முஸ்லிம்களின் புனிதமிக்க மக்கா நகரத்தின் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் நேற்று நடத்திய ஏவுகணைத் தாக்குதலை சவுதி அரேபியா முறியடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் ஏற்பட இருந்த பெரும் அழிவு தடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. யெமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் இந்த ஹூதி இனத்தவர்கள் போராடி வருகின்றனர். இவர்களை ஒடுக்க சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையிலேயே மக்காவை குறிவைத்து ஹூதிகள் யெமனின் சாதா மாகாணத்தில் இருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த ஏவுகணை மக்காவில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தூரத்தில் வைத்து சவுதி விமானப்படையினரால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு நிகழவிருந்த அழிவுகள் தடுக்கப்பட்டதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
யெமன் நாட்டின் வடக்கில் அமைந்துள்ள “ஸாஇதா” மாகாணத்தில் தோன்றிய “ஷிஆ” சிந்தனையின் பின்னணியில் இயங்கும் அரசியல் இயக்கமே இந்த ஹூதிகள் ஆவர். அந்த மாகாணத்தையே தனது கேந்திர நிலையமாக அமைத்து அது செயல்பட்டு வருகிறது. “ஷிஆ” க்களின் கொள்கைகளையும், திட்டங்களையும் நிறைவேற்றும் நோக்கில் இவ்வியக்கம் யெமன் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி வருகிறமை குறிப்பிடத்தக்கது.