வட மாகாண முஸ்லிம்கள் இனச்சுத்திகரிக்கப்பட்டு 26 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் அம்மக்கள் தமது இறைமையை காக்கும் வகையில் சகல அடிப்படை வசதிகளுடன் அவர்களை மீள் குடியேற்ற அரசும், சர்வதேசமும், முஸ்லிம், தமிழ் கட்சிகளும் உடனடியாக முயற்சி எடுக்க வேண்டும் என உலமா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது பற்றி அக்கட்சி தெரிவித்துள்ளதாவது,
வட மாகாண முஸ்லிம்கள் தமிழ் பேரினவாதிகளால் இனச்சுத்திகரிப்புக்குள்ளாகி இந்த மாதத்துடன் 26 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டது. ஆனாலும் இன்னமும் அவர்களின் வாழ்வு பற்றி தேசமோ சர்வதேசமோ கவலை கொள்ளாமல் இருப்பது கவலையளிக்கிறது. வட மாகாண முஸ்லிம்கள், முஸ்லிம்கள் என்ற ஒரேயொரு காரணத்துக்காகவே வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். 2009ல் யுத்தம் ஒழிக்கப்பட்டதிலிருந்து ஓரளவு அவர்கள் மீள் குடியேறினாலும் அவர்களுக்குரிய அடிப்படை வசதிகள் கிடைக்கப்பெறுவதை சில இனவாதிகள் தடுத்து வருவதை அவதானிக்க முடிகிறது.
அம்மக்களின் மீள் குடியேற்றத்துக்காக அ. இ. மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தனித்து நின்று போராடிக்கொண்டிருக்கின்றார். இதன் காரணமாக தமிழ் மற்றும் சிங்கள போரினவாதிகள் அவருக்கெதிராக பல சதிகளை ஊடகங்கள் மூலம் அரங்கேற்றிய போதும் தனிச்சிங்கமாக அவர் போராடிக்கொண்டிருப்பதை காண்கிறோம். ஆனால் அவருக்கு பக்க பலமாக இலங்கை முஸ்லிம்களின் பாரிய வாக்கு வங்கி பெற்ற கட்சி என சொல்லும் முஸ்லிம் காங்கிரஸ் தார்மீகமான ஒத்துழைப்பை வழங்காமல் இருப்பது கவலைக்குரியதாகும்.
புலிகள் வட மாகாண முஸ்லிம்களை விரட்டிய போது அஷ்ரபிடம் செல்லுங்கள் என்றுதான் கூறினர். சரி பிழை என்பதற்கப்பால் வட மாகாண முஸ்லிம்கள் வெளியேற்றப்படுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகமும் ஒரு காரணம் என்பதை நாம் மறுக்க முடியாது.
அதே போல் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் கோடிக்கணக்கான நிதிகள் ஒதுக்கப்பட்டு வடக்கில் பல பள்ளிவாயல்கள் பனரமைக்கப்பட்டன. அத்துடன் முஸ்லிம்கள் குடியேறுவதற்கும் சில உதவிகள் செய்யப்பட்டன. ஆனால் இந்த நல்லாட்சியில் அனைத்தும் வாய்ப்பேச்சாகவே உள்ளது.
அத்தோடு வட மாகாண முஸ்லிம்கள் தமது பிரச்சினைகளை ஐ நா வரை கொண்டு செல்வதற்கு அரசியல் கட்சிகள் உதவி செய்ய வேண்டும். தனி நபர்கள் இப்பிரச்சினைகளை ஐ நாவுக்கு கொண்டு செல்வதை விட முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைமையில் கொண்டு செல்வதே பெறுமதிமிக்கதாக இருக்கும். அதற்குரிய முழு ஒத்துழைப்பையும் முஸ்லிம் உலமா கட்சி வழங்கும் என தெரிவித்துக்கொள்வதுடன் எதிர் வரும் 10ம் திகதி முதல் அந்த வாரம் முழுவதும் வடமாகாண முஸ்லிம் அகதிகள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு அந்த வாரத்தில் நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களும் அந்நாளில் வட மாகாண முஸ்லிம்களின் கௌரவமான மீள் குடியேற்றத்தை வலியுறுத்தி கூட்டங்கள் நடத்துவதுடன் பிரார்த்தனைகளிலும் ஈடு படும் படி உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.