கவிஞர் அஸ்மின் பாடல் எழுதியுள்ள 'கரிச்சான் குருவி'

விஜய் ஆண்டனியின் 'நான்' திரைப்படத்தில் 'தப்பெல்லாம் தப்பேயில்லை' பாடலை எழுதி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின். ஜிப்ரான் இசையில் 'அமரகாவியம்' படத்தில் இவர் எழுதிய 'தாகம் தீர கானல் நீரை பாடலுக்காக 9 ஆவது 'எடிசன்' திரைப்பட விழாவில் சிறந்த வெளிநாட்டு பாடலாசிரியர் விருதினை பெற்றார்.

'காதல்' சுகுமாரின் இயக்கத்தில் ஸ்ரீகாந்தேவா இசையில் வெளிவந்த 'சும்மாவே ஆடுவோம்' திரைப்படத்தில் இவர் எழுதிய ''முத்து முத்து கருவாயா'' பாடல் அஸ்மினுக்கு மிப்பெரிய வெற்றிப்பாடலாக அமைந்தது.

அதன் பின்னர் இவ்வாண்டு 10 படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். அதில் 4 திரைப்படங்களுக்கு அனைத்துப்பாடலும் இவர் எழுதியுள்ளார்.

அந்தவகையில், இவர் பாடல் எழுதி மிக விரைவில் வெளிவரவுள்ள திரைப்படம்தான் 'கரிச்சான் குருவி'. இயக்குனர் பாலாவிடம் பல ஆண்டுகள் உதவி இயக்குனராக பணியாற்றிய கண்ணன் ராஜமாணிக்கம்தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரஹ்மானிடம் பணியாற்றிய தாஜ்நூர் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். 'இந்த படத்தில் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. 'ஏஞ் சண்டாளனே' எனத்தொடங்கும் பாடலை கவிஞர் அஸ்மின் எழுதியுள்ளார். ஏனைய பாடல்களை அமரர் நா.முத்துக்குமார், தனிக்கொடி, தமயந்தி, மீனாட்சி சுந்தரம், கலீல் ஆகியோர் எழுதியுள்ளனர்.

மண்வாசனை மிக்க கிராமிய காதல் காவியமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மனதை உருக்கும் படியாக அமைந்துள்ளதாக இயக்குனர் தெரிவித்தார்.

இப்படத்தில் நாயகனாக சந்தோஷ் சரணவனன் அறிமுகமாகின்றார். நாயகியாக 'டூரிங்ஸ் டாக்கிஷ்' படத்தில் நடித்த சுனு லட்சுமி நடித்துள்ளார். அவர்களோடு 'நண்டு' ஜெகன், கோவை சரளா, செண்ட்டராயன், டி.பி கஜேந்திரன், ஆர்.வி உதயகுமார், 'நான் கடவுள்' ராஜேந்திரன், ஜெரால்ட்,என்.இளங்கோ, உமா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்தின் வசனம் 'ஆச்சர்யா' ரவி, ஒளிப்பதிவு ராஜதுரை, படத்தொகுப்பு கோபி கிருஷ்ணா, நடனம் கிஷோர், சண்டைப்பயிற்சி ஆக்சன் பிரகாஷ், மக்கள் தொடர்பு நிகில் முருகன்.

'கரிச்சான் குருவி' உருவத்தில் காகம் போன்ற தோற்றமுடைய இரட்டை வால்களை கொண்ட கிராமத்து பறவை.கரிச்சான் குருவிக்கு பயம் என்பதே துளியும் கிடையாது. இது தன்னைவிட உருவத்திலும் பலத்திலும் பெரிதான காகம், கழுகு, பருந்து போன்ற பறவைகளைத் துரத்தித் துரத்தி விரட்டும். தனது இணையில் ஒன்று இறந்துவிட்டால் அந்த நொடியே மற்றயதும் இறந்துவிடுவது இப்பறவையின் சிறப்பாகும்.

இப்படத்தின் இசை வெளியீடு மிக விரைவில் நடைபெறவுள்ளது. இலங்கை மண்ணில் இருந்து தமிழ் சினிமாவில் பாடல் எழுதிக்கொண்டிருக்கும் கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு இந்தப்படமும் வெற்றிப்படமாக அமைய நாமும் வாழ்த்துவோம்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -