எப்.முபாரக்-
கிழக்கு மாகாணத்தை சேர்ந்த உயர்கணக்கியல் டிப்ளோமா (எச்.என்.டி.எ) முடித்த பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கல் மற்றும் நியமனங்களில் முன்னுரிமை வழங்கப்படுதலை உறுதிப்படுத்துமாறு கோரி திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் மனுவொன்று, இன்று வியாழக்கிழமை (20) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில், இப்பிரிவில் பயின்று வெளியேறிய பட்டதாரிகள் சார்பில் ஆறு பேரே இந்த மனுவைத் தாக்கல் செய்தனர்.
ஏனைய மாகாணங்களில் காணப்படும் வெற்றிடங்களை அந்தந்த மாகாணங்களே நிரப்புகின்ற நிலையில், கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் இப்பட்டதாரிகள் நியமனங்களில் இழுத்தடிப்பு செய்யப்படுவதாகக் கோரியே இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
விடயத்தை எடுத்துக் கொண்ட மேல் நீதிமன்றம் மனுவில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டியுள்ளதைச் சுட்டிக்காட்டியது. அத்திருத்தங்களுடன் வரும் 24ஆம் திகதி சம்பந்தப்பட்ட விடயத்தை சமர்பிக்குமாறு மேல்நீதிமன்ற நீதிபதி அ.பிரேம் சங்கர், பணிப்புரை வழங்கினார்.