எம்.ரீ. ஹைதர் அலி-
பிரதேச அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடும் காத்தான்குடி பிரதேசத்திற்கான அபிவிருத்திக் குழுக் கூட்டமும் 10.10.2016ஆந்திகதி திங்கள்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தொடரில் பின்வரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களினால் முன்மொழிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
கட்டிட பொருட்கள் கிடைக்காமை காரணமாக காத்தான்குடியின் அபிவிருத்தி வேலைகள் ஸ்தம்பிதம்.
காத்தான்குடியில் நடைபெறுகின்ற அபிவிருத்தி பணிகளின் கட்டுமான வேலைகளுக்கு தேவையான பொருட்கள் உரிய நேரத்தில் கிடைக்காமலிருப்பதனால் அவ்வேலைகள் ஸ்தம்பித்து போகின்ற ஒரு நிலை காணப்படுகின்றது. எனவே இதனைக்கருத்திற் கொண்டு ஏனைய அனைத்து ஊர்களுக்கும் கிடைப்பது போன்று கள், மண், கிரவல் போன்ற அனைத்து கட்டுமான பொருட்களையும் உயர்மட்ட இடங்களில் கதைத்து உடனடியாக எமது ஊருக்கும் பெற்றுக் கொடுக்குமாறு கௌரவ தவிசாளர் அவர்களை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கேட்டுக் கொண்டார்.
வடிகான்களுக்கு மூடிகள் இடப்படாமை காரணமாக மக்கள் அசௌகரியம்.
வீதி அபிவிருத்தி அதிகார சபை மூலம் புனரமைப்பு செய்யப்பட்ட அல்-ஹிரா பாடசாலைக்கு முன்னாலுள்ள வடிகான் மற்றும் ஹுசைனியா பள்ளிவாயலுக்கு முன்னாலுள்ள வடிகான் ஆகியவற்றுக்கான வடிகான் மூடிகள் இடப்படாமை காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கி வருகின்றனர். ஆகவே இவ்வாடிகான்களுக்கான மூடிகளை உடனடியாக இடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையினருக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் பணிப்புரை விடுத்தார்.
காத்தான்குடி மெரைன் ரைவ் வீதியின் அபிவிருத்தியினை தடுக்க திட்டமிட்ட முயற்சி.
கிழக்கு மாகாண சபை மூலம் சுமார் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டு கொங்ரீட் வீதியாக புனரமைப்பு செய்யப்பட்டுவரும் காத்தான்குடி மெரைன் ரைவ் வீதியின் அபிவிருத்தி பணிகளை எவ்வாறு என்றாலும் நிறுத்த வேண்டும் என்பதற்காக எவ்வித விஞ்ஞான அறிவும் அற்ற ஒருவர் பொய்யான ஆவணங்களை கௌரவ ஆளுநர் வரை அனுப்பி அவ் அபிவிருத்தியினை நிறுத்த முற்பட்டிருந்தார். இந்த விடயத்தினை அனைவருக்கும் தெளிவுபடுத்திய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், இவ்விடயம் தொடர்பாக குறித்த அதிகாரியை சபையிலே எழுப்பி அவரிடம் கேட்டபோது அவரால் உரிய பதில் எதுவும் அளிக்க முடியவில்லை.
எனவே இவ்வாறான மோசமான எண்ணங்கள் இருக்கக் கூடாது என்பதனையும் அவருடைய அறியாமையினையும் அவருடைய கடிதத்தினூடாக குறித்த அதிகாரிக்கு சுட்டிகாட்டியதோடு, இத்தகைய அதிகாரிகள் தங்கள் திணைக்களத்தினுடைய அறிவுறுத்தல்கள், அதற்குரிய ஆய்வு அறிக்கைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் அதற்குரிய சட்டங்களை உரிய முறையில் அறிந்து கொள்ளாமல் இவ்வாறு வெள்ளை காகிதங்களில் கடிதங்களை எழுதி அனுப்புகின்ற நிலைமை மாற வேண்டும் என்றும் எதிர்காலத்தில் இவ்வாறான மோசமான விடயங்களில் அவர்கள் ஈடுபடாமல் அவர்களினுடைய கடமைகளை உரிய விதத்தில் முன்னெடுக்க வேண்டும் என்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கடுமையான உத்தரவினை பிறப்பித்தார்.
காத்தான்குடியின் எல்லையினை நிர்ணயம் செய்வதில் முறைகேடு.
காத்தான்குடியில் எல்லைகளை நிர்ணயம் செய்யும போது மேற்கொள்ளப்பட்டுள்ள முறைகேடுகள் தொடர்பாக தெளிவுபடுத்திய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்:-
“காத்தான்குடியில் எல்லை நிர்ணயங்களை மேற்கொள்கின்றபோது எல்லைகளை சரியான விதத்தில் வரையறை செய்யாமல் தற்போது நிர்வாகம் செய்கின்ற 18 கிராம சேவையாளர் பிரிவுகளை மாத்திரம் வரைபடத்தில் காட்டி இதுதான் காத்தான்குடி என்று சொல்கின்ற மறைமுகமான ஒரு சூழ்ச்சி நடைபெற்று வருவதனை நாங்கள் அறிந்துள்ளோம். இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதற்காக நாங்கள் மும்முரமாக செயற்பட்டு அந்த விடயத்தினை நாங்கள் நிறுத்தியிருந்தோம். கிராம சேவகர்கள் அவர்களுக்கு பொறுப்பான உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல் நேரடியாக உயர் மட்டங்களுக்கோ அல்லது அவ்வாறன விடயங்களை பெற்றுக்கொள்ள முயலுகின்ற எந்தவொரு சக்திக்கோ தகவல்களை கொடுக்ககூடாது என்பதனை மிகக் கண்டிப்பாக தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் முன்னர் நடந்த எல்லை நிர்ணய விடயத்தினை நிறுத்துவதற்குரிய கோரிக்கையினை நாங்கள் ஏற்கனவே சமர்பித்திருக்கின்றோம். அதற்கமைவாக எதிர்காலத்தில் எல்லை நிர்ணய பிரச்சனைகள் தீர்கப்பட்டதற்கு பிறகு நிர்வகிக்கப்படுகின்ற புதிய கிராம சேவையாளர் பிரிவுகள் சரியான முறையில் அடையாளப்படுத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
நீர் வழங்கல் சபையினால் பொருத்தமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள குழாய்கள்.
நீர் வழங்கல் சபைக்கு சொந்தமான குழாய்கள் வடிகானினூடாக செல்லுவதனால் வடிகானுக்குள் நீர் மற்றும் குப்பைகள் தேங்கி நிற்கின்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே குறித்த குழாய்களை வடிகாங்களுக்கு கீழ் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நீர் வழங்கல் சபையினருக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் உத்தரவு வழங்கினார்.
காத்தான்குடி கரையோர இடைமண்டலப் பகுதியினை(Buffer Zone) மீள நிர்ணயம் செய்தல்.
காத்தான்குடி கடற்கரையினை அண்மித்த அனர்த்த இடைமண்டல வலயமாக (Buffer Zone) பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதியின் அளவினை மீள் நிர்ணயம் செய்து குறைப்பதற்குரிய ஆலோசனையினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் வழங்கினார். தற்போது காத்தான்குடி கடற்கரையின் இடைமண்டலப் பகுதி(Buffer Zone) 50 மீற்றர்களாக காணப்படுகின்றது. இந்த குறிப்பிட்ட எல்லையினுள் பொதுமக்கள் எவரும் கட்டடங்களை அமைக்கவோ குடியமரவோ முடியாது. தற்போது நாடு பூராகவும் இவ்இடைமண்டலப் பகுதியினை (Buffer Zone) மீள நிர்ணயம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் காத்தான்குடியின் இடைமண்டலப் பகுதியினை (Buffer Zone) 35 மீற்றர்கள் வரை குறைப்பதற்கு கரையோர பாதுகாப்பு திட்டமிடல் பிரிவினருக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் ஆலோசனை வழங்கினார்.