மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக முறையான சுயதொழில் திட்ட நடவடிக்கை…!

கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழான நிறுவனங்களின் ஊடாக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், சுயதொழில் வாய்ப்புச் செயலணி ஒன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், இதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார், தராபுரம் அல் - மினா மகா வித்தியாலயத்தில் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான நிறுவனங்களின் தலைவர்கள், உயரதிகாரிகள் மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், சமூகநல அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

இன்று காலை (16/10/2016) இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர் மேலும் கூறியதாவது, 

கடந்த காலங்களில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், அவர்களின் சுயதொழில் முயற்ச்சிக்காக நாம் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளோம். தற்போதும் அவ்வாறான திட்டங்களை செயற்படுத்தி வருகின்றோம்.

எனினும், இவைகள் எதுவும் திட்டமிட்டு, முறையாக மேற்கொள்ளப்படாததால் உண்மையான பலாபலன்களை ஈட்ட முடியாத நிலையிலேயே இருக்கின்றோம். பலர் சுயதொழில் முயற்ச்சிகளுக்காக எம்மிடம் பெற்ற உதவிகளையும், உபகரணங்களையும் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறியுள்ள போதும், அதற்கு மாற்றமாக ஒருசிலர் நாங்கள் வழங்கிய உதவிகளை வீனடித்துள்ளனர் என்ற வேதனையான, கசப்பான உண்மையை நான் இங்கு கூறாமல் இருக்க முடியாது.

அந்த விடயத்தைச் சீர்தூக்கிப் பார்த்த பின்னரேயே, இவ்வாறான முறையான கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டுமென்ற எண்ணம் பிறந்தது. அதனை இன்று செயலுருப்படுத்த இறைவன் துணை செய்துள்ளான். 

நமது சமூகத்திலே அரசாங்கத் தொழிலுக்காகவே அலைந்து திரியும் ஒரு மாயை ஏற்பட்டுவிட்டது. பாடசாலையிலே 13 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு பின்னர், பல்கலைக்கழகம் சென்று 05 ஆண்டுகளை அங்கே கழித்துவிட்டு, குறிப்பிட்ட சம்பளத்துக்காக அரசாங்கத் தொழிலையே நம்பியிருக்கும் ஒரு சமுதாய அமைப்பிலேயே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

சுயதொழில் மூலம் சொந்த அறிவையும், மூளையையும் பயன்படுத்தி உலகத்திலே இன்று கொடிகட்டிப் பறப்போர் அநேகர். பெரும் பணக்காரர்கள் பலர் இன்று சொந்தக்காலில் நின்று முன்னேறியவர்களே. அடுத்தவர்களையும், அரசாங்கத்தையும் நம்பி நாம் தொடர்ந்தும் வாழ்வோமேயானால் நம்மால் முன்னேறவே முடியாது.

அண்மையில் கிராமின் வங்கி, மைக்ரோ கிரெடிட் ஸ்தாபகர் பேராசிரியர். யூனுஸ் அவர்களை நான் மலேசியாவில் சந்தித்தபோது, சுயதொழில் முயற்ச்சியாண்மை தொடர்பில் அவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அவரது அமைப்பில் சுமார் எண்பது இலட்சம் சுயதொழில் முயற்ச்சியாளர்கள் அங்கம்வகித்து, உலகுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இயங்குகின்றனர்.

எமது திட்டத்தின்கீழ் இங்குள்ள பலரை அடையாளங்கண்டு, சுயதொழில் முயற்ச்சிகளை வெகுவாக ஊக்குவிக்க முடியும். உதாரணமாக, விதவைத் தாயொருவர் இந்த உதவிகளைப் பெற்று முறையாகத் தனது குடும்பத்தைப் பராமரித்து, பிள்ளைகளை ஆளாக்க முடியும். அதேபோன்று ஏழைகள், வேலையற்றோர், தாய்மார்கள் ஆகியோருக்குப் பல்வேறு சுயதொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க நாம் உதவுவோம். 

மனித வாழ்க்கையில் குறிப்பிட்ட வயதெல்லைக்குள், நாம் உரிய இலக்கையும், அடைவையும் அடைய வேண்டும். இலக்கில்லாத வாழ்க்கையால் எமக்கு எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -