொருளாதார ரீதியில் முடக்கப்பட்டுள்ள இலங்கை தேசத்தினை சர்வதேசத்தின் பிடியில் இருந்து தளர்த்துவதற்கான ஒரு புதிய தந்திரோபாயமாக புதிய அரசமைப்பு விவகாரம் கையிலெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் தேசத்தின் முழு நன்மை கருதி இலங்கை நாட்டில் இருக்கும் முழு சமூகத்தினையும் கவர்ந்திழுத்து செயலாற்ற வேண்டிய பொறுப்பினை தென்கிழக்கு பல்கலைக்கழக சமூகம் கொண்டிருக்கிறது. இந்த நாட்டில் எந்த ஒரு பல்கலைக்கழகமும் கொண்டிருக்காத விசேட சிறப்பு இயல்புகளை கொண்டிருக்கிறது. குறிப்பாக மாணவர் பரம்பல் இங்கு எல்லா இனத்தவர்களுக்கும் கல்வி கற்கின்றனர். இங்கு இனமத பேதம் முற்றாக களையப்படும் ஒரு அரிய சந்தர்ப்பம் வித்திடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக சமூகம் அனைத்து மாணவர்கள், புத்திஜீவிகள், பிராந்திய வல்லுனர்கள், தொழில் சார் திறமையாளர்கள், பல்துறை அரசியல் தலைமைகள் அனைவரையும் ஒருங்கிணைக்கின்ற ஒரு தளமாக இதனை கையாள வேண்டும். இன்னும் இன்னும் அரசியல் தலைமைகளால் மாத்திரம் இந்த சமூகத்துக்கு தீர்வு பெற்றுத்தரும் என்கிற கனவில் இருந்துவிட முடியாது.
தற்போதுள்ள அரசியல் தலைமைகள் குறிப்பாக முஸ்லீம் அரசியல் தலைமைகள் எடுப்பார் கைப்பிள்ளைகளாக எதையுமே துணிந்து செய்வதற்கு வக்கற்றவர்களாகவே காண முடிகிறது. அன்றாடம் எமது சமூகம் எதிர்நோக்கும் சாதாரன பிரச்சினைகளுக்கு கூட தீர்வினை பெறுவது அவர்களால் கடினமான காரியமாகவே உள்ளது. அந்தளவு பல்வேறு பின்புல சக்திகளால் முடக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறலாம்.
இந்த சந்தர்ப்பத்தில்தான் எதிர்வருக் காலங்களில் முன்வைக்கப்பட உள்ள அரசியல் தீர்வு திட்டம் குறித்து அனைத்து சமூகத்தினையும் ஒன்றிணைக்க எதுவித முன்னெடுப்புகளையும் இந்த சமூகத்தின் சார்பாக மேற்கொள்ளாமல் இருப்பது குறித்து சிந்திக்க வேண்டும். கிழக்கு மக்களின் வாழ்வுரிமை வடக்கோடு எவ்வாறான பிணைப்பினை உருவாக்கவேண்டும், தென்னிலங்கை சிங்கள பெரும்பாண்மை மக்களோடு இருக்கும் முஸ்லீம் சமூகத்தின் உறவு நிலை என்பன ஆராயப்பட்டு சமூகங்களின் சகவாழ்வு வலுப்படும் வகையில் திட்டங்கள் உருவாக்கப்படல் வேண்டும்.
அத்துடன் எமது இந்த பல்கலைக்கழகம் சமூகம் சார், ஊர் சார், பிரதேசம் சார், மாவட்டம் சார் மட்டுமல்லாது முழு நாடும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்த ஓர் ஆய்வுக்கான தளமாகும். அதனை இந்த நாட்டின் ஏனைய பல்கலைக்கழகங்களோடு இணைந்து ஏனைய சமூகத்தோடு இணைந்து ஒருங்கிணைக்கவேண்டிய தேவை இருக்கிறது. அதற்கான அனைத்து வளங்களையும் இப்பல்கலைக்கழகம் கொண்டிருக்கிறது.
அரசியல், சமூகவியல், பொருளியல், முகாமைதுவம், பொறியியல், வணிகம், வர்த்தகம், இஸ்லாம், கலை என்பன ஒருங்கே இணைந்து காணப்படுகிறது. இது இந்த சமூகத்துக்கு கிடைத்த மிகப்பெரும் வளமாகும். இதனை நாம் பயன்படுத்த முனையாமல் இருப்பது குறித்து சிந்திக்கவேண்டும். அத்துடன் இது வரலாற்று ஆய்வு ரீதியிலான சமூகக்கடமையாகும்.
எல்லா பிரச்சினைகளுக்கும் எமது அரசியல் தலைமைகள் தீர்வினை பெற்றுத்தருவார்கள் என்று எண்ணி கல்விச்சமூகம் ஒன்று விழித்தெழாமல் தங்கள் கடமைகளை அரசியல்வாதிகள் மீது சுமத்திவிட்டு அதே அரசியல் தலைமைகளை தாமும் தமது பங்குக்கு குற்றம் சொல்வது போன்ற சாதாரண பாமரன் நிலையில் இருந்து விடுபடும் சூழல் வரும்போதுதான் எமது சமூகம் விழித்தெழும்.
இப்பல்கலைக்கழக கல்விச்சமூகத்தினால் சமூகத்தின் மீதான ஆய்வினை அதற்கான தேடலை ஆங்கங்கங்கே ஒரு சிலரால் பொறுப்புணர்வுடன் முன்வைக்கப்படுகின்றன. இருந்தபோதும் அவை அனைத்தையும் ஒருமுகப்படுத்தி அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைகின்ற கடமையினை செய்வதுதான் காலத்தின் தேவையாகும். எமது அழகிய இலங்கை தாய் நாட்டின் ஒட்டுமொத்த நலன் குறித்து தங்களது முன்மொழிவினை முழு இலங்கை தேசத்துக்கும் சமர்பிக்கப்படுகின்ற போது அவை எதிர்காலத்தில் ஆராயப்பட்டு அவற்றில் உள்ள நலன்கள் பரிசீலிக்க வாய்ப்புக்கு உட்படும்.
எமது தெளிவான சிந்தனை ஏனைய சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் போது அது குறித்து சாதகமான அத்துடன் எமது சமூகத்தின் மீதான நல்லெண்ணம் கொண்ட பார்வை ஏற்படும். நாங்கள் எங்களுக்கான தீர்வினை மாத்திரம் சொல்லாமல் முழு நாட்டு நலன் குறித்து பேசுகின்ற தீர்வாக அது அமைத்தல் வேண்டும் அதுதான் தற்போது எமது நாட்டின் சமூகங்களுக்கிடையிலான சந்தேகப்பார்வையை முற்றாக களைவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தும்.
இன்று இந்த நாட்டில் அரசியலமைப்பை கையாளுகின்ற சிங்கள தரப்பினர், அரசியல் துறைசார் நிபுணர்கள் எல்லோரையும் எமது பல்கலைக்கழகத்திற்கு வரவழைத்து பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடல்களையும் கருத்தாடல்களையும் எமது சமூகத்தின் பல்வேறுபட்ட தரப்பினரையும் உள்ளடக்கிய விரிவான ஆவணம் ஒன்று உருவாக்கப்படல் வேண்டும். எமக்கான தீர்வினை சிங்கள பெரும்பாண்மை ஆய்வாளர்களால், அரசமைப்பு துறை நிபுணர்களால் சொல்லப்படுகின்ற தீர்வாக அது முன்கொண்டுவரப்படல் வேண்டும்.
தமிழர் தரப்பு இன்று யாழ் பல்கலைக்கழகத்தை சிறப்பாக பயன் படுத்தி கொண்டிருக்கிறது. ஆனால் அதுவும் ஒரு சமூகம் குறித்து மாத்திரம் பேசிக்கொண்டிருக்கிறது. அந்த குறையினை களையும் சந்தர்ப்பம் எமது தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு இருக்கிறது.
அத்துடன் வட புல தமிழ், முஸ்லீம் இனத்தையும் தென்னிலங்கை சிங்கள சமூகத்தையும் ஒருமுகப்படுத்தி ஒருங்கிணைக்கும் பாரிய பொறுப்பு இந்த பல்கலைக்கழகத்தினை சார்ந்தது என்பது ஒரு மிகையான கருத்தல்ல. வெறும் பட்டதாரிகளை உருவாக்கி அவர்களை தொழிலுக்கு அலையவிட்டு இன்னும் இன்னும் அரசுக்கு சுமையாக உருவாகும் வெறுமையில் இருந்து மாற இந்த சமூகம் தயாராக வேண்டும்.
ஒரு சமூகத்தின் மீது திணிக்கப்படும் ஆக்கபூர்வமான சிந்தனைத்துவம் மிக்க கருத்தாடல்கள்தான் நாளை அந்த சமூகத்தை சிந்திக்க தூண்டும், அவ்வாறான சிந்தனை தான் எதிர்காலத்துக்கு எமது இளம் சந்ததிகளை சரியாக வழிப்படுத்தும். எங்கு சிந்தனை மழுங்கி வெறும் பகட்டுகளுக்காய் சஞ்சரிக்கிறோமோ அப்போது எமது முழு சமூகத்தினதும் எதிர்க்கலாம் கேள்விக்குறியாக நிலைக்கு தள்ளப்படும் என்பதே திண்ணம்.
மர்ஹூம் அஷ்ரப் இந்த பல்கலைக்கழகம் தொடர்ப்பிலும் தனது சமூகம் தொடர்பிலும் கண்ட மிகப்பெரும் கனவு இதுவாகவே இருக்க முடியும். அன்னாரை நினைவு கூறுகின்றவர்கள் அவர் விட்டுச்சென்ற சமூகப்பணியினை தொடர தகுந்த வழிமுறைகளை கையாள ஒன்றிணைந்த பொறிமுறை உருவாக்கப்பட்டு முழு தேசத்திற்கும் முன்மாதிரியான தீர்வுப்பொதியினை சமர்ப்பிக்கும் யதார்த்தமான பல்லின சமூக ஒற்றுமைக்கு இனியாவது களம் கொடுபடல் வேண்டும்.
கட்டுரையாளர் கலீல் எஸ் முஹம்மத்-