சுலைமான் றாபி-
ஒலுவில் துறைமுக நிர்மாணத்தினால் தற்போது நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பாரிய கடலரிப்பு தொடர்பான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப்பேரணி இன்றைய தினம் (05) நிந்தவூர் கடற்கரையிலிருந்து ஆரம்பமாகி பிரதான வீதீயீனூடாக சென்று நிந்தவூர் பிரதேச செயலகத்தினை வந்தடைந்தது.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், நிந்தவூர் மீனவ கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம், கரைவலை மீனவர் சங்கங்கள், மீனவர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து கலந்து கொண்டதோடு, நிந்தவூர் மீனவ கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தினரால் நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி ஆர்.யு. காபித்தூள் ஜலீலிடத்தில் மகஜரும் கையளிக்கப்பட்டது.
அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
நிந்தவூர் பிரதேச ஜீவனோபாய தொழில்களில் ஒன்றான மீன்பிடி தொழிலானது கடந்த சுனாமியின் போது முற்றாக செயலிழந்த போதும், தற்போது அது ஓரளவிற்கு மீள உயிர்பெற்று வரும் நிலையில் கரைவலை மீன் பிடி தொழில் அன்றாடம் செயலிழந்து வருகின்றது. இதனால் பல மீனவர் குடும்பங்கள் பொருளாதார ரீதியான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒலுவில் வெளிச்ச வீட்டுப் பிரதேசத்தில் ஏற்பட்ட கடல் அரிப்பினை தடுப்பதற்காக போடப்படும் கற்கள் காரணமாக நிந்தவூரில் கடந்த 02 வாரங்களாக இப்பிரதேசத்தில் உள்ள மாட்டுப்பளை, அட்டப்பள்ளம், வௌவாலோடை, மத்தியத்துறை மற்றும் வெட்டாத்துப் பிரதேசம் ஆகிய இடங்களில் பாரிய கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது 100 மீற்றர் உள்நோக்கி வந்து கடற்கரை வீதிக்கு அருகில் வரை அலை வருகின்றது. இந்த நிலை இவ்வாறு தொடர்ந்தாள் எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் கடல் ஊரிட்க்குள் புகும் அபாயமும் காணப்படுகிறது.
மேலும் இந்த கடலரிப்புக் காரணமாக இப்பகுதியில் இருந்த தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இப்பிரதேசத்திலுள்ள 40 கரைவலைத் தோணிகள், 215 ஆழ்கடல் தோணிகள் தொழில் செய்ய முடியாமலும், தங்களது தோணிகளை பாதுகாப்பாக வைக்க இடமில்லாமல் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர். மேலும் இந்த கடலரிப்பினினால் மாட்டுப்பாளைப் பிரதேசத்திலுள்ள பல ஏக்கர் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர ஒலுவில் துறைமுகத்தின் அலை அணை சுவர் கடலில் போடப்பட்டதன் பின்னரே நிந்தவூர் பிரதேசத்தில் கடலரிப்பு ஏற்படத் துவங்கியுள்ளது. தற்போது இத்துறைமுகம் படகுகள் துறைமுகமாக இருப்பதனால் கப்பல் துறைமுகத்திற்காக கடலில் போடப்பட்ட கடலலை சுவரினை அகற்றுவதன் மூலம் இப்பிரதேசத்தில் இடம்பெறும் கடலரிப்பை தடுக்க முடியும் என அந்த மகஜரில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.