க.கிஷாந்தன்-
இயற்கை அனர்த்தத்தினால் 2014.10.29 அன்று உயிர்நீத்த கொஸ்லந்தை – மீரியபெத்தை மக்களுக்கும், மலையக மக்களின் விடுதலைக்காக உயிர்நீத்த தியாகிகளுக்காகவும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஒன்று அட்டனில் 30.10.2016 அன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றது.
இந்நிகழ்வை இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் பெருந்தோட்ட சமூக மேம்பாட்டு திருப்பணியும், நீதிக்கும் சமாதானத்திற்குமான சர்வமத அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது அட்டன் – டிக்கோயா நகர சபை முன்றலிலிருந்து நகரத்தின் மணிக்கூடு கோபுரம் வரை பிரதான வீதியில் பேரணி ஒன்றும் இடம்பெற்றது.
அதேவேளை பேரணியில் கலந்து கொண்ட மக்கள் மணிக்கூடு கோபுரத்திற்கு அருகில் இவ்வாறு உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்திகளை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
அத்தோடு மலையகத்தில் இனங்காணக்கூடிய மண்சரிவுகள் இருக்கும் இடங்களில் இருந்து மக்களை பாதுகாக்ககூடிய நடவடிக்கை மற்றும் தொழிலாளர்களுக்கான வாழ்வாதார அடிப்படை போன்ற 9 அம்ச கோரிக்கையும், அரசாங்கத்தின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் சம்மந்தப்பட்ட ஏனையோர்களின் கவனத்திற்கு சமர்ப்பிக்கும் வகையில் மகஜர் ஒன்றும் இதன்போது ஊடகவியலாளர் ஊடாக சென்றடையும் வகையில் வழங்கப்பட்டமையும் குறிப்பிடதக்கது.