சிறுபான்மையினரான தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களை பிரிப்பதற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்
களுவாஞ்சிக்குடி சந்தைக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்
பிரித்தாளும் தந்திரத்தைக் கொண்டு முஸ்லிங்கள் மற்றும் தமிழர்களுக்கிடையில் மோதல்களையும் முரண்பாடுகளையும் ஏற்படுத்துவதற்கான சதி நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அவர் கூறினார் எனவே இது குறிதது சிறுபான்மை சமூகத்தினர் விழிப்பாக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்
அது மாத்திரமன்றி சிறுபான்மையினருக்கான அரசியல் தீர்வு எவ்வித இழுத்தடிப்புக்களுமின்றி விரைவில் வழங்கப்பட வேண்டும் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
தற்போது தோட்டத் தொழிலாளர்கள் தமது சம்பளத்துக்காக போராடி வேண்டி ஏற்பட்டிருப்பதும் அரசியல் ரீதியாக அவர்களது உரிமைகள் கேள்விக்குட்படுத்தப்பட்டிருப்பதே காரணம் என முதலமைச்சர் குறிப்பிட்டார்
இதேவேளை யாப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டியது கட்டாயமான விடயமாகும் எனவும் அவர் கூறினார்
அத்துடன் தமது மாகாணத்துக்கு யாப்பினூடாக அதிகாரங்கள் வழங்கப்பட்ட போதிலும் அவை அமுல்ப்படுத்தப்படாமையினாலேயே சொந்த மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை அமைச்சர்களிடம் இரந்து கேட்டு முன்னெடுக்க வேண்டியுள்ளதாக முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் சுட்டிக்காட்டினார்
இந்த நிலைமை மாற்றப்பட்டு சிறுபான்மை மக்களும் ஏனைய சமூகத்தினரைப் போன்று சகல அதிகாரங்களும் பெற்று தலைநிமிரந்து வாழ்வதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.