அப்துல்சலாம் யாசீம்-
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த இடமளிக்கப்போவதில்லை என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் றுவன் விஜயவர்தன நேற்று (30) திருகோணமலை கடற்படை முகாமில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார்.
இலங்கை கடற்படையில் பயிற்சிகளை முடித்துக்கொண்டு வௌியேறும் கடற்படை அதிகாரிகளின் பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை திருகோணமலை கிழக்கு கடற்படை தலைமையகத்திலுள்ள அகடமியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது.
கடற்படையின் 54வது ஆட்சேர்ப்பு கற்கை நெறியில் சிறந்த திறமைகளை வௌிக்காட்டிய கடற்படை அதிகாரிகளுக்கு விஷேட கேடயங்களும் சின்னங்களும் பாதுகாப்பு அமைச்சரினால் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் உரையாற்றுகையில்
இலங்கை கடந்த காலங்களில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்து வந்துள்ளது. இவற்றில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளின் போது கடற்புலிகளின் செயற்பாடுகளை மிடக்குதல் உற்பட பல்வேறு நடவடிக்கைகளில் இலங்கை கடற்படை சிறந்த செயற்பாடுகளை காண்பித்துள்ளது.
எமது நாட்டின் இறைமை ஆட்புல ஒருமைப்பாடு என்பவற்றை பாதுகாக்க கடற்படையினர் ஆற்றிய சேவை மிகவும் பாராட்டத்தக்கது.இந்து சமுத்திரத்தில் இலங்கை ஒரு முக்கிய இடத்தினை வகிக்கின்றது. அவற்றில் திருகோணமலை துறைமுகம் உலகில் சிறந்த துறைமுகங்களில் ஒன்றாக காணப்படுகின்றது இந்த துறைமுகத்தை பாதுகாப்பது எமது கடமையாகும்.இதன் பிரதான பொறுப்பு கடற்படையைச்சார்ந்ததேயாகும் எனவும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் தாய் நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படுவதைத்தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.இவற்றிற்கு அமைவாக கடற்படையை நவீன மயப்படுத்தி நவீன இயந்திரங்கள் தொழிநுட்ப வசதிகளை பெற்றுக்கொடுக்கவுள்ளோம்.
இவற்றிற்காக உலகில் பலம் வாய்ந்த கடற்படைகளைக்கொண்டுள்ள நாடுகளுடன் இணைந்து செயற்படவும் பயிற்சிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் றுவன் விஜயவர்தன மேலும் தெரிவித்தார்.