மாகாண சபை உறுப்பினரின் ஊடக கருத்துக்கு சுகாதார அமைச்சர் நஸீரின் மறுப்பறிக்கை..!

அபு அலா, சப்னி அஹமட் -
கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகளானது மூவின மக்களுக்கும் சமமாக, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் சகல இன மக்களையும் திருப்திப்படுத்தும் வகையிலேயே என்னால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறை, சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு, சமூக சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் இன்று (21) தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம் அவர்களினால் நேற்று வியாழக்கிழமை (20) ஊடகங்களில் வெளியான அறிக்கைக்கு பதில் வழங்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளை தரம் உயர்த்துவது தொடர்பாக, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களது கோரிக்கைகளுக்கமையவே பரிசீலித்து கிழக்கு மாகாண அமைச்சர் வாரியத்திற்கும் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்ற பின்னரே மத்திய சுகாதார அமைச்சின் அனுமதியையும் பெறுகின்றோம். இவ்விடயத்தில் நாம் எவ்வித பாகுபாடுகளும் இல்லாமல் திறந்த மனதுடனேயே முடிவுகளை மேற்கொண்டு வருகின்றோம். இவ்விடயங்களை மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் நன்கறிந்தவராவார்.

எம்மால் மேற்கொள்ளப்பட்ட வைத்தியசாலை நியமனங்களையும் இன விகிதாசாரத்திற்கு அமையவே வழங்கியிருந்தோம். கிழக்கு மாகாண சபை ஆட்சியில் பங்காளர்களாக உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்தே இந்நியமனங்களை வழங்கியுள்ள நிலையில் அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் ஒருவர் இவ்வாறான உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவது என்பது ஒரு கவலைக்குரிய விடயமாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வைத்தியசாலைகளைகளில் ஏற்பட்ட அபிவிருத்தியின் செயற்பாடுகள் மந்தகதியில் இருந்ததை அவதானித்த நான் எனது அயராத முயற்சியின் காரணமாக கிழக்கு மாகாண சுகாதார அபிவிருத்திகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்றை கடந்த 2016.10.07 ஆம் திகதி மத்திய சுகாதார அமைச்சில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் பாலித்த மஹிபாலவை சந்தித்து குறிப்பிட்ட விடயங்களை முன்வைத்தேன்.

இந்த கலந்துரையாடலில் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.கருணாகரன், இரா.துரைரத்தினம், இந்திரகுமார் பிரசன்ன, எம்.என்.நடராஜா, வி.கிரிஷ்ணப்பிள்ளை ஆகியோர் பங்கேற்றிருந்தமையை நான் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். 

மேலும், இதன்போது அங்கு என் முன்னிலையில் பேசப்பட்ட விடயம் தொடர்பாகவும், உடனடியாக எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாகவும், 2017 ஆம் ஆண்டிற்கான அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பல வைத்தியசாலைகளின் தேவைகள் உள்வாங்கப்பட்டமை மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்னத்திற்கு எல்லா உண்மைகளும் முழுமையாக தெரிந்திருந்தும் கூட இவர் இப்படி ஏன் நடந்து கொண்டுள்ளார் என்பதுதான் எனக்கு விளங்காமல் உள்ளது.

மேலும், 'முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் துரிதமாக பிரதே பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்த கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. வைத்திய அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு அமைவாகவே எல்லா நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றது. இதில் எந்தவித இன மத பாகுபாடுகளின்றி பிரதே பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறு இனங்களுக்கு இடையில் குரோதம் விளைவிக்கும் செயற்பாடுகளையும் மக்களை குழப்பும் அறிக்கையை பத்திரிகைகளில் வெளியிட்டமைக்கு நான் வன்மையாக எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதுடன், உண்மைக்கு புறம்பான இச்செய்தியை நான் முற்று முழுதாக நிராகரிப்பதாகவும் பிரச்சினைகள் இருந்தால் நேரடியாக அதிகாரிகளையோ அல்லது என்னையோ தொடர்புகொண்டு பிரச்சினைகளை கூறி அப்பிரச்சினைகளுக்கு ஒரு தெளிவான முடிவை பெற்றிருக்கலாம்.

இதனை அவர் செய்யாமல் ஊடகங்களுக்கு பொய்யான கருத்துக்களை தெரிவித்து மக்களை குழப்பிவிடும் செயலில் ஒரு பொறுப்பு வாய்ந்த மாகாண சபை உறுப்பினர் இவ்வாறு நடந்து கொண்டிருப்பது ஒரு சிறு பிள்ளைத்தனமான செயலாகவே நான் கருதுகின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -