கடற்படையினரால் பயன்படுத்தப்பட்டு வரும் முசலிப் பிரதேச செயலகப் பிரிவின் கீழான விவசாய நிலங்களை மீள ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டிஆரச்சி உத்தரவிட்டுள்ளார்.
கைத்தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று மாலை (26) பாதுகாப்பு அமைச்சின் செயலாளரைச் சந்தித்து, கடற்படையினர் பயன்படுத்தி வரும் விவசாயிகளுக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், உதவிச் செயலாளர்கள், வனபரிபாலனத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் மஹிந்த செனவிரத்ன, முசலிப் பிரதேச செயலாளர் கேதீஸ்வரன். கைத்தொழில், வர்த்தக அமைச்சரின் இணைப்புச் செயலாளர் இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் மற்றும் இராணுவ உயரதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.
முசலிப் பிரதேசசெயலகப் பிரிவுக்குட்பட்ட பாலைக்குழி மற்றும் மறிச்சுக்கட்டி பிரதேசங்களில், பூர்வீகமாக வாழ்ந்த விவசாயிகளின் காணிகளையே கடற்படையினர் பயன்படுத்தி வருகின்றனர். 1990 ஆம் ஆண்டு இந்த மக்கள் வெளியேற்றப்பட்டு தென்னிலங்கைக்குச் சென்றதனால், அவர்கள் தமது காணிகளை செய்கை பண்ண முடியாமல் இருந்தது.
அந்தக் காலகட்டத்தில் நாட்டின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, அந்தப் பிரதேசங்களில் படையினர் நிலைகொண்டிருந்ததனர். இதனால் அவர்கள் தமது தேவைக்காக அண்மித்த வயல் நிலங்களையும் கையகப்படுத்தி இருந்ததனர்.
தற்போது மக்கள் தமது சொந்த இடங்களுக்கு மீளத்திரும்பி வருகின்றனர். அவர்கள் தமது வாழ்வாதாரத் தேவைக்காகத் தமது நிலங்களை பயன்படுத்த முயற்சிக்கின்றனர். எனினும், இராணுவம் இதற்கு விட்டபாடில்லை. அங்கே நிலைகொண்டிருக்கும் இராணுவத்தினர் தமது இருப்புக்குத் தேவையான நிலங்களை விட மேலதிகமாக வைத்திருக்கும் காணிகளை விடுவித்து, மக்களிடம் கையளிப்பதே முறையானதென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் வியாயடிக்குளத்தில் கீழுள்ள காணிகளிலும், பொதுமக்கள் 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் விவசாயத்தில் ஈடுபட்டனர். புலிகளினால் வெளியேற்றப்பட்டு தென்னிலங்கையில் வாழ்ந்த இந்த மக்கள், போர் முடிவின் பின்னர் 2009 ஆம் ஆண்டு மீளக்குடியேறத் தலைப்பட்ட போதும், பயிர் செய்வதற்கு நிலங்கள் இல்லாததால் மீண்டும் தாம் அகதியாக வாழ்ந்த பிரதேசங்களுக்குச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்பட்டிருப்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் மக்கள் செறிந்து வாழும் சிலாவத்துறைக் கிராமத்தின் மத்தியில் கடற்படை முகாம் போர்க்காலத்தில் அமைக்கப்பட்டு, அதனைச் சூழவுள்ள பொதுமக்களின் காணிகளும் இராணுவத்தினரால் உபயோகப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அமைச்சர் றிசாத், இது தொடர்பில் பாராளுமன்றத்திலும், அமைச்சரவையிலும் தாம் பலதடவைகள் சுட்டிக்காட்டியதையும் நினைவுபடுத்தினார்.
முசலிப் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் சிலாவத்துறை நகரத்திட்டமிடல் தொடர்பான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், நகரை அபிவிருத்திச் செய்து நவீனமயமாக்குவதற்குக் கடற்படை முகாம் பாரிய தடையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எனவே கடற்படையினர் தாம் முகாமிட்டுள்ள இடத்துக்கு மேலதிகமாக இருக்கும் பிரதேசங்களை விடுவித்து உதவுமாறும் வேண்டினார்.
பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளரிடம் இந்த விடயத்தை ஒப்படைத்த பாதுகாப்புச் செயலாளர், இது தொடர்பிலான உரிய அறிக்கை ஒன்றினை தமக்குச் சமர்ப்பிக்குமாறு கோரினார்.
மன்னார் நகரின் நுழைவாயிலுக்கு அருகில் அமைந்துள்ள கூட்டுறவுத் திணைக்களத்துக்குச் சொந்தமான கட்டிடத்தில் நீண்டகாலமாக இராணுவம் குடிகொண்டிருப்பதாகவும், அந்தக் கட்டிடம் பழைமையடைந்து போவதால், இதனைப் புனரமைத்து சகல வசதிகளுடன் கூடிய கூட்டுறவு நிலையமொன்றை அமைப்பதற்கு தாம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு உதவுமாறு அமைச்சர் கூட்டத்தில் வேண்டினார். ஏற்கனவே இந்தக் கட்டிடம் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதும், இன்னும் அது நடைபெறவில்லை.
கட்டிடத்தைப் புனரமைத்து கூட்டுறவு நிலையமொன்றை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. எனவே, தமது கோரிக்கையைச் சாதகமாகப் பரிசீலிக்குமாறு அமைச்சர் றிசாத் விடுத்த வேண்டுகோளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டிஆரச்சி ஏற்றுக்கொண்டார். தனது அமைச்சின் மேலதிகச் செயலாளரைக் கொண்ட அதிகாரிகளின் குழுவொன்றை இந்த விடயத்தை அவசரமாகப் பரிசீலித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவர் பணிப்புரை விடுத்தார்.