மலையக மக்கள் மற்றவர்களில் தங்கி நிற்கும் நிலையிலிருந்தும் அறியாமையிலிருந்தும் விடுபட்டு சொந்தக் காலில் நிற்கின்ற மானமுள்ள சமூகமாக மாற வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி.திகாம்பரம் விடுத்துள்ள தீபத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தமது செய்தியில்,
மலையக மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றத்துக்கு ஆளாகி வருகின்றார்கள். அண்மையில் நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர்களுகுக் கிடைக்க வேண்டிய சம்பள நிலுவையும் கிடைக்கவில்லை. எனவே, தீபாவளிப் பண்டிகையை சந்தோசமாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பதை வேதனையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
எதிர்காலத்தில் இத்தகைய ஏமாற்றங்களுக்கு ஆளாகாமல் தமது வாழ்க்கையை தாமே தீர்மானித்துக் கொள்ளுகின்ற நிலைமை உருவாக வேண்டும். நல்லாட்சி அரசாங்கத்தில் தலா ஏழு பேர்ச் காணியில் தனிவீட்டுத் திட்டம் வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றது. அடுத்த ஆண்டுக்கு வரவு செலவுத் திட்டத்தில் கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால் ஏராளமான அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும். மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நாம் வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வரும் நேரத்தில் மேலதிக வருமானத்தைத் தேடிக் கொள்ளும் முயற்சியில் எமது இளைஞர், யுவதிகள் அக்கறை கொள்ள வேண்டியது அவசியமாகும்.
மக்களுக்கு துன்பத்தைக் கொடுத்து வந்த நரகாசுரனை நினைவு கூரும் நன்னாளில் தீமைகள் ஒழிந்த திருநாளதை நினைந்து பூமகள் மகிழ புன்னகை பூத்திடவும், மலையக மக்கள் கல்வி கற்ற சமூகமாகவும் சிந்திக்கத் தெரிந்த அடுத்தவர்களுக்கு அடிபணியாத தன்மானம் மிக்கவர்களாகவும் எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள இதயபூர்வமான தீபத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.