முகைடீனுக்கு கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்க தென்கிழக்குப் பல்கலைக்கழகம் முன்வர வேண்டும்..!

முஸ்லிம்களின் உரிமை மீறல்கள் தொடர்பில் பல புத்தகங்களையும் ஆவணப்படுத்தல்களையும் மேற்கொண்டுள்ள எம்.ஐ.எம்.முகைடீனுக்கு கௌரவ கலாநிதிப்பட்;டம் வழங்க தென்கிழக்குப் பல்கலைக்கழகம் முன்வர வேண்டும் என கிழக்கு முஸ்லிம்களின் உரிமைகளுக்கான அமைப்பு வேண்டுகோள் விடுத்தள்ளது.

இது தொடர்பில் கிழக்கு முஸ்லிம்களின் உரிமைகளுக்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது –

எம்.ஐ.எம்.முகைடீன் என்பவர் தொடர்பிலும் அவர் இலங்கை முஸ்லிம்களுக்கு செய்த பணி தொடர்பிலும் எமது அவதானத்தை செலுத்த வேண்டியுள்ளது. இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் அவர் எழுதிய புத்தகங்கள் தான் இன்று முஸ்லிம்கள் மீதான உரிமை மீறல்களுக்கான ஆவணங்களாகவும் சாட்சிகளாகவும் உள்ளன.

இலங்கை முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள், மனித உரிமை மீறல்கள், அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தில் முஸ்லிம்கள், வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், அளுத்கம முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களும் பள்ளிவாசல் உடைப்புக்களும், கொழும்பு முஸ்லிம்களின் அவலநிலை என பல விடயங்களை ஆவணம் செய்த ஒருவராக இவர் திகழ்கிறார்.

இவரினால் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சுமார் 15க்கு மேற்பட்ட புத்தகங்களே இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை தேசிய ரீதியாக மட்டுமன்றி சர்வதேசத்திற்கும் கொண்டு சென்றுள்ளன.

இன்று முஸ்லிம்கள் தொடர்பில் எழும் பிரச்சினைகளுக்கான தரவுகளும் புள்ளிவிபரங்களும் இவரிடமே உள்ளன. இவர் வெளியிட்டுள்ள ஆவணங்களே துல்லியமான தரவுகளையும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் முன்வைக்கின்றன.

முஸ்;லிம் சமுகத்தின் இருப்பு தொடர்பில் அதிகம் சிந்தித்த ஒருவராக இவர் உள்ளார். இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு கட்சி வேண்டும் என்று சிந்தித்து டாக்டர் பதியுதீன் முகம்மதுடன் இணைந்து முஸ்லிம்களுக்கான முதலாவது தனித்துவ அரசியல் கட்சியை ஆரம்பித்தவர். இவரை; செயலாளராகவும் டாக்டர் பதியுதீன் முகம்மத் தலைவராகவும் கொண்டு முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி என்னும் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. 

இக்கட்சியே முதன் முதலில் புலிகளுடன் 1988ம் ஆண்டு பேச்சுவார்த்தை நடத்த இந்தியா சென்று முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பில் ஒப்பந்தம் ஒன்றையும் மேற்கொண்டிருந்தது.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வில் வடகிழக்கு முஸ்லிம்களுக்கு முஸ்லிம் தனிமாகாணம் என்ற கருத்தை முதன் முதலில் வெளியிட்டவரும் இவரே. முஸ்லிம் தனிமாகாணம் தொடர்பிலும் முஸ்லிம் கரையோர நிர்வாக மாவட்டம் தொடர்பிலும் பூரண விளக்கத்தை புள்ளிவிபரங்களுடன் இவரே முன்வைத்துள்ளார். 

மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்கள் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கு அடிப்படையாக இருந்தவர்களில் இவரும் ஒருவர். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தற்போதைய அமைவிடமானது அரிசி ஆலையாகவும் முதலை, பன்றிகள் வாழும் காடாகவுமே அப்போது இருந்தது. அவ்விடத்தை பல்கலைக்கழக அமைவிடமாக மாற்றும் பொறுப்பு இவரிடமே அஸ்ரப் ஒப்படைத்தார்.

இப்பல்கலைக் கழகத்திற்கான உள்ளக கட்டுமான வேலைகளுக்கான குழுவின் தலைவராக அஸ்ரபினால் நியமிக்கப்பட்டவர் இவரே. அதுமாத்திரமன்றி முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளராகவும் அஸ்ரப் நியமித்திருந்தார்.

இவர் இலங்கையில் உள்ள நில அளவையாளர்களில் சிரேஸ்டமானவர் என்பதனால் இவரே தென்கிழக்கு பல்கலைக் கழகத்திற்கான நில வடிவமைப்பையும் கட்டிடங்களுக்கான அமைவிடங்களையும் செய்தவர்.

இவ்வாறு எத்தனையோ விடயங்களை அடுக்கிக் கொண்டு போகலாம். முஸ்லிம் சமுகம் தொடர்பில் ஒவ்வொரு விடயமாக பார்த்து பார்த்து வேலை செய்த இவருக்கு இந்த முஸ்லிம் சமுகம் செய்த கைமாறுதான் என்ன?

தற்போது 81 வயதாகியுள்ள இவர் தனது முதுமைப் பருவத்தில் வாழ்ந்து வருகின்றார். இன்றும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான ஆவணப்படுத்தல்களை மேற்கொண்டு வருகின்றார்.

எம்.ஐ.எம்.முகைடீன் என்பவர் சமுகச் செயற்பாட்டில் ஈடுபடாமல் தனது கல்விச் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்திருப்பார் என்றால் இலகுவாக கலாநிதிப்பட்டங்களைப் பெற்றிருப்பார். எனினும் இவர் தன்னை விட தனது சமுகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயற்பட்டுள்ளார். சுமார் ஐம்பது வருடங்களை முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஆவணப்படுத்துவதற்கு செலவழித்துள்ளார். 

இன்று கலாநிதிப்பட்டம் முடித்தவர்களின் எத்தனையோ ஆய்வுகள் சமுகத்திற்கு பலனின்று ராக்கைகளில் புழுதிபடிந்து கிடக்கின்றன.

எம்.ஐ.எம்.முகைடீன் போன்ற சமுக செயற்பாட்டாளர்களை முஸ்லிம் சமுகம் கௌரவிப்பதன் மூலமே எதிர்கால முஸ்லிம் சமுதாயத்திற்கான சமுக செயற்பாட்டாளர்களை உருவாக்க முடியும். 

கடந்த முறை முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம்.மன்ஸூர் அவர்களுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கி கௌரவித்தது. அதே போன்று இம்முறை எம்.ஐ.எம்.முகைடீனுக்கு அவர் உயிருடன் இருக்கும் போது கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கி கௌரவிக்க தென்கிழக்கு பல்கலைக்கழகம் முன்வரவேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பில் தென்கிழக்கு பல்கலைக்கழத்தின் செனற் ஆராய வேண்டும் எனவும் வேண்டப்படுகின்றது.

இவர் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் ' தலைவர் அஸ்ரப் உயிருடன் இருந்திருந்தால் எம்.ஐ.எம்.முகைடீனுக்கு உயர் கௌரவத்தை பாராழுமன்றத்தில் வழங்கியிருப்பார்' எனக் குறிப்பிட்டிருந்ததை நாம் இந்த இடத்தில் சுட்டிக் காட்டுகின்றோம்.

தலைவர் அஸ்ரப் இல்லாத இத்தருணத்தில் தற்போது செயற்படும் முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள், கல்வியலாளர்கள், உலமாக்கள் இவ்விடயம் தொடர்பில் அதிக அக்கறை செலுத்துமாறு கிழக்கு முஸ்லிம்களின் உரிமைகளுக்கான அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது.
ஏ.எல்.ஆஸாத்,
சட்டக்கல்லூரி.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -