அய்ஷத் ஸெய்னி-
அம்பாறை மாவட்டத்தில் வெளிக்களப் பணிகளில் ஈடுபடும் 06 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த அரச வெளிக்கள உத்தியோகஸ்தர்கள் இன்று புதன்கிழமை அம்பாறை மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக பாரிய கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், கிராம உத்தியோகஸ்தர் சங்கம், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் சங்கம், பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள் சங்கம், வெளிக்கள உத்தியோகஸ்தர்கள் ஒன்றியம் ஆகியவற்றின் ஏற்பாட்டிலேயே இக்கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்டத்தில் பணி புரிகின்ற அரச வெளிக்கள உத்தியோகத்தர்களில் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படாத சுமார் 5,000 பேருக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு கோரி இக்கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
2017ஆம் ஆண்டுக்கான வரவு –செலவுத்திட்டத்தில் இதனை உள்ளடக்கி தங்களுக்கான மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் இக்கவனயீர்ப்புப் போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.