எம்.ரீ.ஹைதர் அலி-
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் அவர்களின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதிக்கீட்டிலிருந்து காத்தான்குடி அஸ்-ஷூஹதா பாடசாலைக்கு ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கும் நிகழ்வு 2016.10.17ஆந்திகதி பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்தங்கிய நிலையில் காணப்படும் பாடசாலைகளின் தேவைகளைக் கண்டறிந்து அம்மாணவர்களின் கல்வியினை மேம்படுத்தும் நோக்கில் மாகாண சபை உறுப்பினரினால் முன்னெடுக்கப்படும் பல்வேறு உதவித்திட்டத்தின் ஒரு கட்டமாகவே அஸ்-ஷுஹதா பாடசாலையின் மிக நீண்டகால தேவையாக காணப்பட்ட இவ்ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வின்போது உரையாற்றிய மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக்
மாணவர்களின் கல்விக்கு வறுமை எந்தவொரு சூழ்நிலையிலும் தடையாக அமைந்துவிடக்கூடாது. எவ்வாறு என்றாலும் எமது பிள்ளைகளுக்கு குறைந்த பட்சம் உயர்தரம் வரையிலேனும் கல்வி கற்பிற்க வேண்டும். அதற்கு தடையாகவுள்ள வளப்பற்றாக்குறை மற்றும் ஏனைய காரணங்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தி அவற்றை நிவர்த்தி செய்யக்கூடிய அனைத்து விடயங்களை இன்ஷாஅல்லாஹ் எதிர்காலத்தில் மேற்கொள்வோம். பெற்றோர்களாகிய நீங்களும் உங்கள் பிள்ளைகளின் கல்வி மற்றும் ஒழுக்கம் தொடர்பாக அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டும்.
மேலும் தற்போது நடைபெற்று முடிந்த புலமைப்பரிசில் பரீட்சை போன்ற போட்டிப்பரீட்சைகளின் மிதமிஞ்சிய போட்டித்தன்மை காரணமாக சிறார்கள் அதிகளவான உளரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். ஆகவே பெற்றோர்களாகிய நாம் எமது கௌரவத்திற்காக பிள்ளைகளின் மனதினை புண்படுத்திவிடக்கூடாது. அத்தகைய பரீட்சைகளில் சித்தியடையாத மாணவர்களை உளரீதியாக நோவினை செய்யாமல், தோல்விகளின் போது மனமுடைந்துவிடாமல் சுதந்திரமாக கல்வி கற்பதற்குரிய சூழலொன்றை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் சிறந்த எதிர்கால சமுதாயம் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டும் என்று தெரிவித்தார்.