கிழக்கு மாகாணத்துக்கு வௌியே நியமனம் பெற்ற கிழக்கு மாகாண கல்வியியற் கல்லூரி ஆசிரியர்களுக்கு இன்று இறுதி தீர்வு வழங்கப்படும் வரை கல்வியமைச்சை விட்டு வௌியேற மாட்டேன் என்ற உறுதியுடன் சென்ற முதலமைச்சருக்கு வெற்றி கிட்டியுள்ளது
கிழக்கு மாகாணத்துக்கு வௌியே நியமனம் பெற்ற கல்வியியற் கல்லூரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவது தொடர்பான இறுதிக் காலக்கெடு நாளையுடன் முடிவடையவிருந்த நிலையில் முதலமைச்சர் இன்று கல்வியமைச்சுக்கு விஜயம் செய்தார்.
இன்று முற்பகல் கல்வியமைச்சுக்கு சென்ற முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சியை சந்திக்க சென்ற வேளை அவர் கூட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் தமக்கு இறுதி முடிவு கிடைக்கும் வரை கல்வியமைச்சை விட்டு வௌியேறப் போவதில்லை என முதலமைச்சர் அங்கு தெரிவித்தார்.
இதையடுத்து உடனடியாக வந்து முதலமைச்சரை சந்தித்த கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி, முதலமைச்சரின் கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இதன் போது கல்வியமைச்சின் பிரதம ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்தார்.
இதனையடுத்து விடயங்களை ஆராய்ந்த கல்வியமைச்சின் பிரதம ஆணையாளர் எச்.எம்.பண்டார மற்றும் கல்வியமைச்சின் ஆசிரியர் பகிர்ந்தளிப்புப் பிரிவின் சிரேஷ்ட உதவி செயலாளர் குசலானி ஆகியோர் முதலமைச்சரின் கோரிக்கைக்கு இணங்க வௌி மாகாணங்களில் நியமனம் பெற்ற கிழக்கின் கல்வியியற் கல்லூரிகளில் பயின்ற அத்தனை ஆசிரியர்களையும் கிழக்கு மாகாணத்திலேயே நியமிப்பதாக உறுதியளித்தனர்.
அத்துடன் கிழக்கின் ஆசிரியர்கள் கடமைகளை பொறுப்பற்பதற்கான காலக்கெடுவை மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பதாகவும் கல்வியமைச்சு உறுதியளித்தது. இதன் போது கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்தையும் சந்தித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ்மட் அவருக்கு தமது நன்றிகளையும் தெரிவித்தார்.