வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, தற்போது வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புக்கு மேலதிகமாக பொலிஸ் பாதுகாப்பை வழங்குவது தொடர்பில் பரிசீலணை செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் தலைவர் சி.வி.கே.சிவஞானமே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்து, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு, கடிதமொன்றையும் இன்று (10) அனுப்பி வைத்துள்ளார்.
இது தொடர்பில் சிவஞானம் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“தென்னிலங்கை இனவாதிகள், தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திவிட்டு, அதனை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் மீது சுமத்துவதற்கு முயல்கின்றனர்" என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தெரிவித்துள்ளமையை அடுத்து, அவருடைய பாதுகாப்புக்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான தீர்மானமொன்றை வடமாகாண சபை எடுத்தது.
தற்போது, மாகாண சபையின் சட்ட ஒழுங்குகளுக்கு அமைவாக, வடமாகாண முதலமைச்சருக்கு, நாட்டில் உள்ள ஏனைய முதலமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புக்குச் சமமான பொலிஸ் பாதுகாப்பே வழங்கப்பட்டுள்ளது.
எனினும், உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமையால், அவருக்கு மேலதிக பொலிஸ் பாதுகாப்பை வழங்குமாறு அக்கடிதத்தில் கோரியுள்ளோம்” என்றார்.