அம்பாறை மாவட்டத்தில் பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அநேகமுள்ளதாகவும், யானை – பொதுமக்கள் மோதல் இந்த மாவட்டத்திலும் பாரதூரமாக உருவெடுத்துள்ளதாகவும், வனபரிபாலன திணைக்களத்தினர் யானைகளைத் தடுப்பதற்கு மின்சார வேலிகளைப் போட்டாலும்கூட, உண்மையில் காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் பாதிக்கப்படக் கூடிய மக்கள் பாதுகாக்கப்படுகின்றார்களா என்பது கேள்விக்குறியாகியுள்ளதாகவும், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மேலும் சாத்தியமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமெனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பகிரங்க வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.
அத்துடன் கரும்புச் செய்கையில் மக்கள் பாரிய பிரச்சினையை எதிர்நோக்குவதாகவும், அரசாங்க அதிபர் முன்னிலையில் அதிகாரிகள், கரும்புச் தொழிற்சாலை உரிமையாளர்கள் உட்பட கரும்புச் செய்கை விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு பல கூட்டங்கள் நடத்தப்பட போதிலும் உரிய பலன் கிட்டவில்லை எனவும், ஆகையால், கரும்புச் செய்கையோடு சம்பந்தப்பட்ட அந்த அப்பாவி விவசாயிகளின் பிரச்சினைகளில் ஜனாதிபதி தலையிட்டு உரிய தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மஹாஓய நீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுப் பொழுதே அமைச்சர் ஹக்கீம் இந்தக் கோரிக்கைகளை முன்வைத்தார். இந்நிகழ்வில் ஜனாதிபதி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
அமைச்சர் ஹக்கீம் அங்கு உரையாற்றுப்பொழுது மேலும் தெரிவித்ததாவது, இந்தச் சுத்திகரிப்பு நிலையம் மூலம் 17 ஆயிரம் குடும்பங்களுக்கு நீர் வழங்கப்படுகின்றது.
இதனோடு சேர்த்து அம்பாறை மாவட்டத்தில் 80 வீதமான நிலப்பரப்பில் வசிப்பவர்களுக்கு தூய நீரை பெற்றுக் கொடுக்கக் கூடியதாக இருக்கும்.
2019ஆம் ஆண்டாகும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் சிறுநீரக நோய்களினால் பெரிதும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாக இனங்காணப்பட்டுள்ள ரஜரட்ட பிராந்தியத்தில் அநுராதபுரம், பொலனறுவை மாவட்டங்களில் 90 வீதமான நிலப்பரப்பில் வசிப்போருக்கு சுத்தமான நீரைப் பெற்றுக் கொடுக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிட்டும்.
அடுத்தாண்டில் 3 இலட்சம் மில்லியன் ரூபா செலவில் பாரிய நீர் விநியோகத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதில் அரைவாசியான ஒன்றரை லட்சம் ரூபாய்கள் சிறுநீரக நோய்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கான நீர் விநியோகத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளது என்றார்.