ஐ.நா. விசேட அறிக்கையாளர் ரீட்டா அரசாங்கத்திடம் கோரிக்கை..
- முஸ்லிம் சமூகத்தை புறக்கணிக்க வேண்டாம்
- முஸ்லிம் தனியார் சட்ட திருத்தத்தை துரிதப்படுத்துக
- சிறுபான்மையினருக்காக ஆணைக்குழு வேண்டும்
- வட கிழக்கு முஸ்லிம்களை மீள்குடியேற்றுக
இந்த நாட்டு முஸ்லிம்கள் போரினாலும் அதன் பின்னர் இடம்பெற்ற மத வன்முறைகளாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆனால் அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை என்பதை நான் உணர்கிறேன். எனவே இலங்கை அரசாங்கம் முஸ்லிம்களை தனியான இனமாக கருதி அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் அதற்கான பொருத்தமானதும் விசேடமானதுமான பொறிமுறை ஒன்றை உருவாக்க முன்வர வேண்டும் என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சிறுபான்மை விவகாரங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நதேயா குறிப்பிட்டார்.
இலங்கைக்கு 10 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த அவர் தனது விஜயத்தின் இறுதியில் நேற்று பிற்பகல் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடாத்தினார்.
இதன்போது ''இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான உங்களது பிரதான கண்டறிதல்கள் என்ன?'' என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ரீட்டா ஐசாக் நதேயா இலங்கை முஸ்லிம்களின் விவகாரங்கள் தொடர்பில் தான் நடாத்திய சந்திப்புகள் குறித்து மேலும் கருத்து வெளியிடுகையில்,
முஸ்லிம் சிறுபான்மை சமூகம் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எமது சந்திப்புகளில் கலந்துரையாடப்பட்டன. இவற்றில் காணிப் பிரச்சினைகள், இடம்பெயர்வு மற்றும் மீள்குடியேற்றம் என்பன பிரதானமானவையாகும்.
அத்துடன் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மற்றும் அவர்களுக்கு புகலிடம் அளித்த மக்களின் பிரச்சினைகள் குறித்தும் எனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன.
எனினும் அரசாங்கத்தின் முக்கியமான முன்னெடுப்புகளில் முஸ்லிம்களின் விவகாரம் உள்ளடங்கப்படவில்லை எனும் கவலையை பலரும் என்னிடம் வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக போரினால் தமது சமூகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம்கள் கவலைப்படுகின்றனர்.
1990 இல் சுமார் 30000 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வடக்கு கிழக்கிலிருந்து வெளியேறியதாகவும் அவர்களில் 20 வீதமானோர் மாத்திரமே இதுவரை தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறியுள்ளதாகவும் எனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இது மிகப் பெரிய எண்ணிக்கையாகும்.
முக்கியமான பல்வேறு விடயங்களில் முஸ்லிம்களின் நலன்கள் உள்ளடக்கப்படவில்லை என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. எனவே முஸ்லிம்கள் தனியான இனமாக கருதப்பட்டு கருதப்பட்டு அரசாங்கத்தின் சகல முன்னெடுப்புகளிலும் கண்டிப்பாக உள்வாங்கப்பட வேண்டியது அவசியமாகும். முஸ்லிம்களின் பிரச்சினைகள் தனித்துவமான கவனத்தை வேண்டி நிற்கின்றன.
முஸ்லிம்களுக்கும் தமிழ் மற்றும் சிங்களவர்களுக்குமிடையிலான உறவு தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது. அத்துடன் மத சுதந்திரமும் மிக முக்கியமான விடயமாகும். பள்ளிவாசல்கள் மீதான பல தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் இஸ்லாம் பற்றி பிற மதத்தவரின் புரிதல்களில் குறைபாடுகள் உள்ளதாக முஸ்லிம்கள் கவலைப்படுகின்றனர்.
ஏனெனில் பாடசாலைக் கல்வியில் இஸ்லாம் தொடர்பில் பிற மதத்தவர்களுக்குப் போதுமானளவு போதிக்கப்படுவதில்லை.
இஸ்லாம் என்ற பதம் தவறாக விளங்கப்பட்டுள்ளது. இது ஏதோ ஒரு புள்ளியில் தமக்கு பாதகமாக அமையலாம் என முஸ்லிம்கள் கவலைப்படுகின்றனர்.
ரீட்டா ஐசாக் நதேயா இங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,
வடக்கு, கிழக்கில் யுத்தத்திற்குப் பின்னரான முரண்பாட்டு நிலைகள், தமிழ், மற்றும் சிங்களவர்களுக்கிடையிலான பிரச்சினையாக காணப்படுகின்ற நிலையில் இரண்டு தரப்புக்கிடையில் சிக்கியவர்களாக முஸ்லிம்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதுடன் இன்றுவரை கஷ்டப்படுகின்றனர்.
எனவே அவர்களை ஒரு தனி சிறுபான்மையினமாக வேறுபடுத்தி அங்கீகரிக்கவேண்டுமென நான் இங்கு முக்கியமாக வலியுறுத்திக் கூறுகிறேன்.
இலங்கையில் மதம், மொழி ரீதியான சிறுபான்மையினர் தொடர்பான மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் ஆராயவே நான் இந்த விஜயத்தை மேற்கொண்டேன்.
நான் மத்திய மற்றும் மாகாண மட்டத்தில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சு நடத்தினேன். 30 அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் 9 அமைச்சர்கள் ஆகியோருடன் பேச்சுவார்தைகளை நடத்தினேன்.
சிவில் சமூக பிரதிநிதிகள் சமூகத் தலைவர்கள், மதத் தலைவர்கள், கல்வியாளர்கள், சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்பாக செயற்படும் செயற்பாட்டாளர்கள், உள்ளிட்டோரையும் நான் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினேன். இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள், இந்து மக்கள், கிறிஸ்தவர்கள், தெலுங்கர்கள், வேடுவர்கள், பறங்கியர்கள், மலே இனத்தவர் மற்றும் இலங்கை ஆபிரிக்கர்கள் ஆகியோர்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன். மேலும் சிங்கள பௌத்த தலைவர்களையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினேன். இலங்கையானது சகவாழ்வு, பதற்றம், இனங்களுக்கிடையிலான வேறுபாடுகள், மதக்குழுக்களுக்கிடையிலான வேறுபாடுகள் என்பவற்றின் அடிப்படையில் காணப்படுகிறது.
அதிகாரம், மற்றும் சமூக உறவுகள், பெரும்பான்மை, மற்றும் சிறுபான்மை இனங்களுக்கிடையில் பதற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு முன்னேறிச் சென்றுள்ளமைக்கான நிலைமையை உருவாக்கியுள்ளன.
பெரும்பான்மை சிங்கள பௌத்த தலைமைத்துவம் மற்றும் அரசாங்கங்கள் என்பவை சிறுபான்மை தமிழ் மக்களின் நேர்மையான கவலைகளை கவனத்தில் கொள்ளாதன் காரணமாக முரண்பாடுகள் ஏற்பட்டதுடன் இறுதியில் நீண்டகா யுத்தமொன்றுக்கு செல்ல நேரிட்டது.
எனவே வரலாற்றை ஆராய்வதற்கும் தேசிய ஒற்றுமையையும் தேசிய அடையாளத்தையும் மீள் கட்டியெழுப்புவதற்கும் மனச்சாட்சியுடன் கூடிய நடவடிக்கைகள் அவசியமாக காணப்படுகின்றன.
நல்லிணக்கம், காணி, தடுத்துவைத்தல், இராணுவம் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அதிகளவு வாழும் பிரதேசமான வடக்கு, கிழக்கு பகுதிகளில் நான் நடத்திய கலந்துரையாடல்களில் இராணுவத்தை அகற்றுதல், தடுத்து வைத்திருப்பவர்களை விடுவித்தல், காணிகளை மீள வழங்குதல் போன்ற விடயங்களே முக்கியமாக முன்வைக்கப்பட்டன.
வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியான இராணுவப் பிரசன்னமானது சர்ச்சையை தோற்றுவித்திருக்கிறது. அதாவது சமூக பொருளாதார நிலையை முன்னேற்றுதல், வீடுகளை அமைத்தல், வருமானத்தை உருவாக்குதல், போன்ற செயற்பாடுகளில் இராணுவம் ஈடுபடுவதாக எனக்கு அறிவிக்கப்பட்டது.
இராணுவம் தற்போது பொது இடங்களில் அதிகளவில் தென்படாவிட்டாலும் கூட இராணுவத்தின் பிரசன்னமானது எந்தளவுக்கு மக்களின் அன்றாட வாழ்வில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதை மக்கள் என்னிடம் எடுத்துக் கூறினர்.
அச்சுறுத்துதல், சித்திரவதை செய்தல் போன்ற குற்றச்சாட்டுக்களும் கவலையுடன் முன்வைக்கப்பட்டன.
முழுமையான சிங்கள மக்களைக் கொண்ட இராணுவத்தின் விகிதாசாரத்திற்கு அப்பாற்பட்ட மிக அதிகளவான பிரசன்னமானது வடக்கு மாகாணத்தில் இராணுவத்தை ஒரு ஆக்கிரமிப்புப் படையாக காட்டுகின்றது.
அதாவது இது தமிழர்களை ஒரு போர்க்குணமுள்ள மக்களாக அவதூறுபடுத்துவதாக காட்டப்படுகின்றது.. தாமதமின்றி பொதுமக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகள் அவர்களிடம் மீள் வழங்கப்படவேண்டியது அவசியமாகும். எந்தவிதமான நட்டஈடும் முறையான நடவடிக்கையுமின்றி பெறப்பட்ட காணிகள், அந்த மக்களுக்கு வழங்கப்படவேண்டும். அல்லது நட்டஈடு செலுத்தப்படவேண்டும். நீண்டகால இடப்பெயர்வுகள், சிறுபான்மை மக்களுக்கிடையிலேயே முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளது.
இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் அபயமளித்த மக்களுக்கிடையில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறான முரண்பாடுகளை தீர்ப்பதற்கு நடவடிக்கைகள் கட்டாயம் எடுக்கப்படவேண்டும்.
இடம்பெயர்தல்
யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்கள் கடந்து விட்ட போதும் பெரும்பாலான மக்கள் இன்னும் இடம்பெயர்ந்த நிலைமையிலேயே வாழுகின்றனர்.
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களையும், இது உள்ளடக்குகின்றது. மலையகத் தமிழர்களும் இடம்பெயர்ந்துள்ளனர்.
குறிப்பாக 1983 ஆம் ஆண்டு அதிக இடம்பெயர்வுகள் இடம்பெற்றுள்ளன. விசேடமாக காணிகளைப் பெறுதல், வாக்குரிமையைப் பெறுதல், அரச ஊழியத்தைப் பெறுதல் போன்றவற்றில் தாம் பல்வேறு கஷ்டங்களைப் அனுபவிப்பதாக இந்த அனைத்து மக்களும் என்னிடம் தெரிவித்தனர். அதாவது பெரும்பான்மை சமூக மட்டத்திலிருந்து அநீதி ஏற்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
சிறுபான்மை பெண்கள்:
சிறுபான்மையினங்களைச் சேர்ந்த பெண்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். தீர்மானம் எடுக்கும் செயற்பாட்டில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவாக காணப்படுகின்றது.
பாலின வன்முறைகள் அதிகளவில் காணப்படுகின்றன. வடக்கு, மற்றும் கிழக்கில் தமிழ் பெண்கள், யுத்தம் மற்றும் மோதல்களின் வடுக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விதவைகள், காணாமல்போனோரின் குடும்பங்கள் முன்னாள் போராளிகள் என பலர் கஷ்டப்படுகின்றனர். பெண்களைத் தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் அதிகமாக உள்ளன.
முஸ்லிம் பெண்களும் சமூகங்களின் சவால்களை எதிர்கொள்கின்றனர்.
குறிப்பாக திருமணம், மற்றும் விவாகரத்தில் 1951 ஆம் ஆண்டு முஸ்லிம் திருமண, மற்றும் விவாகரத்தின் சட்டமூலம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த சட்டமூலமானது 16வயதுக்குக் குறைந்த பிள்ளைகள் திருமணம் முடிப்பதற்கு அனுமதிக்கிறது.
இது தொடர்பில் ஆராய்வதற்கு ஏழுவருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட குழு இன்னும் தனது அறிக்கையை கொடுக்கவில்லை.
குறிப்பாக சிறுபான்மை மக்களின் தனிப்பட்ட சட்டங்களான கண்டியன், தேசவழமை, மற்றும் முஸ்லிம் சட்டம் என்பன சர்வதேச மனித உரிமை தரங்களுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும்.
இலங்கையில் நீண்ட மோதலின் விளைவாக நாட்டுக்குள்ளும் சமூகங்களுக்கிடையிலும் நம்பிக்கை பற்றாக்குறை பிரதான ஒரு விடயமாக காணப்படுகின்றது.
சமூகத்தின் பெரும்பான்மை மக்கள் அனைத்து மக்களினதும் தேவைகளை அங்கீகரிப்பது, நம்பிக்கையை மீள் கட்டியெழுப்புவதற்கு முக்கியமானதாகும்.
நாடு இப்போது பாரிய நல்லிணக்க செயற்பாடுகளிலும் அரசியலமைப்பு மறுசீரமைப்பிலும் பொறுப்புக்கூறல் செயற்பாட்டிலும் சென்று கொண்டிருக்கிறது.
கடந்த கால இன சிக்கல்கள், அநீதிகள், சமூக கலாசார உணர்வுகளின் அடையாளத்தையும், நம்பிக்கையை சேதப்படுத்தியுள்ளன. எனவே அரசாங்கம் உண்மையை கண்டறிதல், நல்லிணக்கம் பொறுப்புக்கூறலை முன்னெடுத்தல் என்பவற்றுடன் உளவள மேம்பாட்டு வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கவேண்டும்.
உண்மையை கண்டறிவதற்கும் நல்லிணக்கம் மற்றும் காயங்களை ஆற்றுப்படுதும் செயற்பாடுகளுக்கு காலம் தேவையாகும். ஒரே இரவில் அதனை செய்து முடிக்க முடியாது.
எனினும் தற்போதைய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை இழக்காமல் இருப்பதற்கு இலங்கையின் சிறுபான்மை மக்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் உடனடியாக முக்கியமான சில வேலைத்திட்டங்களை அரசியல் ரீதியில் வெளிப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை காட்ட வேண்டும்.
குறிப்பாக காணிகளை மீள் வழங்குதல், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுத்தல், அல்லது வழக்கு தாக்கல் செய்தல், காணமல் போனவர்கள் தொடர்பில் உண்மையை கண்டறிதல், இராணுவ அதிகாரங்களை படிப்படியாக சிவில் நிர்வாகத்திடம் கையளித்தல், போன்றவை உடனடியாக முன்னெடுக்கப்படவேண்டும். .
அரசாங்கம், மாகாண அலுவலகங்கள், சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்கள், இராணுவப் படைகள், கல்வி, மற்றும் சுகாதார நிறுவனங்கள் என்பன இலங்கையின் பல்லினத்தன்மையை உண்மையாகவே பிரதிபலிக்க வேண்டுமாயின் இன, மொழி, மத ரீதியாக சிறுபான்மையினர் உள்ளீர்க்கப்படவேண்டும்.
இதன்மூலம் முக்கியமான முன்னேற்றங்களை அடைய முடியும். அத்துடன் அரசாங்க நிர்வாகத்தையும் நம்பிக்கையையும் செல்லுபடியாகும் தன்மையை அதிகரிக்க முடியும்.
பல வழிகளில் சிறுபான்மை மக்களை அர்த்தமுள்ள ரீதியில் உள்ளீர்க்க முடியும். அடுத்த முக்கிய விடயமாக அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயற்பாட்டில் சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் முன்வைக்கப்பட வேண்டுமென எனது அனைத்து கலந்துரையாடல்களிலும் வலியுறுத்தப்பட்டது. அரசியலமைப்பில் பௌத்தத்திற்கான முதன்மை இடத்தை தொடர்ந்து பேணுவதானது மேலும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான அநீதிகளுக்கும், அடக்கு முறைமைகளுக்கும் வழிவகுக்கும் என மக்கள் அச்சமடைகின்றனர்.
இந்த ஏற்பாடு தொடர்ந்தால் பரவாயில்லை. ஆனால் அதனூடாக துஷ்பிரயோகங்கள் இடம்பெறாதவகையிலான ஏற்பாடுகள் இடம்பெறவேண்டும் என்பதை சிலர் வலியுறுத்தினர்.
அரசியலமைப்பின் 16ஆவது சரத்தானது முஸ்லிம் பெண்களுக்கு பிரச்சினைக்குரியதாக உள்ளதாகவும், புதிய அரசியலமைப்பில் அது உட்படுத்தப்படக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.
அந்த வகையில் அரசாங்கத்திற்கு முக்கியமானதொரு பரிந்துரையை முன்வைக்கிறேன். அதாவது அரசியலமைப்பின் கீழ் தெளிவான ஆணை, மற்றும் அதிகாரம், வளங்களுடன் சிறுபான்மை மக்கள் தொடர்பாக சுயாதீன ஆணைக்குழுவொன்றை நிறுவுமாறு அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்கின்றேன்.
குறிப்பாக இந்த ஆணைக்குழுவானது சட்டங்களை உருவாக்குவது தொடர்பான கொள்கை, செயற்பாடுகளுக்கு தகவல்களை வழங்குதல், சிறுபான்மை மக்கள் தொடர்பான சட்டங்கள் மற்றும் கொள்கைகளை அவதானித்தல் , சிறுபான்மை விவகாரம் குறித்த பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதை ஊக்குவித்தல் போன்ற விடயங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் மத்தியஸ்த செயற்பாடு கலந்துரையாடல்கள் தேசிய மட்ட விவாதங்கள் என்பன இன, மற்றும் மத பதற்றங்களை தவிர்ப்பதற்கு நடைமுறைப்படுத்த வேண்டும்.
பரிந்துரைகள்
சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கான ஒரு பொறிமுறை உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
அனைத்து சிறுபான்மை மக்களின் மதஸ்தலங்கள் பாரிம்பரிய இடங்கள், முழுமையாக பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
அரசியலமைப்பின் சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான வலுவான சுயாதீன ஆணைக்குழு நிறுவப்படவேண்டியது அவசியமாகும்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனியாக நீக்குவதுடன் புதிய மாற்று சட்டத்தை சர்வதேச தரத்துடன் முன்னெடுக்கவேண்டும்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து விரைவாக அவர்களை விடுவிப்பதற்கும் இல்லாவிடின் வழக்குத் தாக்கல் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தற்போது வடக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 6124 ஏக்கர் காணிகளையும் மீளளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான ஐ.நா.வின் விசேட அறிக்கையாளரின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துங்கள்,
2017 ஆம் ஆண்டு காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை சரியான முறையில் நிறுவவேண்டும்.
அனைத்து தனிப்பட்ட சட்டங்களும் குறிப்பாக 1951 ஆம் ஆண்டு முஸ்லிம் திருமணம் மற்றும் விகாரத்து சட்டமூலம் சர்வதேச மனித உரிமை தரங்களுக்கமைய முஸ்லிம் சமூகம், மற்றும் முஸ்லிம் பெண்களின் ஆலோசனையுடன் மீளாய்வு செய்யப்படவேண்டும்.
விடிவெள்ளி.